2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த தனது விசாரணை நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் இன்று சிபிஐ தாக்கல் செய்தது. ஆனால் இந்த விவகாரத்தில் ராஜாவின் பங்கு குறித்து ஒரு வார்த்தை கூட அது தெரிவிக்கவில்லை.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக மத்திய அமலாக்கப் பிரிவு படு வேகமாக விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள அதே நேரத்தில் அவரது உதவியாளர்களை விசாரணைக்கு வருமாறு கூறியும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.மறுபக்கம் நீரா ராடியாவைக் கூப்பிட்டு பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளது.
ஆனால் சிபிஐ தரப்பில் ராஜா குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதை உச்சநீதிமன்றமே சமீபத்தில் கடுமையாக கண்டித்தது. ஏன் ராஜாவை இதுவரை சிபிஐ விசாரிக்காமல் அமைதியாக இருக்கிறது என்றும் அது சாடியது.
இந்த நிலையில் விசாரணை தொடர்பான நிலவர அறிக்கையை சிபிஐ இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் ராஜா குறித்து ஒரு வார்த்தை கூட இல்லையாம்.
இதுகுறித்து உச்சநீதிமன்ற வட்டாரத் தகவல்கள் கூறுகையில், கிட்டத்தட்ட 82,000 பக்கங்கள் கொண்ட 8000 ஆவணங்களை ஆய்வு செய்துள்ளோம். 43 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளோம். 17 நிறுவனங்களில் சோதனை நடத்தியுள்ளோம். இதில் தொலைத் தொடர்புத்துறை அலுவலகமும் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ராஜாவிடம் விசாரணை நடத்தப்பட்டதா அல்லது விசாரணை நடத்தும் திட்டம் உள்ளது என்பது குறித்து, ராஜோ குறித்த வேறு எந்த விவரத்தையும் சிபிஐ தெரிவிக்கவில்லையாம்.
மேலும் இதே தகவலைத்தான் கடந்த முறை நடந்த விசாரணையின்போதும் சிபிஐ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த விசாரணையின்போது ராஜாவை விசாரிக்காதது குறித்து சாடிய நீதிபதிகள் பெஞ்ச், 8000 ஆவணங்களை பரிசீலித்ததாக கூறுகிறீர்கள். பிறகு எதற்கு வெறும் புதரைப் போட்டு அடித்துக் கொண்டிருக்கிறீர்கள். சம்பந்தப்பட்டவர்களை குறிப்பாக ராஜாவை விசாரிக்காதது ஏன்.
சிஏஜி என்பது ஒரு சட்டப்பூர்வமான அமைப்பு. அரசால் அமைக்கப்பட்ட அமைப்பு. அதன் அறிக்கைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. அரசியல் சாசன சட்டப்படி அமைக்கப்பட்ட ஒரு அமைப்பின் அறிக்கையை உதாசீனப்படுத்துவதை ஏற்க முடியாது. மேலும், இப்படிப்பட்ட ஒரு அமைப்பு சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ள நிலையில் அந்த அமைச்சரிடம் முதலில் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறியது கண்டித்தக்கத்கது என்று காட்டமாக கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி