எழுத்துக்களின் வகை – சூத்திரம் 1

எழுத்துக்களின் வகை – சூத்திரம் 1 post thumbnail image

சூத்திரம்:

எழுத்து எனப்படுப,
அகரம் முதல்
னகர இறுவாய், முப்பஃது’ என்ப-
சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே.

கருத்து:தமிழ்மொழி எழுத்துக்களின் தொகையும், வகையும், முறையும், பெயரும் கூறுகின்றது.

பொருள்:தனித்துவரல் மரபினையுடைய எழுத்து எனச்சிறப்பித்துச்
சொல்லப் பெறுவன, சார்ந்துவரல் மரபினையுடைய மூன்றுமல்லாமல்,
அகரமாகிய எழுத்து முதலாக னகரமாகிய எழுத்து ஈறாக உள்ள முப்பஃது
என்று கூறுவர் ஆசிரியர்.

அகரனகரங்கள் அகப்பாட்டெல்லையாக நின்றன. ‘படுவ’ என்னும்
பாடமே இந்நூல் நெறிக்கு ஒத்தது. சார்ந்துவரல் மரபினையுடைய மூன்றும் உட்பட,
எழுத்து முப்பத்துமூன்றாம் என்றவாறு. இதனை ‘‘மூன்று தலையிட்ட முப்பதிற்று எழுத்தின்’’ (புணர்-1) என்பதனானும் அறிக.

எடுத்துக்காட்டு:(இக்கால வரிவடிவம்) அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ
ஓ ஒள. இவை உயிரெழுத்துக்கள். க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ
ழ ள ற ன. இவை அகரச்சாரியையொடு நிற்கும் மெய்யெழுத்துக்கள்.
இவற்றை இக்கு, இங்கு, இச்சு என உயிர்ப்பிசையாற் புள்ளியாக்கிக்
கண்டுகொள்க. க், ங்,………..ன் எனக்காட்டுதல் அநுகரண ஓசையை உட்படுத்திக் காட்டுதலாகும்.
இவற்றின் உருவும் வடிவும் பிறப்பியலுட் கூறப்படும்.

இச்சூத்திரத்தான் தமிழ் எழுத்துக்கள் முப்பத்துமூன்று என்னும்
தொகையும், தனித்துவரல் மரபின, சார்ந்து வரல் மரபின என்னும்
வகையும், முதல் இறுவாய் என்றதனான் முறையும், எழுத்து என்றதனான்
(தொகுதிப்) பெயரும் பெறப்பட்டன.

‘சார்ந்து வரல் மரபின்’ என்றதனான், அகரமுதல் னகர
இறுவாயாகியவை தனித்துவரல் மரபின என்பது உணர்த்தப்பட்டது.
‘‘அலங்கடை’’ என்னும் வினையெச்சம் ஈண்டு, அல்லாமல் என்னும்
பொருட்டாய் நின்றது. ‘என’ என்பது சிறப்புணர்த்தி நின்றது.
சிறப்பாவது தலைமைத்தன்மை. மொழிப் பொருளுணரும்
இலக்கியப்பயிற்சியுடையாரை நோக்கி இருவகைவழக்கும் உணர்த்துவதே
இலக்கணமாகலின், அகர னகரங்களின் இடை நிற்பனவற்றை மாணாக்கர்
உணர்வராதலின், முதலும் ஈறுங்கூறி, ஏனையவற்றைக் கொள்ள வைத்து,
மேற்கூறப்படும் இலக்கணங்களான் முறையை உய்த்துணரவைத்தார்.

எழுத்து என்பது சொல்லின் முடியும் இலக்கணத்ததாய் நிற்றலானும்
அது தொல்லோரிட்ட குறியீடாகலானும் எழுத்தாவது இன்னது என
மிகைப்படக் கூறாராயினார். “மொழிமுதற் காரணமாம் அணுத்திரள்
ஒலிஎழுத்து’’ என்பதும், ‘‘எழுதப் படுதலின் எழுத்து’’ என்பதும்,
குன்றக்கூறலாம். என்னை? முன்னது வரிவடிவத்தையும் பின்னது ஒலி
உருவையும் சுட்டாமையான் என்க.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி