செய்திகள்,திரையுலகம் மீகாமன் (2014) திரை விமர்சனம்…

மீகாமன் (2014) திரை விமர்சனம்…

மீகாமன் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
கோவாவில் போதைப்பொருள் கடத்தலில் கொடிகட்டிப் பறக்கும் ஜோதியைப் (அஷுடோஷ் ராணா) பிடிக்க காவல்துறை பல வருடங்களாக போராடி வருகிறது. ‘ஜோதி’ என்ற பெயரைத் தவிர அவன் யார்? எப்படி இருப்பான்? எங்கு போகிறான்… வருகிறான்? என்பது யாருக்குமே தெரியாத பரம ரகசியம். அவனுடைய நெருங்கிய கூட்டாளிகளுக்கும், அடியாட்கள் பலருக்குமேகூட ஜோதியைப் பற்றி எந்த விவரமும் தெரியாது. அப்படியிருக்கும் ஜோதியைப் பிடிப்பதற்காக மும்பை போலீஸ் ரகசிய ஆபரேஷன் ஒன்றைத் துவங்குகிறது.

அதில் ஒருவரான அருள் (ஆர்யா), தன் பெயரை சிவா என மாற்றி ஜோதி டீமில் அடியாளாக அடிமட்டத்தில் இடம்பிடிக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக தன் திறமையை வெளிப்படுத்தி ஜோதிக்கு மிகவும் நெருக்கமான சிட்டியின் (மகாதேவன்) வலதுகரமாக மாறுகிறார்.இந்நிலையில் ஜோதியின் ‘சரக்கு’ ஒன்று திருடு போக, அதை எடுத்தது தங்கள் ஆட்களில் ஒருவன்தான் என சந்தேகம் வருகிறது. ஜோதியை வெளியே வரவழைப்பதற்காக அருள்தான் அந்த சரக்கைத் திருடி பதுக்கி வைக்கிறான். போலீஸில் இருக்கும் தன் ஆட்களை வைத்துக் கொண்டு சரக்கைத் திருடியவனை ஜோதி நெருங்க ஆரம்பிக்க, இன்னொருபுறம் அருள் கொஞ்சம் கொஞ்சமாக ஜோதியை வெளியே கொண்டு வருகிறான். ஒட்டுமொத்த கேங்ஸ்டருக்கும், ஒற்றை ஆளான அருளுக்கும் நடக்கும் இந்த யுத்தத்தின் முடிவில் யார், எப்படி ஜெயிக்கிறார்கள் என்பதே இந்த ‘மீகாமன்’.

ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இப்படத்தையும் தாராளமாக உதாரணம் காட்டலாம். படத்தின் முதல் காட்சியிலேயே நேரடியாக கதைக்குள் நுழைந்து, மெல்ல மெல்ல விறுவிறுப்பை ஏற்றிக்கொண்ட போகிறார்கள். தேவையில்லாத காமெடி, வெட்டி பஞ்ச் டயலாக், ஹீரோயினுடன் டூயட் என எந்த சமரசமும் செய்யாமல் முழுமையான ஆக்ஷன் படத்தைக் கொடுத்ததற்காகவே மகிழ்திருமேனியை ‘கைகுலுக்கி’ பாராட்டலாம்.
ஒளிப்பதிவு, பின்னணி இசை, சண்டை இயக்கம், எடிட்டிங்… இந்த நான்கு விஷயங்களும் ‘மீகாமன்’ படத்திற்கு பெரும் பலம். அதோடு ஆக்ஷன் படத்தைப் பொறுத்தவரை ஹீரோவைவிட வில்லன் பவர்ஃபுல்லாக இருக்க வேண்டும். இப்படத்தின் வில்லன் களத்தில் இறங்கி சண்டை போடுவது, கத்தியைக் காட்டி மிரட்டுவது, துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டே திரிவது என எதையுமே செய்வதில்லை. ஆனால், அவன் மிகப்பெரிய ‘தாதா’ என்பதை மட்டும் ரசிகர்களுக்கு உணர்த்தியிருக்கிறார்கள். இது இப்படத்தின் முக்கியமான ப்ளஸ்.

வழக்கமாக கோவா, மும்பையில் நடைபெறும் கதையாக இருந்தால் சப்டைட்டில் போடுவார்கள், இல்லையென்றால் அவர்கள் வேறுபாஷையில் பேசும்போதே பின்னணியில் தமிழும் ஒலிக்கும். ஆனால், இப்படத்தின் ஆரம்பத்திலேயே ‘கதை இங்கேதான் நடக்கிறது, புரிவதற்காக தமிழில் பேசுவார்கள்’ என சாமர்த்தியமாக ‘கார்டு’ போட்டுவிட்டார்கள்.கொஞ்சம் அதிகப்படியான வன்முறை, ஹன்சிகாவுடன் ஆர்யா பாடும் நெருக்கமான மான்டேஜ் பாடல், ஒரு பார் டான்ஸ் பாடல் என பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பிடிக்காத ஒருசில விஷயங்களைத் தவிர மீகாமனில் குறைசொல்வதற்கு எதுவுமில்லை.
பொதுவாக ஆர்யா முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டுவதில்லை என்ற விமர்சனம் அவர்மீது விழும். ஆனால், அதுவே இப்படத்தில் அவருக்கு கைகொடுத்திருக்கிறது. ஒரு ‘அன்டர்கவர்’ போலீஸ் ஆபிஸரின் தோரணைக்கு அவரின் உணர்ச்சியற்ற அந்த பாடிலாங்குவேஜ் ஏகபொருத்தம். அதோடு ஆக்ஷன் காட்சிகளிலும் புகுந்து விளையாடிக்கிறார் ஆர்யா. ஹன்சிகாவைப் பொறுத்தவரை நாலே நாலு சீன்கள்தான். ஆனாலும் வசீகரித்திருக்கிறார். இப்படத்தில் அவரின் பின்னணிக்குரலை மாற்றியிருப்பது கொஞ்சம் வித்தியாசம். படத்தின் முதுகெலும்பான வில்லன் ‘ஜோதி’ கேரக்டரில் மிரட்டியிருக்கிறார் அஷுடேஷ் ராணா. அலட்டல் இல்லாத, அதேநேரம் மிரட்டலான நடிப்பு. தமிழுக்கு ஒரு சூப்பர் வில்லன். வெல்கம்! இவர்களைத் தவிர்த்து படத்தில் இன்னும் ஏகப்பட்ட வில்லன்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே அந்தந்த கதாபாத்திரத்தை அருமையாக செய்திருக்கிறார்கள். ரமணாவும் ஒரு சின்ன கேரக்டர் செய்திருக்கிறார். ஹீரோவாக அவர் செய்த படங்களைவிட இந்த சின்ன கதாபாத்திரத்தின் ‘வலு’ அதிகம்.

மொத்தத்தில் ‘மீகாமன்’ அசத்தல்………….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி