செய்திகள்,முதன்மை செய்திகள் சமூக நீதிக்காக குரல் கொடுத்தவர் சங்கர் : அன்புமணி,ஸ்டாலின் இரங்கல்

சமூக நீதிக்காக குரல் கொடுத்தவர் சங்கர் : அன்புமணி,ஸ்டாலின் இரங்கல்

சமூக நீதிக்காக  குரல் கொடுத்தவர் சங்கர் :  அன்புமணி,ஸ்டாலின் இரங்கல் post thumbnail image
சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற இவர் ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையம் நடத்தி வந்தார். தமிழகம் முழுக்க பிரபலமானது இந்த அகாதமி . இந்நிலையில் அதன் நிறுவனர் சங்கர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டார்.

மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “சென்னையில் செயல்பட்டு வரும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் சென்னையில் இன்று காலை அகால மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள நல்லகவுண்டன்பாளையத்தில் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த சங்கர் தமது கடுமையான உழைப்பால் முன்னேறியவர். இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக வேண்டும் என்ற கனவு கொண்டிருந்த அவர்.

அது நனவாகாத நிலையில் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம் தொடங்கி நூற்றுக்கணக்கானவர்களை குடிமைப்பணி அதிகாரிகளாக உருவாக்கினார். ஏழை மாணவர்கள் பலருக்கு கட்டணமின்றி பயிற்சி அளித்தவர். போட்டித் தேர்வுகளின் நுணுக்கங்களை மாணவர்களுக்கு விளக்கி வெற்றிக்கு வழி வகுத்தவர்.

சமூக நீதியில் அக்கறை கொண்ட அவர், அதற்காக வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பல்வேறு தளங்களில் குரல் கொடுத்துள்ளார். அவரது மறைவு போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

சங்கரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளாக நினைக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்த சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் திடீரென்று மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

அவரது மறைவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கும், அவரை நம்பியிருந்த எண்ணற்ற இளைஞர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் நிர்வாக கட்டமைப்புக்கு தேவையான ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் என பல அரசு அதிகாரிகளை உருவாக்கி, தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் வெற்றிகரமாக ஐஏஎஸ் அகாடமிகளை நடத்த முடியும் என்பதை நிரூபித்துக்காட்டிய அவரது மறைவு, இளைஞர்களுக்கும், கிராமங்களில் இருந்து அகில இந்திய தேர்வுகளை எழுத விரும்பிய ஏழை-எளிய மாணவர்களுக்கும் பேரிழப்பாகும்” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி