யாழ்ப்பாணம்: நாவட்குழி பகுதியில் 20 ஆண்டுகளாக வசித்து வந்த நூற்றுக்கும் அதிகமான தமிழ்க் குடும்பங்களை அவர்களின் வீடுகளிலிருந்து ஓட ஓட விரட்டியடித்தது சிங்கள ராணுவம். நேற்று காலை முதல் அந்த இடங்களில் சிங்கள குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன.
இதனால் ஏராளமான தமிழர்கள் சொந்த வீடுகளை இழந்து சாலையோரங்களில் தவிப்பதாக தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நாவட்குழி பகுதியில் 300 வீடுகளைக் கொண்ட குடியிருப்புப் பகுதியில் 1992-ம் ஆண்டு முதல் தமிழர்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இப்போது இங்குள்ள தமிழ்க் குடும்பங்களை ராணுவம் நேற்று விரட்டியடித்தது. மேலும் இங்கு யாருக்கும் வழங்கப்படாமல் இருந்த வீடுகளையும் சிங்களர்களுக்கே கொடுத்தனர் ராணுவத்தினர்.
புதிய வீடுகளை இந்தப் பகுதியில் கட்டிக் கொள்ள சிங்களக் குடும்பங்களுக்கு கட்டுமானப் பொருள்களையும் இலவசமாக வழங்கியுள்ளது இலங்கை அரசு. மேலும் 70 சிங்களக் குடும்பங்கள் தென்னிலங்கையிலிருந்து வரவழைக்கப்பட்டு அவர்களுக்கும் தமிழர்களின் வீடுகளை தாரை வார்த்துள்ளனர்.
வீடுகளை உடனடியாக காலி செய்து கொண்டு ஓடாவிட்டால், சுட்டுத் தள்ளுவோம் என்று சிங்கள ராணுவத்தினர் தமிழர்களை மிரட்டியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியையே காலி செய்துவிட்டு ஓடிவிட்டனர் அனைத்து தமிழ்க் குடும்பங்களும்.
இவர்கள் ஏற்கெனவே போரினால் தங்கள் உடமைகளை விட்டுவிட்டு நாவட்குழிக்கு இடம்பெயர்ந்தவர்கள். இரண்டு மூன்று குடும்பங்களாக சேர்ந்து ஒரு வீட்டில் நெருக்கியடித்து வசித்து வந்தனர். இப்போது அந்த வீடும் பறிபோய்விட, தங்கள் சொந்த ஊரிலிருந்த சொத்துக்களையும் ராணுவம் வளைத்துக் கொண்டதால் எங்கு செல்வதென தெரியாமல் தவிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, தங்களிடம் மிச்சமுள்ள நிலங்களும் பிடுங்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தவிக்கின்றனர் யாழ்ப்பாணம் தமிழர்கள்.
இந்த சிங்கள குடியேற்றத்துக்கு முழுக் காரணமும் அமைச்சர் விமல் வீரவன்ச என்று கூறப்படுகிறது. “இலங்கை முழுவதும் சிங்களர்களின் உடமை. தமிழர்களின் நிலங்களைப் பிடுங்கி சிங்களர்களுக்கு தருவதை யாராலும் தடுக்க முடியாது” என்று ஏற்கெனவே இவர் சவால் விட்டது நினைவிருக்கலாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி