அரசியல்,முதன்மை செய்திகள் தேர்தல் கூட்டணி… என் கணிப்பு துல்லியமானது! – ஜெ

தேர்தல் கூட்டணி… என் கணிப்பு துல்லியமானது! – ஜெ

jayalalitha

‘தேர்தல் கூட்டணி குறித்து மிகத் துல்லியமாக கணித்துக்கொண்டு இருக்கிறேன். என் கணிப்பு தப்பாது’ என்று மதுரை கூட்டத்தில் ஜெயலலிதா பேசினார்.

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை, விலைவாசி உயர்வு, டீசல், பெட்ரோல் விலை உயர்வு போன்றவற்றை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மதுரை ரிங் ரோடு பாண்டிகோவில் அருகே நேற்று பிற்பகல் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்கு நேற்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அ.தி.மு.க.வினர் லாரி, கார், வேன், பஸ்களில் வரத்தொடங்கினார்கள்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று பிற்பகலில் தனி விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பிறகு வேனில் புறப்பட்ட அவர் வழி நெடுக வரவேற்பை ஏற்றபடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். அங்கு கூடியிருந்த திரளான கூட்டத்தினரை பார்த்து வணங்கி, இரட்டை விரலை காண்பித்தார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார். பின்பு மாவட்ட செயலாளர்கள் பேசினர். அதன்பின் ஜெயலலிதா பேசியதாவது:

வைகை நதி இன்று ஒருநாள் கடற்கரையாக மாறி இருக்கிறது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல் கூடி இருக்கிறீர்கள். வைகை நதிக்கென்று ஒரு வரலாறு உண்டு.

எனக்கு அச்சுறுத்தல்கள் வந்தாலும், மிரட்டல்கள் வந்தபோதிலும் அவை எனக்கு அனுப்பப்பட்ட அழைப்புகளாகவே கருதி நீதி கேட்க வந்துள்ளேன். பாண்டிய மன்னர்கள் காலத்தில் மதுரையில் தமிழ்ச்சங்கம் அமைக்கப்பட்டது.

திருமலை நாயக்கர் ஆட்சி புரிந்து மகாலை அமைத்த இடம். சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து நேர்மையும், உண்மையும் உருவான இடம். கணவனை கள்வன் என்றதால் உண்மையை நிலைநாட்டிய கண்ணகி மதுரையை எரித்ததாகவும் கூறப்படுகிறது. குற்றத்தை சுட்டிக்காட்டிய நக்கீரன் பிறந்த இடம். வரலாற்று வீரமங்கை ராணி மங்கம்மாள் ஆட்சி நடத்தியதும் இந்த மதுரைதான்.

தற்போது நடக்கும் ஆட்சியின் தவறுகளை பொறுப்புள்ள எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் நான் உங்களிடம் எடுத்துச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

கவுன்சிலராக இருந்து மக்கள் பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த உண்மையான செயல் வீராங்கனையாக லீலாவதி செயல்பட்டார். ஏப்ரல் 23, 1997-ல் அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற வள்ளியின் கணவர் உள்பட 4 பேர் குற்றவாளிகள் என்று கைது செய்யப்பட்டு கோர்ட்டில் தண்டனை பெற்று சிறையில் இருந்தனர். அவர்கள் பரோலில் வந்ததாக கூறி உள்ளாட்சி தேர்தலின்போது வன்முறையில் ஈடுபட்டார்கள். இந்த வழக்கில் ஒருவர் இறந்த நிலையில் 3 பேர் அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்யப்பட்டனர்.

அனைத்து கட்சியினராலும் மதிக்கக்கூடிய மனிதர். பாராளுமன்ற உறுப்பினராக பலமுறை பணியாற்றியவர். தி.மு.க. அமைச்சராகவும் இருந்தவர், தா.கிருட்டிணன். 2003-ம் ஆண்டு நண்பர்களுடன் நடந்து சென்றபோது கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கில், அனைத்து சாட்சிகளும் பிறழ் சாட்சிகள் ஆயின. குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தற்போது பதவிகளில் இருக்கிறார்கள்.

முல்லைப்பெரியாறு பிரச்சினையில் துரோகம்:

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழக அரசு மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது. எனது ஆட்சிக்காலத்தில் 136 அடி என்பதை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்தப் பிரச்சினையில் முதலில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்த கருணாநிதி, பின்னர் கடிதத்தோடு நிறுத்திக் கொண்டார். மதுரை மாவட்ட மக்களின் ஜீவாதாரப் பிரச்சினையான முல்லைப் பெரியாறு குறித்து குறைந்தபட்சம் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தக் கூட பயப்படுகிறார் கருணாநிதி.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஆண்டு தமிழகத்தில் மின்வெட்டு என்பதே இல்லை. உபரி மின்சாரத்தை அண்டை மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

மாநிலத்திற்கு வருவாய் பெருகியது. அ.தி.மு.க., ஆட்சியில் காற்றாலை உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தி.மு.க., ஆட்சியில் மோசமான பராமரிப்பு காரணமாக மின்வெட்டு ஏற்படுகிறது. மின்வாரியத்திற்க நஷ்டம். மக்களுக்கு கஷ்டம். மாணவ மாணவியர் படிக்க மின்சாரம் இல்லை. தமிழகம் இருளில் மூழ்கியிருக்கிறது.

விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. பல இடங்களில் மணல் அள்ளப்படுகிறது. தாமிரபரணி ஆற்றில் வரம்பு மீறி மணல் அள்ளியதால் ஐகோர்ட் மணல் அள்ள தடை விதித்துள்ளது. இதனை ஆய்வு செய்ய குழு அமைத்தது. இந்த குழு தாமிரபரணி ஆற்றை ஆய்வு செய்த குழு தாமிரபரணி ஆற்றில் 5 ஆண்டு தடை விதிக்க பரிந்துரை செய்துள்ளது.

பெட்ரோல் விலை அடிக்கடி உயர்ந்து கொண்டே செல்கிறது. இதற்கு தி.மு.க.,வும் அதரவு தெரிவிக்கின்றது. கருணாநிதி விலைவாசியை கட்டுப்படுத்துவார் என எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை. எனவே தி.மு.க.,விற்கு சட்டசபை தேர்தலில் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும்.

இந்த ஆட்சியில் எனக்கும், உங்களுக்கும், போலீசாருக்கும், நீதிபதிகளுக்கும் பாதுகாப்பில்லை. இந்த ஆட்சியில் மிகவும் பாதிக்கப்பட்ட சமுதாயம் மீனவ சமுதாயம். பலர் இறந்துள்ளனர். நூற்றுகணக்கானோர் இலங்கை சிறையில் உள்ளனர். ஆயிரகணக்கானோர் நடுக்கடலில் தாக்கப்படுகின்றனர்.

தாமிரபரணியில் மணல் அள்ள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதுபற்றி அமைக்கப்பட்ட வல்லுநர் குழு பார்வையிட்டு அந்த ஆறு பழைய நிலைக்கு திரும்ப இன்னும் 5 ஆண்டுகள் ஆகும். அதன்பிறகுதான் மணல் அள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது.

கல்விக் கட்டணம்:

கல்விக்கட்டணம் உயர்ந்துவிட்டது. இதனை சரிப்படுத்த அமைக்கப்பட்ட நீதியரசன் கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைகள் என்ன ஆனது?

உயர்கல்வி அதைவிட மோசமாக உள்ளது. தமிழகத்தில் ஏழை மக்களை வாட்டி வதைத்த லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ய தடை விதித்தேன். ஆனால் இன்று போலி லாட்டரி சீட்டுகள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுகின்றன. இலவச வேட்டி-சேலை திட்டத்தில் ஊழல் நடப்பதாக தகவல்கள் வந்துள்ளன. விவசாயிகளுக்கு இலவச பம்புசெட்டுகளை வழங்குவோம் என்பதும், வீட்டு வசதி திட்டமும் கண்துடைப்பு.

இந்த ஆட்சியை மாற்றுவதற்கான கவுண்ட்-டவுன் ஏற்கனவே தொடங்கிவிட்டது. நாங்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் மதுரை மக்களின் துயர் துடைக்கப்படும். பழைய, அமைதியான மதுரையாக இது திகழும்.

கூட்டணி

கூட்டணி எப்படி இருக்குமோ என்கிற ஒரு சின்ன சந்தேகம் உங்களிடம் இருக்கலாம். நம்முடைய கூட்டணி கணக்கும், கணிப்பும் சரியாக இருக்கும். அதை நான் துல்லியமாக கணித்துக்கொண்டு தான் இருக்கிறேன். 2011-ல் கோட்டையை பிடிக்க போகிற ஒப்பற்ற இயக்கம் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான்.

எனது பேச்சின் நேரடி ஒளிபரப்பை யாரும் பார்க்கக்கூடாது என கருணாநிதி பவர்கட் செதுள்ளார். அடுத்த தேர்தலில் கருணாநிதியின் பவரை கட் செது, அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். செவீர்களா?

உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்… பொறியாளர் ஒருவர் மூன்று கிலோ மீட்டருக்கு பாலம் கட்டினார். “இப்பாலத்தில் செல்லும் வாகனங்கள் 30 டன் எடை கொண்டதாக இருக்க வேண்டும். அதற்கு மேல் ஒரு குண்டூசி எடையைக்கூட பாலம் தாங்காது; இடிந்துவிடும்,” என்றார். ஒரு லாரி 30 டன் சரக்குகளை ஏற்றிக்கொண்டு, பாலத்தில் சென்றது. மறுமுனையில் லாரியை வரவேற்க, அதிகாரிகள் திரண்டிருந்தனர். லாரி மீது சில புறாக்கள் அமர்ந்திருந்தன. குண்டூசி எடைக்கு மேல் புறாக்கள் இருக்குமே என மக்கள் அச்சமடைந்தனர். ஆனால், லாரி மறு முனையை அடைந்தது. இது குறித்து அந்த பொறியாளரிடம், ‘புறாக்கள் அமர்ந்ததால், 30 டன்னிற்கு மேல் எடை அதிகரித்திருக்குமே,’ என மக்கள் கேள்வி எழுப்பினர்.

பொறியாளரோ, “இந்த ஒன்றரை கிலோமீட்டரை லாரி கடந்தபின், டீசல் செலவாகிவிட்டது. புறாக்கள் அமர்ந்திருந்தாலும், 30 டன்னிற்கு மேல் எடை அதிகரித்திருக்காது,” என்றார். அதுபோல் எனது கூட்டணி கணக்கும், கணிப்பும் சரியாக துல்லியமாக இருக்கும் என்றார் ஜெயலலிதா.
தேர்தலை சந்தித்து பணியாற்றுகின்ற கடமையை தொடங்குங்கள். வெற்றிக்கனியை பெறுகின்ற உத்தியை நான் சொல்லிக்கொடுக்கின்றேன். விழிப்போடு களப்பணியாற்ற இப்போதே தயாராகுங்கள்…” என்றார் ஜெயலலிதா.

2 மணி நேரம் பேசிய ஜெயலலிதாவுக்கு மேடையில் நினைவுப்பரிசாக வெள்ளிச்செங்கோல் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் செல்லூர் ராஜு (மதுரை மாநகர்), பச்சமால் (கன்னியாகுமரி), சண்முகநாதன் (தூத்துக்குடி), நத்தம் விசுவநாதன் (திண்டுக்கல்), அமைப்பு செயலாளர் சோ.கருப்பசாமி ஆகியோர் பேசினார்கள். முடிவில் மதுரை மாவட்ட செயலாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.

கூட்டம் முடிந்து ஜெயலலிதா வேனில் விமான நிலையம் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை திரும்பினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி