அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் விஜயகாந்துக்கு ‘புரட்சி தலைவர்’ பட்டம் சூட்டிய போலீசால் பரபரப்பு!…

விஜயகாந்துக்கு ‘புரட்சி தலைவர்’ பட்டம் சூட்டிய போலீசால் பரபரப்பு!…

விஜயகாந்துக்கு ‘புரட்சி தலைவர்’ பட்டம் சூட்டிய போலீசால் பரபரப்பு!… post thumbnail image
தர்மபுரி:-தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 24ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி திமுக, அதிமுக கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதே போல் தேமுதிக, பாஜ, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. தர்மபுரியில் நடைபெறும் அரசியல் கட்சி பிரசாரக் கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட எல்லைக்குள் உள்ள போலீஸ் நிலையங்களில் 3 நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும், அவ்வாறு பெறப்பட்ட அனுமதி குறித்த தகவல் அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள தகவல் பலகையில் போலீசார் எழுதி வைக்க வேண்டும் என எஸ்பி அஸ்ரா கார்க் கூறியிருந்தார்.

இதன் மூலம் யார், யார் எந்த தேதியில் பொதுக் கூட்டம், பிரசாரம் செய்ய அனுமதி பெற்றுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிய வரும் என்று தெரிவித்திருந்தார். இதன்படி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் பொதுக் கூட்டம் மற்றும் பிரசாரம் செய்வதற்கு முன் அனுமதி பெற்ற விபரங்களை போலீஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்டுள்ள தகவல் பலகையில் போலீசார் எழுதி வைத்துள்ளனர். தற்போது தேமுதிக பொதுக் கூட்டம் குறித்து போலீசார் எழுதி வைத்துள்ள தகவல் அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தகவல் பலகையில், ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம், தேர்தல் பிரசார கூட்டம், இடம் சந்தைப்பேட்டை, தர்மபுரி, நாள்: 16.3.14, மாலை 4 மணி, தலைமை: மாவட்ட செயலாளர் இளங்கோவன், சிறப்புரை: மாண்புமிகு, புரட்சி தலைவர் விஜயகாந்த் & நிறுவன தலைவர்’ என போலீசார் எழுதி உள்ளனர். விஜயகாந்துக்கு புரட்சி தலைவர் பட்டத்தை போலீசார் சூட்டியிருப்பது அதிமுவினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அதிமுகவினர் கூறும் போது, ‘‘மாண்புமிகு என்பது அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரை மட்டும் அழைக்கும் மிக உயரிய வார்த்தையாகும். ஆனால் எந்த பதவியும் இல்லாத விஜயகாந்தை தர்மபுரி டவுன் போலீசார் மாண்புமிகுவாக எழுதியிருப்பது கண்டனத்துக்கு உரியது. தமிழ்நாட்டின் ஒரே புரட்சி தலைவர் மறைந்த தலைவர் எம்ஜிஆர் மட்டுமே. ஆனால் தேமுதிக தலைவருக்கு புரட்சி தலைவர் பட்டம் சூட்டியிருப்பது போலீசார் திட்டமிட்டு அதிமுகவினரை அவமானப்படுத்தும் விதமாக உள்ளது. இது தொடர்பாக எஸ்பியிடம் புகார் செய்ய உள்ளோம்‘‘ என்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி