இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட நிலையில் சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளை கேட்கவும், நியாய விசாரணை கோரவும் கூட தலைவர்கள் இல்லாத சூழல் இலங்கையில் நிலவுவதாக தி எகானமிஸ்ட் பத்திரிகை கூறியுள்ளது.
பிரிட்டிஷ் பத்திரிகையான தி எகானமிஸ்ட் தனது இந்த வார இதழில் மகிந்த ராஜபக்சே பதவி ஏற்பு குறித்த கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில், “விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட நிலையில், தமிழர்கள் இரண்டாம் தரக் குடிகளாகவே நடத்தப்படுகிறார்கள். மிகுந்த கர்வத்துடன் நடந்து கொள்ளும் சிங்களர்கள், தங்களுக்கு இணையானவர்களாக தமிழர்களை மதிக்காத போக்குதான் இன்றைக்கு நிலவுகிறது.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற பகுதிகளுக்கு அதிகாரங்கள் பரிந்தளிக்கப்படவேண்டும் என்று கூறிவந்த ராஜபக்சே அரசுக்கு, இப்போது அப்படி ஒரு எண்ணம் இருப்பதாதகவே தெரியவில்லை.
தமிழர் பிரதேசங்களில் இராணுவத்தின் துணையுடன் சிங்களர்களை குடியேற்றுவதிலேயே இலங்கை அரசு குறியாக உள்ளது. இந்த அராஜகத்தை எதிர்த்து நிற்பதற்கு அஞ்சி நிற்கிறார்கள் தமிழர்கள். அவர்களுக்காக பேசவும் ஆட்களில்லை.
போரின் இறுதிநாட்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்களை இராணுவத்தினர் கொன்று குவித்தனர். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுதந்திரமான, நேர்மையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை அழுத்தமாக முன்வைக்கக் கூட தமிழர் தரப்பில் தலைவர்கள் இல்லை. ஐநா சபை கூட இந்த விஷயத்தில் தீவிரமான மனநிலையில் இல்லை…”, என்று கூறியுள்ளது.
தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் போக்கு குறித்து தொடர்ந்து தி எகானமிஸ்ட் பத்திரிகை செய்து வெளியிட்டு வருகிறது. இதனால் அந்தப் பத்திரிகை விற்பனையை இலங்கையில் தடை செய்வதாக முன்பு இலங்கை அறிவித்தது நினைவிருக்கலாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி