கர்நாடகத்தில் பாஜக அரசு, காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு ரூ.25 கோடி கொடுக்க முயன்றதாக புகார்கள் வந்துள்ளன. இதனால் பாஜகவும் ஊழல் தான் செய்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
ஜவுளி தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும், பருத்தி ஏற்றுமதியை தடை செய்யக் கோரியும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தேமுதிக சார்பில் திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்ட மேடை முன் பெண்கள் அதிகமாக திரண்டிருந்தனர். விஜயகாந்த் பேச தொடங்கியதும் கூட்டம் அப்படியே மேடை நோக்கி நகர ஆரம்பித்தது. இதனால் கூட்டத்தில் கடும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. குழந்தைகளுடன் வந்த பெண்கள் கதறினர்.
நெரிசலில் சிக்கிய பல பெண்கள் மயங்கி விழுந்தனர். நெரிசலில் சிக்கிய குழந்தைகளை தூக்கிக் மேடையில் ஏற்ற தொண்டர்களுக்கு விஜய்காந்த் உத்தரவிட்டார்.
மயங்கி விழுந்த பெண்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டது. நெரிசல் காரணமாக மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
பின்னர் பேசிய விஜய்காந்த், வெளி மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பனியன் நகராக திருப்பூர் விளங்கி வருகிறது. ஆனால் பஞ்சு, நூல் விலையேற்றம் காரணமாக பனியன் தொழிலையும் நடத்த முடியாமல் முதலாளிகள் திணறி வருகிறார்கள்.
மூலப் பொருளான பருத்தி, பஞ்சை ஏற்றுமதி செய்யக்கூடாது. அதற்கு தடைவிதிக்க வேண்டும். பருத்தியையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
காசுக்கு வந்த கூட்டம் என்னிடம் இல்லை. என்னை நம்பி வந்த கூட்டம் இது. நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சியை நடத்தி வருகிறேன்.
அத்வானி ஆட்சியில் லஞ்சம் இல்லை என்று கூறினேன். அதற்குள் பாஜகவுடன் கூட்டணி என்று சொல்கிறார்கள். ஆனால் அதே பாஜக அரசு, கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு ரூ.25 கோடி கொடுக்க முயன்றதாக புகார்கள் வருகின்றன. இந்தப் பணம் யாருடையது?. இது மக்களின் வரிப் பணம் தான். பாஜகவும் ஊழல் தான் செய்கிறது.
தேமுதிக யாருடன் கூட்டணி என்று எல்லோரும் கேட்கிறார்கள். நான் என்னை நம்பி வந்த மக்களை மட்டுமே நம்பிக்கொண்டு இருக்கிறேன். தேமுதிகவின் கொள்கையே `வறுமையை ஒழிப்போம்’ என்பது தான். விஜயகாந்துக்கு கொள்கை இல்லை என்று சொல்கிறார்கள். கொள்ளையடிக்கும் கொள்கை என்னிடம் இல்லை.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு தரப்படவில்லை. குழந்தைகளுடன் தாய்மார்கள் இந்த மேடைக்கு முன் கூடியுள்ளார்கள். தள்ளு முள்ளு சம்பவங்களினால் பெண்கள் மயங்கி உள்ளனர்.
போலீசார் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறார்கள். எனது கூட்டத்தை கெடுக்க பார்க்கிறார்கள்.
நான் விரைவிலேயே மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளேன். அந்த மாநாட்டில் குடும்பம், குடும்பமாக பிள்ளை, குட்டிகளுடன் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். நமக்கு நாமே பாதுகாப்பு என்பதைப்போல் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் உங்கள் அனைவருக்கும் நான் பாதுகாப்பு கொடுப்பேன் என்றார் விஜய்காந்த்.
பாஜகவுடன் கூட்டண் அமைக்க விஜய்காந்த் முயற்சிப்பதாக தகவல்கள் பரவிய நிலையில் அவர் அந்தக் கட்சியைத் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி