ஒன்றரை கோடி சிங்களனிடம் 12 கோடி தமிழ்த் தேசிய இனம் அடிபட்டு மிதிபட்டு வீடிழந்து நாடிழந்து ஏதிலிகளாக புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளை அண்டிப்பிழைக்கும் அவலநிலை உருவானதற்கு காரணம் சிங்களன் சிங்களனாக இருக்கிறான். தமிழன் தமிழனாக இல்லை. சாதிகளாக மதங்களாக பிரதேசங்களால் பிளவுபட்டுக் கிடக்கிறான் என, சீமான் தனது மாவீரர் தின அறிக்கையில் கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள சீமான், மாவீரர் தினத்தையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நவம்பர் 27 மாவீரர் நாள். மனித குல வரலாற்றில் மகத்தான தியாகங்களை புரிந்து வியத்தகு சாதனைகளை செய்து வித்தாகிப்போன எமது தமிழ்த்தேச விடுதலைப் போராளிகளை நினைவு கூறும் வீரத்திருநாள். வரலாற்றில் மூத்த தமிழ்க்குடிக்கு காலம் அளித்த கொடையான தமிழ்த்தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள் காட்டிய பாதையில் தம்மை மனமுவந்து ஒப்படைத்துக்கொண்ட அந்த விடுதலை வேங்கைகளை நினைவு கூறும் உன்னத நாள்.
“தமிழினம் சிதைந்து அழிந்து போகாமல்
பாதுகாப்பாக வாழ்வதற்கு போராடித்தான்
வாழவேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு
தமிழ்த்தேசம் தள்ளப்பட்டிருக்கிறது.
இந்த தேசிய பணியிலிருந்துஇ வரலாற்றின்
அழைப்பிலிருந்து தமிழ் இளம் பரம்பரை
ஒதுங்கிக்கொள்ளமுடியாது.
என்ற எமது தேசியத் தலைவரின் கூற்றுக்கமைய களமாடி விதையான 40 ஆயிரத்திற்கும் அதிகமான மாவீரர்களை போற்றும் புனித நாள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கரிகால் பெருவளத்தான் காவிரியில் கல்லனை எழுப்பியபோது தமிழன் பெருமை உலகை சென்றடையவில்லை. எமது முப்பாட்டன் ராசராசனும் அவனது அருமை மகன் ராசேந்திரனும் கடல்கடந்து சென்று பல தேசங்களை வென்றபோதும் தமிழனின் புகழ் உலகத்தாரால் கவனிக்கப்படவில்லை.கற்பனைக்கெட்டாத எமது மாவீரர்களின் ஈகமே “தமிழன் என்றோர் இனமுண்டு என்பதை உலகமறியச் செய்தது.
“உயிர் உன்னதமானது;
விடுதலை உயிரை விட உன்னதமானது.
என்றார் தேசியத்தலைவர். அந்த வகையில் விடுதலைக்காக உயிர்த்துறந்தவர்கள் நமது மாவீரர்கள்.
ஆண்ட பரம்பரை மாண்டு போவதா?
ஆளப்பிறந்தவன் அடிமையாவதா?
வீரத் தமிழினம் வீழ்ந்து போவதா?
வீனர்க் கூட்டம் நம்மை ஆள்வதா?
என்று நம்மில் எழும் இவ்வினாக்களுக்கு விடையாகத்தான் நம் மாவீரர்கள் உயிரைக் கொடையாக கொடுத்து போராடினார்கள்.
நாம் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காகவே
அவர்கள் சுவாசித்தக் காற்றை நிறுத்திக் கொண்டார்கள்.
அன்னைத் தமிழீழம் அன்னிய சிங்களனிடம் அடிமைப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே நமது வீரவேங்கைகள் உயிர் நீத்தார்கள்.
“அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரத்திற்காக சாவதே மேலானது.
என்ற கொள்கை முழக்கத்திற்கு ஏற்பவே அவர்கள் வீரச்சாவை தழுவிக் கொண்டார்கள்.
ஈழ விடுதலை என்பது ஈழத்தில் வாழ்கிற – வாழ்ந்த – புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கான விடுதலை மட்டுமல்ல – அது உலகெங்கும் பரவி வாழ்கின்ற 12 கோடி தமிழ்த் தேசிய இன மக்களுக்குமான தேச விடுதலை. ஒவ்வொரு தமிழனுக்குமான தாயக விடுதலை.
தமிழீழ விடுதலை என்பது தலைவர் பிரபாகரனின் சொந்த இலட்சியமோ தனிப்பட்ட விருப்பமோ அல்ல – ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இன மக்களின் ஆன்ம விருப்பத்தின் வெளிப்பாடே தனித்தமிழீழ அரசு. தமிழ்த் தேசிய மக்களின் அந்த ஆன்ம விருப்பத்தை நிறைவேற்றவே நமது தேசியத் தலைவர் “விடுதலைப்புலிகள் என்ற தமிழீழ தேசிய ராணுவத்தை கட்டமைத்து போராடினார்.
எமது மக்களின் இந்த விருப்பத்தினை புரிந்துகொள்ளாத சர்வதேச சமூகம் சிங்கள பேரினவாத அரசின் பொய்யான பரப்புரையினை நம்பி நமது தேசிய இன விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமென சித்தரித்து சிங்கள பேரினவாத அரசினுடைய அரச பயங்கரவாதத்திற்கு துணை நின்று நமது விடுதலைப் போராட்டத்தை நசுக்கியது.
தற்பொழுது தமிழீழ விடுதலைப் போர் வரலாற்றுத் தேக்கமொன்றில் வந்து நிற்கிறது. இனத்தின் விடியலுக்காகப் போராடிய விடுதலைப்புலிகள் யுத்தகளத்தில் வீழ்த்தப்பட்டுள்ளனர். இது உலகம் முழுவதும் போராடும் ஒடுக்கப்பட்ட மக்கள் அமைப்புகளின் மீது விழுந்த மிகப் பெரிய அடியாகும். இந்த பின்னடைவுக்கான புறக்காரணங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் முக்கியமானவையாக சிங்கள அரசின் இனவாதத்திற்கு இந்திய சீன ஏகாதிபத்தியங்களின் உதவி மேற்கத்திய நாடுகளின் ஆதரவு. ஐ.நா.சபையின் பொறுப்பற்ற தன்மை ஆகியவையாகும். அதிலும் குறிப்பாக விடுதலைப் போராட்டம் இன்று வந்தடைந்திருக்கும் தேக்கத்திற்கு மேற்கத்திய நாடுகள் பின்னணியில் இருந்து பெருமளவு இலங்கை அரசுக்கு உதவியிருக்கின்றன.
நார்வே அரசை நடுநிலையாகக் கொண்டு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே பெருமளவிலான நாடுகள் விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கம் என்று கூறித் தடைவிதித்து. புலிகளின் பலத்தைப் பெருமளவு குறைத்தன. ஐ.நா.சபையோ இலட்சக்கணக்காகன மக்கள் மீது கிளஸ்டர் குண்டுகள், பாஸ்பரஸ் குண்டுகள் பொழிந்து தாக்கப்பட்டபோது அகதிகளாய் தமது வாழ்விடங்களிலிருந்து பெயர்க்கப்பட்;ட போது அங்கங்கள் சிதறி ஊனமடைந்து துடித்தபோது பசியில் சிறுகச் சிறுகச் செத்து மடிந்தபோது வெறுமென அறிக்கைகள் விடுவதைத் தவிர வேறு எதையும் செய்யாமல் ‘போர் முடிந்தது.’ என்று இலங்கை அரசாங்கம் அறிவித்தபோது மட்டும் பொது வெளிக்கு வருகிறது.
தொடர்ச்சியான 30 வருடப் போரின் இறுதியில் இலட்சக்கணக்கான மக்களின் படுகொலைக்குப் பின்னர் பல்லாயிரம் போராளிகளின் உயிரிழப்புக்குப் பின்னர் இலட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளிலும் அகதிகளாக விரட்டியடிக்கப்பட்ட பிறகு போரின் கொடுமைகளைக் கண்ணால் பார்த்து மனம் பேதலித்து சில இலட்சக்கணக்கானவர்கள் எஞ்சியிருக்கும் ஒரு மண்ணில் அவர்களுக்கான நியாயம் எப்படி யாரால் வழங்கப்படப் போகிறது?
“எமது தேச விடுதலை என்பது எதிரியால்
வழங்கப்படும் சலுகையல்ல. அது ரத்தம்
சிந்தி உயிர் விலை கொடுத்து போராடிப்
பெறவேண்டிய புனித உரிமை.
என்ற நமது தேசியத்தலைவர் கூற்றுக்கமைய எண்ணற்ற உயிர் விலையினை கொடுத்தே உலகின் மனசாட்சியை சற்றேனும் அசைத்துப்பார்க்கும் நிலை இன்று எழுந்துள்ளது.
உலகம் முழுவதும் பரவலாக வாழும் தமிழர்கள் இன்று வீதிக்கு வந்து தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள.; இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையாக அறியப்பட்டு வந்த தமிழர்களின் பிரச்சனை இன்று சர்வதேசம் முழுவதும் பேசப்படும் பெருளாக மாறி இருக்கிறது. போராட்டங்கள் வேறு வடிவத்திற்கு மாறி இருக்கிறது. ஈழத்தமிழர் பிரச்சனையில் பின்னடைவிலும் இது நமக்கு சாதகமான விசயமாகும். வன்னிக்காட்டில் நடந்த யுத்தம் இன்று உலகின் வீதிகளில் எதிரொலிக்கிறது.
“போராட்ட வடிவங்கள் மாறலாம்;
போராட்ட இலட்சியங்கள் மாறுவதில்லை.
என்ற நமது தேசியத்தலைவர் கூற்றுக்கமையவும்.
“யுத்தம் என்பது இரத்தம் சிந்துகிற அரசியல்;
அரசியல் என்பது இரத்தம் சிந்தாத யுத்தம்.
என்ற புரட்சியாளர் மாவோ சொன்னதைப் போலவும் நாம் இரத்தம் சிந்தாத அரசியல் யுத்தத்திற்க்கு தயாராக வேண்டிய தருணம் வந்துவிட்டது.
ஒன்றரை கோடி சிங்களனிடம் 12 கோடி தமிழ்த் தேசிய இனம் அடிபட்டு மிதிபட்டு வீடிழந்து நாடிழந்து ஏதிலிகளாக புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளை அண்டிப்பிழைக்கும் அவலநிலை உருவானதற்கு காரணம் சிங்களன் சிங்களனாக இருக்கிறான். தமிழன் தமிழனாக இல்லை. சாதிகளாக மதங்களாக பிரதேசங்களால் பிளவுபட்டுக் கிடக்கிறான்.
இந்த நிலையிலிருந்து விடுதலையடையாமல் இனத்தின் விடுதலை சாத்தியமில்லை. நாம் தமிழர் என்ற உணர்வை பெற்று பேரினமாக ஒன்றிணையாத வரை நம் விடுதலையை வென்றெடுக்க வாய்ப்பில்லை.
“தமிழர் ஒன்றானால் வாழ்வு பொன்னாகும். இல்லையேல் மண்ணாகும்.
என்பதனை இந்த நிலையிலாவது புரிந்து கொள்ள வேண்டும். நீ பெரியவன் நான் பெரியவன் என்ற வேறுபாட்டை களைந்து இனம் பெரிதுஇ இனத்தின் மானம் பெரிது என்ற எண்ணம் வளர வேண்டும்.
இன்றைக்கு இலங்கை ஒரு இனப்படுகொலை செய்த நாடு – போர்க் குற்றம் புரிந்த நாடு என்ற உண்மையை பல்வேறு நாடுகள் புரிந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவால் ஐ.நா.அவை இலங்கை போர்க்குற்றம் குறித்த ஒரு விசாரணை குழுவை நியமித்திருக்கிறது. நாம் நம்மை இந்தப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு அனைத்து ஆதாரங்களையும் திரட்டி ராசபட்சேவுக்கு தண்டணை வாங்கித்தர வேண்டும் என்ற உறுதி ஏற்கவேண்டும். இதன் மூலம் தமிழீழ விடுதலைக்கான சர்வதேச ஆதரவு சக்திகளை திரட்ட வேண்டும். எம் தமிழின மக்களைக் கொன்றொழித்தவர்களுக்கு இந்தியாவில் துணை நின்ற சக்திகளை விரைவில் வர உள்ள சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்த அணிவகுப்போம் என்ற சபதம் ஏற்க வேண்டும்.
மேலும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க போராடவேண்டும். புலிகள் மீதான தடை என்பது தமிழ்த் தேசிய இனத்தின் மீது சுமத்தப்பட்ட ஒரு அவமானமாகும். இந்த தடையால் வாழ வழியின்றி புலம்பெயர்ந்து வருகிற எமது மக்களை ஏதிலிகளாக ஏற்க மறுக்கிற ஒரு நிலை நீடிக்கிறது. எனவே தடையை நீக்கும் வரை தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
உன்னதமான இலட்சியத்திற்காக உயிர்த் தியாகம் செய்த நம் மாவீரர்களை நினைவு கூறும் இன்றைய நாளில் நாம் ஏற்றுகிற ஈகச்சுடர் மீது சத்தியம் செய்து உறுதி ஏற்க வேண்டும். இதுவே அளப்பரிய அர்ப்பணிப்பு செய்த அந்த தியாக சீலர்களுக்கு நாம் செலுத்துகிற உண்மையான வீரவணக்கமாக அமையும்.
நமது தேசியத் தலைவர் கூறியது போல
“சத்தியத்திற்காக சாகத் துணிந்து விட்டால்
சாதாரணமானவனும் சரித்திரம் படைக்க முடியும்.
அவ்வாறு சாகத்துணிந்து சரித்திரமானவர்கள் நம் மாவீரர்கள்.
எங்கள் மாவீரர்களே!
உங்கள் இரத்தத்தால் நமது தமிழினத்தின் விடுதலை
வரலாறு மகத்துவம் பெறுகிறது.
உங்கள் இலட்சிய நெருப்பில் தமிழினப் போராட்டம்
புனிதம் பெறுகிறது.
அளப்பரிய உங்கள் தியாகத்தால் தமிழ்த்தேசியம்
உருவாக்கம் பெறுகிறது
உங்கள் நினைவுகளை போற்றுவதால் எங்கள்
உறுதி மேலும் மேலும் உறுதியாகிறது.
தாயகக் கனவுடன்
சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே!
எம் விடுதலைக்கான
வீர விதைகளாக
விழுந்த மாவீரர்களே!
எந்த இலட்சியத்தை எம்மிடம் கையளித்து சென்றீர்களோ அதனை நிறைவேற்றும் வரை உறுதியாக நின்று இறுதிவரை போராடுவோம் என்ற உறுதியோடு எங்களின் வீர வணக்கத்தை செலுத்துகிறோம் .
வீரவணக்கம்! வீரவணக்கம்!!
எங்கள் மாவீரர்களே வீரவணக்கம்!
நீங்கள் சிந்திய குருதி
ஈழம் மீட்பது உறுதி!
இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி