இப்போதோ, அப்போதோ என்று தொங்கிக்கொண்டிருந்த கொச்சி ஐபிஎல் அணியின் கதை ஒரு வழியாக முடிந்து போய் விட்டது. அந்த அணியின் முதலீட்டாளர்கள் ஒட்டுமொத்தமாக வாபஸ் வாங்கி விட்டனர். இதை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் தெரிவித்து விட்டனர்.
ஏன் உங்களது அணியை ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு கொச்சி ஐபிஎல் அணிக்கு கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. திங்கள்கிழமைக்குள் தனது பிரச்சினைகளைத் தீர்த்து விட்டு வருமாறும் அதற்கு கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதற்கு முன்பாகவே கொச்சியின் கதையை முடித்து வைத்து விட்டனர் அந்த அணியின் முதலீட்டாளர்கள்.
கொச்சி அணியிலிருந்து தாங்கள் விலகுவதாக அவர்கள் அறிவித்து கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங் மனோகருக்கும் இதை முறைப்படி கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் கொச்சி அணி ரத்தாவது உறுதியாகி விட்டது. இதைத் தொடர்ந்து அந்த அணிக்குப் பதில் விரைவில் புதிய அணியை கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்து அறிவிக்கும். இதற்காக புதிதாக டெண்டர் விடப்படும். அதுதொடர்பான முடிவு நவம்பர் 28ம்தேதி நடைபெறும் ஐபிஎல் பொதுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும்.
கொச்சி அணியின் முதலீட்டாளர் குழுவில் இடம் பெற்றிருந்த ஆங்கர் எர்த், பரினி என்டர்பிரைசஸ், ரோசி ப்ளூ, பிலிம்வேவ் ஆகியவற்றுக்கு மொத்தம் 74 சதவீத பங்குகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 26 சதவீத பங்குளை அணியின் உரிமையாளர்களான கெய்க்வாட் குடும்பத்தினர் வைத்திருந்தனர். அதாவது சைலேந்திரா கெய்க்வாட் மற்றும் அவரது தம்பி ரவி கெய்க்வாட் மற்றும் அவர்களது பெற்றோர். இந்த உரிமையாளர்கள் அனைவரும் ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் நிறுவனத்தின் சார்பாக கொச்சி அணியை வாங்கியிருந்தனர். இதற்குத்தான் சசி தரூர், தனது அப்போதைய காதலியான சுனந்தா புஷ்கர் மூலம் பெருமளவில் உதவிகள் செய்தார் என்று அப்போது சர்ச்சை வெடித்தது.
ஏலம் எடுத்து எல்லாம் முடிந்த பின்னர் திடீரென கெய்க்வாட் குடும்பத்திற்குள் பிளவு ஏற்பட்டு இரண்டாக நின்றனர். இதையடுத்தே உங்களை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு ரெண்டஸ்வஸ் நிறுவனத்திற்கு கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. காலக்கெடுவும் விதிக்கப்பட்டது. ஆனால் சண்டை முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை. இதையடுத்தே தற்போது முதலீட்டாளர்கள் கூண்டோடு விலகி விட்டனர்.
நினைத்ததை சாதித்து விட்டனர் -தரூர் புலம்பல்:
இதற்கிடையே கொச்சி அணியின் கதை முடிந்துள்ளது குறித்து ட்விட்டர் மூலம் வேதனை வெளியிட்டுள்ளார் தரூர். இதுகுறித்து அவர் கூறுகையில்,
கனவு இப்போது முடிவுக்கு வந்து விட்டது. யாரெல்லாம் கேரளாவுக்கு ஒரு ஐபிஎல் அணி வந்து விடக் கூடாது என்று தீவிரமாக இருந்தார்களோ அவர்கள் இன்று வென்று விட்னர். இந்த அணி வர வேண்டும் என்று பாடுபட்ட நாங்கள் அதற்காக பெரும் விலையைக் கொடுத்ததுதான் மிச்சம் என்று கூறியுள்ளார் தரூர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி