செய்திகள்,திரையுலகம் மணம் கொண்ட காதல் (2014) திரை விமர்சனம்…

மணம் கொண்ட காதல் (2014) திரை விமர்சனம்…

மணம் கொண்ட காதல் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
நாயகன் முத்துராம் சென்னையில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் நண்பர்களுடன் பொழுதை கழித்துக் கொண்டு, லோக்கல் போன்களில் ராங் நம்பர்களுக்கு போன் செய்து கலாய்த்துக் கொண்டு ஜாலியாக இருந்து வருகிறார். இவருடைய தாய் ஊரில் வசித்து வருகிறார்.ஒருநாள் வங்கிக்கு பணம் தரவேண்டிய ஒருவரின் காரை தவறுதலாக எடுத்துச் செல்கிறார் முத்துராம். அப்போது அந்த காரின் உள்ளே நாயகி நோபியாவை பார்க்கிறார். முத்துராம் தன்னை கடத்துகிறார் என்று அலறுகிறாள் நோபியா. வழியில் சென்ற போலீஸ், இவர்கள் சென்ற காரை தடுத்து நிறுத்துகிறார். போலீசிடம் நடந்ததை கூறுகிறார் முத்துராம். அப்போது தான் முத்துராமிற்கு தவறான காரை எடுத்து வந்துவிட்டது தெரிய வருகிறது. இதனால் இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது.

முத்துராமின் தாய்மாமாவான பாண்டு, அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று முத்துராமிற்கு போன் செய்து ஊருக்கு வரவழைக்கிறார். ஊருக்கு வந்த முத்துராமிடம் திருமணம் செய்துக்கொள் என்று அவரின் அம்மா வற்புறுத்துகிறார். முதலில் மறுக்கும் முத்துராம் பிறகு பெண் பார்ப்பதற்கு சம்மதிக்கிறார்.மறுநாளே பெண் பார்க்க செல்கிறார்கள். அங்கு மணப்பெண்ணாக நோபியாவை பார்க்கிறார். பார்த்தவுடன் வியப்பில் ஆழ்ந்த இருவரும் திருமணத்திற்கு சம்மதிக்கிறார்கள். திருமணம் முடிந்து மறுநாள் நோபியாவை முத்துராம் வக்கீல் வேலை பார்க்கும் தோழி வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அங்கு இருவரும் விவாகரத்து கேட்கிறார்கள். அதற்கு தோழி காரணம் கேட்க, ‘இருவரும் பெற்றோர்களின் விருப்பத்திற்காக திருமணம் செய்துக் கொண்டோம். நாங்கள் இருவருமே வேறொருவரை காதலித்து வருகிறோம்’ என்று குண்டை தூக்கி போடுகிறார்கள். அதற்கு வக்கீல், விவாகரத்து கிடைக்க 90 நாட்கள் ஆகும் என்று கூறுகிறார்.இந்த 90 நாட்கள் கழித்து முத்துராம், நோபியா இருவரும் பிரிந்தார்களா? ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் முத்துராம் காமெடி, ஆக்‌ஷன், ரொமான்ஸ் என அனைத்திலும் தன் திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். ஆனால், ஏதுவுமே பொருந்தாமல் இருக்கிறது என்றே சொல்லலாம். சில இடங்களில் இவருடைய நடிப்பு எதார்த்த மீறலாகவே இருக்கிறது.
நாயகி நோபியா அழகாக வந்து அளவாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருக்கு நடிக்க இன்னும் அதிக வாய்ப்பு கொடுத்திருக்கலாம். நிழல்கள் ரவி, பாண்டு, மீரா கிருஷ்ணன் ஆகியோர் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.கல்யாணத்திற்கு முன்னால் காதலிப்பது மட்டும் காதல் அல்ல. கல்யாணத்துக்கு பிறகு மனைவியை காதலிப்பதுதான் உண்மையான காதல் என்ற கருத்தை சொல்ல வந்த இயக்குனர் புகழேந்திராஜ், திரைக்கதையில் தெளிவில்லாமல் சொதப்பியிருக்கிறார். காதல் கதையை வைத்து அதில் அழுத்தமான காதல் காட்சிகள் இல்லாததே வருத்தமளிக்கிறது. படத்தில் நிறைய கதாபாத்திரங்களை வைத்து அதை கையாளத்தெரியாமல் விட்டிருக்கிறார். தேவையில்லாத இடங்களில் நிறைய காமெடி காட்சிகளை புகுத்தியிருக்கிறார் இயக்குனர். காட்சிகள் தொடர்பில்லாமல் இருப்பதை சரிசெய்திருக்கலாம்.விக்ரம் வர்மனின் இசையில் கானா பாலா பாடிய பாடல் மட்டும் ரசிக்கும் படியாக உள்ளது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். அண்ணாதுரையின் ஒளிப்பதிவில் காட்சிகளை இன்னும் தெளிவாக பதிவு செய்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘மணம் கொண்ட காதல்’ அனுபவ காதல்…………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி