அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் கருப்பு பணம் குவித்துள்ள பெயர்களை வெளியிட முடியாது: மத்திய அரசு அறிவிப்பு!…

கருப்பு பணம் குவித்துள்ள பெயர்களை வெளியிட முடியாது: மத்திய அரசு அறிவிப்பு!…

கருப்பு பணம் குவித்துள்ள பெயர்களை வெளியிட முடியாது: மத்திய அரசு அறிவிப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து சேர்ப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு கூறி வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வின் முன் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகினார். அப்போது அவர் ஒரு மனு தாக்கல் செய்தார். வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் குவித்துள்ள அனைவரது பெயரையும் வெளியிட்டு விட முடியாது என்பதே அதன் சாராம்சம்.

இது தொடர்பாக அதில், வெளிநாட்டு வங்கிகளில் குறிப்பாக இந்தியா இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நாடுகளில் உள்ள வங்கிகளில் கருப்பு பணம் குவித்துள்ளவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட முடியாது. இதற்கு அந்த நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என கூறப்பட்டுள்ளது.இதுதொடர்பாக நீதிபதிகள் முன் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி குறிப்பிடுகையில், லீச்டென்ஸ்டெயின் எல்.ஜி.டி. வங்கியில் பணம் டெபாசிட் செய்துள்ள இந்தியர்கள் பற்றிய தகவல் வெளியிட ஜெர்மனி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது என கூறினார்.வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நீதிபதிகள் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.இதையடுத்து அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், இந்தியா சில நாடுகளுடன் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு உடன்பாடு செய்து கொண்டுள்ளது. அந்த நாடுகளில் உள்ள வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பணம் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிவிக்க முடியாது. வரி ஏய்ப்பு செய்து, லீச்டென்ஸ்டெயின் வங்கியில் டெபாசிட் செய்துள்ள அனைவரின் ரகசிய கணக்கு தகவல்களையும் தெரிவிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்கும்படி கேட்டுள்ளோம்.

யார் மீதெல்லாம் சட்டப்பூர்வமான கோர்ட்டு நடவடிக்கையை தொடங்க அரசு முடிவு செய்துள்ளதோ, அவர்களின் கணக்கு ரகசியங்களை மட்டுமே வெளியிட கேட்டுள்ளோம். வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் அவ்வளவும் கருப்பு பணம் என்று கூறிவிட முடியாது. அத்தகைய வங்கிக்கணக்குகளை தொடங்குவது ஒன்றும் குற்றம் அல்ல என கூறினார்.இதற்கிடையே கருப்பு பண விவகாரத்தில் மோடி அரசின் செயல்பாடுகளை எதிர்க்கட்சியான காங்கிரஸ் குறை கூறி உள்ளது. இதுபற்றி அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஜா கூறும்போது, கருப்பு பண விவகாரத்தில் அடிமட்டம் வரை சென்று மீட்க மோடி அரசுக்கு எண்ணம் இல்லை. தேர்தல் பிரசாரத்தின்போது, 100 நாட்களில் கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவதாக மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.கருப்பு பணம் குவித்தவர்களின் பட்டியலை வெளியிட மத்திய அரசுக்கு மனமில்லை என்ற எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிராகரித்தார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் பேசுகையில், கருப்பு பணம் குவித்தவர்கள் பட்டியலை வெளியிடுவதில் பிரச்சினை இல்லை. கருப்பு பணம் குவித்துள்ளவர்கள் பற்றி விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்குகள் தொடர்கிற போது, அவர்கள் பெயர் பட்டியலை பகிரங்கமாக வெளியிடுவோம் என கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி