விராத் கோலி சதம் அடிக்க, யுவராஜ் சிங்கும், சுரேஷ் ரெய்னாவும் அரை சதத்தைக் குவிக்க இந்தியா, 7 பந்துகள் மீதமிருக்கையில், 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று பகலிரவுப் போட்டியாக விசாகப்பட்டனத்தில் 2வது ஒரு நாள் போட்டி நடந்தது.
இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 289 ரன்களைக் குவித்தது. ஆரம்பத்தில் மிக நிதானமாக ஆடிய ஆஸ்திரேலியா கடைசி ஓவர்களில் பின்னி விட்டது. அந்த அணியின் மைக்கேல் கிளார்க் 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேமரூன் 89 ரன்களை விளாசினார். இவர்கள் இருவரது ஆட்டம்தான் ஆஸ்திரேலியாவுக்கு நல்ல ஸ்கோரைத் தேடிக் கொடுத்தது.
இறுதியில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 289 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா.
பின்னர் இந்தியா தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகார் தவனும், முரளி விஜய்யும் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். ஷிகார் டக் அவுட் ஆனார். இது அவரது முதல் ஒரு நாள் போட்டியாகும். முரளி விஜய் அடித்து ஆட முயன்றபோது அவுட்டாக்கி விட்டனர் ஆஸ்திரேலியர்கள்.
ஆனால் பின்னர் வந்த விராத் கோலியும், யுவராஜ் சிங்கும் நங்கூரம் போல நின்று சரிவைத் தடுத்து ரன் குவிப்பில் குதித்தனர். குறிப்பாக கோலி பின்னி விட்டார். அபாரமாக ஆடிய அவர் 118 ரன்களைக் குவித்தார். ஒரு நாள் போட்டிகளில் இதுதான் அவருக்கு சிறப்பான ஸ்கோராகும்.
அதேபோல யுவராஜ் சிங்கும் நிதானித்தும், அடித்தும் ஆடி 58 ரன்களைக் குவித்தார்.
இருவரும் அவுட் ஆன பின்னர் ஆட்டத்தை சுரேஷ் ரெய்னா தன் பக்கம் திருப்பினார். அதிரடியாக ஆடிய அவர் 47 பந்துகளில் 71 ரன்களைக் குவித்து இந்தியாவின் வெற்றியை துரிதப்படுத்தினார். அவருக்குத் துணையாக செளரப் திவாரி ஆட்டமிழக்காமல் 12 ரன்களை எடுத்தார்.
இறுதியில், 48.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 292 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது.
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற வெற்றியை இந்தியா எட்டியுள்ளது.
விசாகப்பட்டனத்தில் இந்தியா சந்தித்துள்ள ஹாட்ரிக் வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு கடைசியாக இங்கு நடந்த போட்டிகளில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்காவை இந்தியா வீழ்த்தியுள்ளது
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி