கடந்த 30 ஆண்டு காலங்களுக்குள் இலங்கை மண் கண்ட போரியல் வரலாறு, சர்வதேசத்தை விடுதலைப்புலிகள் வியப்புக்குள்ளாக்கியிருந்தார்கள் என்பதை எவராலும் மறுத்துரைக்க முடியாது. இதுவே இந்தியா அடங்கலாக சர்வதேச உலகிற்கு ‘புரட்சிவாதிகளின் போராட்டங்கள்’ என்ற வகையில் பெரும் காழ்ப்பைத் தந்திருக்கலாம்.
வன்னி பெருநிலப்பரப்பில் நடந்த இறுதி யுத்தத்தின் போது சர்வதேசம் காத்திருந்த மெளனம் மேற்கண்டவற்றை ஆமோதிக்கின்றன.
தமிழ்ப்பகுதிகளில் ஆழ ஊடுருவித் தாக்கும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் தமிழ்ப்போராளிகளிடமே கற்றுக்கொண்டிருந்தது. கற்ற வித்தையை ஆசானிடமே காட்டுவதுபோன்று ஆழ ஊடுருவித் தாக்கும் செயல் சங்கரின் மரணத்தோடு வெளிச்சத்திற்கு வந்திருந்தது. அதனைத் தொடர்ந்தாற்போல், மைல்கல்லாக குறித்து நிற்பது தமிழ்ச்செல்வனுக்கும் அவரது குழுவிற்கும் ஏற்பட்ட மரணம்.
இந்த இடத்திலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வின் கோணம் முற்றாக வேறொரு விழிப்பொழுங்கிற்கு வந்திருக்க வேண்டும்போல் புரிகிறது. தமிழீழ வரலாற்றுப்போரின் பின்னடைவின் முதல்ப்பாகம் இதிலிருந்துதான் ஆரம்பமாகின்றதெனலாம்.
விடுதலைப்புலிகள் பெரும்பாலான தாக்குதல்களை சிங்களப்பிரதேசங்களில் மேற்கொண்டார்கள் என சந்தேகிக்கப்படும் நிலையில் இதன்தொடர்பாக கைது செய்யப்படுபவர்கள் சிங்களவர்களாகவே இருப்பார்கள். விடுதலைப்புலிகளுடன் சிங்களவர்கள் ஒத்துழைத்தர்கள் என்று பார்த்தால் பெரும்பாலும் பணத்திற்காக தான் இருந்திருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இதே வழிமுறைகளை சிங்களமும் தமிழர் தாயகத்தில் பிரயோகித்திருந்ததென்ற உண்மையை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். (தமிழ் வயோதிப மாது பாணுக்குள் walky Talky என்ற தொலைத்தொடர்பு சாதனமொன்றை வைத்திருந்து அரசாங்கத்திற்கு தகவல் வழங்கியதும் அதனை விடுதலைப்புலிகள் கண்டுபிடித்தார்கள் என்ற செய்தியையும் உதாரணமாக கொள்ளலாம்) இதிலிருந்து புரிதலுக்குள்ள விடயம் யாதெனில் போரியல் நடவடிக்கையில் விடுதலைப்புலிகளைவிட இலங்கை அரசாங்கம் மிக வேகமாக நகர்ந்துள்ளதென்பதே ஆகும்.
இலங்கை அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையாக விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உடைப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தது. இதனடிப்படையில் கருணாவின் உடைவானது ஒருபுறத்தில் இராணுவ ரீதியாகவும் மறுபுறத்தில் அரசியல் ரீதியாகவும் ஒரு கல்லில் இரு மாங்காயானது. விடுதலைப்புலிகளின் ஆசீர்வாதத்தைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் கட்டமைப்பை அரசியல் ரீதியாக இலங்கை அரசால் உடைக்கமுடியாமல் இருந்தமைக்கு பிரதான காரணம் விடுதலைப்புலிகளின் இராணுவபலம் குன்றாமையே ஆகும்.
2009 மே மாதத்திற்கு பின்பு ஏற்பட்ட விடுதலைப்புலிகளின் இராணுவப் பின்னடைவின் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இலங்கை அரசு எவ்வாறு உடைத்திருந்ததென்பதும் அதன் பெறுபேறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தது தற்பொழுது பொடியப்பு பியசேன அடங்கலாக 14 உறுப்பினர்களாக பின்னடைவு கண்டதை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது.
இலங்கை அரசுக்கு தற்பொழுது ஏற்பட்டுள்ள சவால் யாதெனில், இலங்கையில் விடுதலைப்புலிகளின் கொள்கைகளைச் சார்ந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மேலும் உடைப்பதுடன், பலமாக தளமமைத்திருக்கும் ஈழப்போராட்டத்தின் கட்டமைப்பு வலையத்தைக் கொண்டுள்ள புலம்பெயர் நாடுகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசேயாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தலிலிருந்து காப்பாற்றுவதற்காக இரா. சம்பந்தன் குழு ஏற்படுத்தியிருக்கும் சில பொறிமுறைகள் அரசுக்கு சார்பானதாக தோற்றமளித்திருந்தாலும் அதை நிலையற்றதாகவே கருதலாம். காலப்போக்கில் இதன் பெறுபேறுகள் புரிந்துகொள்ளக் கூடியதாகவே அமையும்.
இருப்பினும் நாடுகடந்த தமிழீழ அரசை உடைப்பதற்கான பொறிமுறைகளை இலங்கை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றதென்பதை கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது.
கடந்த September 29 – Oktober 01 வரை நடைபெற்ற நாடுகடந்த தமிழீழத்தின் செயலமர்வுக் கூட்டத்தில், செயலவைத் தெரிவுகள் இடம்பெற்றபோது சர்ச்சைகள் எழுந்ததாகவும் கூட்டத்தில் இருந்த அங்கத்தவர்கள் சிலர் வெளிநடப்புச் செய்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனை முதன்முதல் செய்தியாக்கி கரிசனையுடன் வெளியிட்ட ஊடகம் இலங்கையின் சிங்கள நாளேடான ‘திவயின’வாகும். இதிலிருந்து விளங்கிக்கொள்ள கூடியது யாதெனில்
* நாடுகடந்த தமிழீழ அரசின் உடைவில் இலங்கை அரசு கொண்டுள்ள கரிசனை
* கூட்டம் நடந்து முடிந்த மறுநிமிடமே இலங்கை அரசின் நாளேட்டிற்கு செய்தி சொல்லப்பட்டமை
* நாடுகடந்த தமிழீழ அரசினுள் இலங்கை அரசு உட்புகுந்துவிட்டது என்ற உண்மை
நாடுகடந்த தமிழீழத்தின் மேல் இலங்கை அரசு கொண்டுள்ள அச்சம் சிறிது சிறிதாக விலக ஆரம்பித்துள்ளது. நிறுவனமயப்படுத்தத் தொடங்கும் இந்த அமைப்பை எப்படியாவது பிளவுபடுத்த வேண்டுமென இலங்கை அரசு மேற்கொள்ளுகின்ற செயற்திட்டத்திற்கு தமிழ் மக்களின் ஒற்றுமையீனம் பலமாக அமைகிறது.
நாடுகடந்த தமிழீழ தெரிவுக்கு வாக்களித்ததோடு மட்டும் புலம்பெயர்வாழ் தமிழ் மக்களின் கடமைகள் நிறைவு பெற்றதென அசண்டையீனமாக இருப்பது பெரும் பின்னடைவைத்தரும். நாடுகடந்த தமிழீழ அரசிற்கெதிராக பிளவையேற்படுத்த முயலும் சக்திகளை இனம்கண்டு அவர்களுக்கெதிரான ஜனநாயக நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் காலத்தின் தேவையாகும்.
இல்லையேல் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் நிலைக்கு நாமே வித்திட்டவர்களாவோம்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி