டாடா நானோவைக் கண்டு அதிசயித்த ஒபாமா, மிஷல் ஒபாமா
மும்பையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது டாடா நானோ கார் குறித்து அறிந்து அதிசயித்தார் அதிபர் ஒபாமா. அவருடைய மனைவி மிஷல் ஒரு படி மேலே போய் எனக்கு உடனே நானோவைப் பார்க்க வேண்டும் போல உள்ளது என்று ரத்தன் டாடாவிடம் கூற அவரும் உடனடியாக ஒரு காரை வரவழைத்து ஒபாமா தம்பதிக்குக் காட்டி மகிழ்ந்தார்.
மும்பையில் முகாமிட்டிருந்தபோது ஒபாமா இந்திய தொழிலதிபர்கள் மத்தியில் பேசினார். அந்த கூட்டத்தின்போது அவரிடம் ரத்தன் டாடா அறிமுகப்படுத்தப்பட்டார். அப்போது தனது மனைவி மிஷலிடம், இவர்தான் உலகின் மிகச் சிறிய, விலை குறைந்த காரை அறிமுகப்படுத்தியவர் என்று ஒபாமா மகிழ்ச்சியுடன் கூறினார். அதைக் கேட்டதும் மிஷல், நான் நானோ காரைப் பார்க்க விரும்புகிறேன், முடியுமா என்று ரத்தன் டாடாவிடம் வேண்டுகோள் வைத்தார்.
கண்டிப்பாக நிறைவேற்றுவதாக உறுதியளித்த ரத்தன், கூட்டம் முடிந்ததும் அடுத்த நாள் காலையே ஒபாமா தம்பதியினர் தங்கியிருந்த தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டலுக்கு (இதுவும் டாடாவின் ஹோட்டல் என்பது குறிப்பிடத்தக்கது) நானோ காரை வரவழைத்து நிறுத்தினார். காலையில் நானோ கார் நிற்பதைப் பார்த்து மகிழ்ந்தார் மிஷல். பின்னர் ஒபாமா தனது மனைவியுடன் காருக்குள் ஏறி அமர்ந்து அதை ரசித்துப் பார்த்தார்.
இதுகுறித்து டாடா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஒபாமா தம்பதிக்கு நானோ காரைக் காட்டியது உண்மைதான். இருவரும் மகிழ்ச்சியுடன் காரைப் பார்த்தனர். ஏறி அமர்ந்து ரசித்தனர். காரின் தொழில்நுட்பம் குறித்து அறிந்து வியப்பும் அடைந்தனர் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி