அரசியல்,முதன்மை செய்திகள் அல்ஜசீராவிற்கு இருக்கும் அக்கறை ஏன் தமிழ் ஊடகங்களுக்கு இல்லை…

அல்ஜசீராவிற்கு இருக்கும் அக்கறை ஏன் தமிழ் ஊடகங்களுக்கு இல்லை…

aljazeera

பெரும் மனித உரிமை மீறல்களுடன் சிறீலங்காவில் போர் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் போதும் கடந்த வருடம் மே மாதத்தின் பின்னர் எந்த ஒரு படைச் சிப்பாயும் சிறீலங்காவில் தண்டிக்கப்படவில்லை. சிறீலங்கா அரசு தனது சொந்த வரலாற்றை தானே எழுதுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக அல்ஜசீரா ஊடகம் நேற்று (10) வெளியிட்ட செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது.

அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

தமிழ் பொதுமக்கள் மீது சிறீலங்கா படையினர் மேற்கொண்ட வன்முறைகள் தொடர்பான புகைப்படங்கள் எமது ஊடகத்திற்கும் கிடைத்தன. இந்த குற்றங்களை அவர்கள் போரின் இறுதி நாட்களில் மேற்கொண்டிருந்தனர்.

அந்த புகைப்படங்களில் பல வகையான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. சில சடலங்களின் கண்கள் கட்டப்பட்டிருந்தன, சிலவற்றில் கைகள் கட்டப்பட்டிருந்தன. கொல்லப்பட்டவர்கள் தலையில் சுடப்பட்டிருந்தனர். உழவு இயந்திரங்களின் பெட்டிகளினுள் சடலங்கள் குவிக்கப்பட்டிருந்தன.

கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த போரின் இறுதி மாதங்களில் அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன. ஒரு புகைப்படத்தில் வரிசையாக அடுக்கப்பட்ட சடலங்களில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகனின் சடலமும் காணப்பட்டது.

இளம் பெண்களின் நிர்வாணமான சடலங்களும் சில புகைப்படங்களில் காணப்பட்டன. அதில் சிறுவர்களின் சடலங்களும் அடங்கியிருந்தன. இந்தப் புகைப்படங்களை உண்மையானது தானா என ஆய்வு செய்வது எமக்கு முடியாத காரியம். ஆனால் இந்த படங்களை சிறீலங்கா படையில் உள்ள சிலரே வழங்கியதாக அதனை வழங்கிய தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஏன் இவ்வளவு தாமதமாக இது வெளிவந்துள்ளது என்பது தெளிவற்றது.

சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்ட சமயத்தில் தான் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அவரின் வருகையை தமிழ் மக்கள் புறக்கணித்திருந்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை சிறீலங்கா அரசு தொடர்ந்து நிராகரித்து வருகின்றது.

தமது அரசு சுயாதீன விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவா விஜயசிங்கா தெரிவித்துள்ளார். அவர் முன்னர் சிறீலங்கா மனித உரிமை அமைச்சின் செயலாளராக இருந்தவர்.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கான அழுத்தங்களை வெளிநாடுகள் ஏற்படுத்த வேண்டும் என அவுஸ்திரேலியாவின் தமிழ் காங்கிரஸ் இன் பேச்சாளர் கலாநிதி சாம் பாரி தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவுடன் தற்போது வர்த்தக, உல்லாசப்பயணத்துறை போன்ற பொருளாதார ஒத்துழைப்புக்களில் ஈடுபட்டுவரும் நாடுகள் அதனை மேற்கொள்ள வேண்டும். சிறீலங்கா மீதான பயணத்தடைகளையும், வர்த்தகத் தடைகளையும் அவர்கள் கொண்டுவரவேண்டும். அதன் மூலம் ஒரு அனைத்துலக சுயாதீன விசாரணைக்கு சிறீலங்கா அரசை இணங்க வைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளை முறியடித்த படையினரை தமது அரசு ஒருபோதும் தண்டிக்கப்போவதில்லை என சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற போரில் 7,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஆனால் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற அனைத்துலகத்தின் கோரிக்கையை சிறீலங்கா அரசு மீண்டும் மீண்டும் நிராகரித்து வருகின்றது. ஆனால் இந்த போரில் 20,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் சிறீலங்கா அரசு நல்லிணக்க ஆணைக்குழு என்ற தனது சொந்த குழு ஒன்றை அமைத்துள்ளது. ஆனால் அந்த குழுவானது சிறீலங்காவின் குற்றங்களுக்கு வெள்ளையடிக்கும் குழு என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த குழுவின் விசாரணைகளில் பங்குபற்ற அனைத்துலக மன்னிப்புச்சபை, அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்றவை மறுத்துள்ளன. அது அனைத்துலகத்தின் தரதரத்தை குறைந்த பட்சமேனும் கொண்டிருக்கவில்லை என அவை தெரிவித்துள்ளன.

தற்போது வெளிவந்துள்ள புகைப்படங்களும், ஒரு அனைத்துலகத்தின் விசாரணையை வலியுறுத்துவதாக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. சில புகைப்படங்கள் அண்மையில் வெளியாகிய நீதிக்குப் புறம்பான படுகொலை காணொளிக் காட்சிகளை ஒத்ததாக இருக்கின்றது.

சிறீலங்கா படையினர் தமிழ் இளைஞர்களை படுகொலை செய்யும் இந்த காட்சிகளை சிறீலங்கா அரசு நிராகரித்த போதும், அது உண்மையானது என தான் நம்புவதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் நீதிக்கு புறம்பான படுகொலைகள் தொடர்பான அதிகாரி பேராசிரியர் பிலப் அல்ஸ்ரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மே மாதத்தின் பின்னர் எந்த ஒரு படைச் சிப்பாயும் சிறீலங்காவில் தண்டிக்கப்படவில்லை. சிறீலங்கா அரசு தனது சொந்த வரலாற்றை தானே எழுதுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி