தென் மாவட்ட கோவில்களுக்கு வரும் பக்தர்களிடம் நகைகளைத் திருடியே பெரும் கோடீஸ்வரியாகி காவல்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார் தேனியைச் சேர்ந்த ஒரு பெண்.
அந்தப் பெண்ணின் பெயர் பஞ்சவர்ணம். வயது 48. இவர் ஒரு தொழிலதிபர். ஆனால் இது வெளியுலகுக்குத்தான். உண்மையில் இவர் ஒரு திருடி, அதிலும் சங்கிலித் திருடி. கோவில்களுக்கு வரும் பக்தர்களிடம் நகைகளைத் திருடித் திருடியே கோடீஸ்வரியானவர், தொழிலதிபர் வேடம் போட்டுக் கொண்டு நகைத்திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார் இந்த பஞ்சவர்ணம்.
கடந்த 20 வருடங்களாக திருட்டை ஒரு தொழிலாகவே நடத்தி வந்துள்ளார் பஞ்சவர்ணம். இவரது டீமில் எட்டு திருடர்களும் உள்ளனர். இவர்களுக்குத் தலைவியாக இருந்து வந்துள்ளார் பஞ்சவர்ணம்.
திருட்டுத் தொழில் மூலம் ரூ.3 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளார் பஞ்சவர்ணம். நான்கு வீடுகள், ஒரு வீட்டு மனை, பல கார்கள், ஆட்டோக்கள், 100 ஆடுகள், 50 பன்றிகள் இவரது சொத்தில் அடக்கம்.
செவ்வாய்க்கிழமையன்று மதுரை யில் வைத்து பிடிபட்டார் பஞ்சவர்ணம். சந்தேகத்திற்கிடமான வகையில் காரில் பயணித்த பஞ்சவர்ணம், அவரது மகன் பாண்டி முத்தையா (30), உறவினர் சேகர் (40) ஆகியோரை போலீஸார் வளைத்துப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் 24 பவுன் தங்க நகைகள் இருந்து வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கேட்டபோது பஞ்சவர்ணம் திருதிருவென விழித்துள்ளார்.
இதையடுத்து போலீஸார் துருவித் துருவி விசாரித்தபோதுதான் பஞ்சவர்ணத்தின் குட்டு உடைபட்டது. இதுகுறித்து புறநகர் காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், பஞ்சவர்ணம் மற்றும் அவரது குழுவினர் மீது 379வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
பஞ்சவர்ணமும், அவரது கணவர் முத்தையாவும் தேனி மாவட்டம் சிவாஜி நகரில் வசித்து வருகின்றனர். அங்கு பெரிய வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். அக்கம்பக்கத்தினரிடம் நல்ல பெயரையும் வாங்கி வைத்துள்ளனர். ஆனால் இவர்கள் எப்படி வசதியாக வாழ்கிறார்கள், என்ன தொழில் செய்கிறார்கள் என்பது குறித்த விவரமெல்லாம் அக்கம் பக்கத்தினருக்குத் தெரியவில்லை. வெளியில் தொழிலதிபராக காட்டிக் கொண்டு திருடியாக தனி வாழ்க்கையை நடத்தி வந்துள்ள பஞ்சவர்ணம், அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி