அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் காஸா மீது மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்…

காஸா மீது மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்…

காஸா மீது மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்… post thumbnail image
ஜெருசலேம் :- 3 இஸ்ரேலிய மாணவர்கள் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீன எல்லையோரம் உள்ள காஸா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் படையினருக்கும் இடையில் கடந்த மாதம் 8-ம் தேதி தொடங்கிய சண்டை ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து நீடித்தது.

இதற்கிடையில், இரு தரப்பினருக்கிடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தொடர்ந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டு வரும் எகிப்து நாட்டின் ஆலோசனைக்கு இணங்க 72 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இருதரப்பினரும் சம்மதித்தனர்.

இந்த போர் நிறுத்தத்துக்கு இடையில் இரு தரப்பினரையும் கெய்ரோவுக்கு வரவழைத்து நிரந்தர சமாதானத்தை உண்டாக்கும் வகையில் சமரச பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் ஏதும் முன்னேற்றம் ஏற்பட்டதா? என்பது தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

(உள்ளூர் நேரப்படி) கடந்த 14-ம் தேதி நள்ளிரவோடு போர் நிறுத்த தற்காலிக ஒப்பந்தம் முடிவடையவிருந்த நிலையில் பேச்சுவார்த்தை தொடர்வதற்கு வசதியாக மேலும் 120 மணி நேரத்துக்கு போர் நிறுத்தத்தை நீட்டிக்கும்படி எகிப்து அரசு கேட்டுக் கொண்டது.

அதற்கிணங்க, 120 மணி நேரத்துக்கு போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பினரும் ஒப்புதல் அளித்தனர். சமாதான பேச்சுவார்த்தையில் சாதகமான போக்கு தென்பட்டதால் இரு தரப்பினரும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்தை மேலும் 24 மணி நேரம் நீட்டித்துள்ளதாக கெய்ரோவில் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் மீண்டும் ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டிய இஸ்ரேல் அரசு கெய்ரோவில் நடைபெற்று வந்த சமாதானப் பேச்சுவார்த்தையை ரத்து செய்து விட்டதாக அறிவித்துள்ளது.

காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது 10 ராக்கெட்கள் வீசப்பட்டதாகவும், அதனையடுத்து, இஸ்ரேல் விமானப்படைகள் காஸா மீது இரு முறை நடத்திய ஆவேச தாக்குதலில் ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண் பலியானதாகவும், 24 பேர் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னதாக, காஸா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீனியர்களும், 67 இஸ்ரேலியர்களும் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் 429 பேர் அப்பாவி குழந்தைகள் மற்றும் 1,354 பேர் பெண்கள் உள்ளிட்ட சாதாரண பொதுமக்கள் என்று ஐ.நா. சபை கணக்கிட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி