செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஷிகர் தவான் அதிரடியால் அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!…

ஷிகர் தவான் அதிரடியால் அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!…

ஷிகர் தவான் அதிரடியால் அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!… post thumbnail image
ஹேமில்டன்:-உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் 34–வது ‘லீக்’ ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள ஹேமில்டன் நகரில் இன்று நடைபெற்றது. இதில் ‘பி’ பிரிவில் உள்ள இந்தியா– அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய அயர்லாந்து 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. துவக்கத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீச சிரமப்பட்டபோதிலும், 35 ஓவர்களுக்குப் பிறகு ரன்குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தியதுடன், அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

இதனால் அயர்லாந்து அணி 49 ஓவரில் 259 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. நீல் ஓ பிரையன் அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்தார். கேப்டன் போர்ட்டர் பீல்டு 67 ரன்களும், ஸ்டிர்லிங் 42 ரன்களும் எடுத்தனர். கடைசி விக்கெட் ஜோடி 21 ரன்கள் வரை எடுத்ததால் அந்த அணி 250 ரன்னுக்கு மேல் எடுக்க முடிந்தது.இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் அயர்லாந்து அணியின் கடைசி 6 விக்கெட்டுகள் 53 ரன்னில் சரிந்தன. முகமது ஷமி 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ், மொகித்சர்மா, ஜடேஜா, ரெய்னா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.இதையடுத்து 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்கள் ஷிகர் தவான், ரோகித் சர்மா இருவரும் சிறப்பாக விளையாடி நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். அயர்லாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கிய இந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் அயர்லாந்து பந்து வீச்சாளர்கள் திணறினர். அரை சதம் கடந்து இருவரும் தொடர்ந்து முன்னேறினர்.

இந்நிலையில், கடும் போராட்டத்திற்குப் பிறகு 24-வது ஓவரில் இந்த ஜோடியை தாம்சன் பிரித்தார். அந்த ஓவரின் 2-வது பந்தில் ரோகித் சர்மா போல்டாகி வெளியேறினார். அவர் 66 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்திருந்தார்.இதையடுத்து, ஷிகர் தவானுடன் விராட் கோலி இணைய மீண்டும் ஆட்டம் விறுவிறுப்படைந்தது. 27-வது ஓவரில் ஷிகர் தவான், இந்த உலகக் கோப்பையில் இரண்டாவது சதத்தை நிறைவு செய்தார். 84 பந்துகளில் 11 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் அவர் இந்த இலக்கை எட்டினார். ஆனால், மேற்கொண்டு ரன் எதுவும் எடுக்காத நிலையில் அவர் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அப்போது அணியின் ஸ்கோர் 190 ஆக இருந்தது. இதையடுத்து வெற்றிக்குத் தேவையான 70 ரன்களை விராட் கோலி-ரகானே ஜோடி எளிதாக எடுத்தது. இதனால், 79 பந்துகள் மீதமிருந்த நிலையில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷிகர் தவான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி