அண்மைய சுற்றி வளைப்புகளின் போது துணை இராணுவக்குழுக்களின் உதவியுடன் இராணுவத்தினரால் கைது செய்யப்படும் விடுதலைப் புலிகளின் சந்தேக நபர்களான ஆண்களும் பெண்களும் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு விஸவாயுக் கூண்டுகளில் அடைத்துக் கொல்லப்படுவதாக புலம் பெயர்ந்த தமிழர்களில் ஒரு பகுதியினர் கருதுவதாக சிறிலங்கா கார்டியன் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
அண்மைய நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களே இவ்வாறு நடாத்தப்படுவதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
கைதுக்கான ஆதாரங்களை இல்லாமற் செய்யவும், இது தொடர்பிலான அடையாளங்களை அழிக்கவுமே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அது தெரிவிக்கிறது.
கைதாபவர்கள் விசாரணையின் போது கடுமையான சித்திரவதைகளை அனுபவிப்பதாகவும், அது தொடர்பான தகவல்கள் ஊடகங்கள் ஊடாக வெளிவரும் பட்சத்தில் சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கம் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வரும் என்பதாலுமே பாதுகாப்பு அமைச்சு இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அச்செய்திக்குறிப்பு சுட்டிக்காட்டுகிறது.
கைது செய்யப்படும் நபர்கள் பற்றி அவர்களுடைய குடும்பங்களுக்கு எவ்வித தகவல்களும் கிடைப்பதில்லை என்றும் பொலிஸில் முறையிடக் கூட அவர்கள் அஞ்சுவதாகவும் லங்கா கார்டியன் தெரிவிக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி