இந்தியாவின் பங்குச் சந்தைகளில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors – FII) ஒரே நேரத்தில் பெருமளவிற்கு முதலீடு செய்ய முற்பட்டால் அப்போது இந்திய மைய வங்கி தலையிடும் என்று அதன் ஆளுநர் டி.சுப்பா ராவ் கூறியுள்ளார்.
சண்டிகரில் மத்திய வங்கிகள் வாரியத்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுப்பா ராவ், “எங்களுடைய கொள்கை தெளிவானது, நாங்கள் சூழ்நிலையை கவனித்துக் கொண்டிருக்கின்றோம். அந்நிய நிறுவன முதலீடுகள் ஒரே நேரத்தில் அதிகமாக வந்தாலோ அல்லது வெளியேறினாலோ அதனால் பொருளாதாரம் பாதிப்பிற்கு உள்ளாகும், அப்போது நாங்கள் தலையிட வேண்டியதிருக்கும்” என்று கூறியுள்ளார்.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்த ஒரு ஆண்டில் மட்டும் இதுவரை 22 பில்லியன் டாலர்களை (ரூ.1 இலட்சம் கோடி) இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்துள்ளனர். இது கடந்த ஆண்டு முழுவதிலும் செய்யப்பட்ட முதலீடான 17 பில்லியனை விட மிக அதிகமாகும். அந்நிய நிறுவன முதலீட்டாளர்களால் இந்தியப் பங்குச் சந்தை 32 மாதங்கள் காணாத அளவிற்கு உயர்ந்தது.
அமெரிக்க டாலர்களில் இந்த முதலீடு அதிகரித்ததால், அந்நிய செலாவணிச் சந்தையில் ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு மள மளவென்று உயர்ந்தது. இது ஏற்றுமதியாளர்களை பெருமளவிற்குப் பாதித்தது. இதனால் மைய வங்கி தலையிட்டு டாலர்களை பெருமளவிற்கு வாங்கி, அதன் மதிப்பு மேலும் சரியாமல் காத்தது.
இந்த நிலையில், இனி எந்த அளவிற்கு அ.நி.முதலீட்டை அனுமதிப்பது என்பது தொடர்பான கேள்வி எழுந்துள்ளது. இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு அவர்களின் முதலீட்டை தாங்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி