திரை விமர்சனம்

செய்திகள், திரையுலகம்

இரிடியம் (2015) திரை விமர்சனம்…

தஞ்சாவூரை ஒட்டியுள்ள கிராமத்தில் கோவில் கலசத்திற்குள் இரிடியம் இருப்பதாகவும் அதை விற்றால் நல்ல பணம் கிடைக்கும் என்றும் சொல்லி இதை வாங்க வருபவர்களை ஏமாற்றி வருகிறார்கள் அந்த ஊரின் செல்வந்தர்கள். இந்த செல்வந்தரில் ஒருவனின் தம்பி தன் பார்வையாலேயே வசியம் செய்கிற சக்தியையும், தான் பார்க்கும் அரிசியை எழ வைக்கிற சக்தியையும் படைத்திருக்கிறார். இந்த சக்தியை பயன்படுத்தி வெளியூரில் உள்ள செல்வந்தர்களை விலை மதிப்புள்ள இரிடியம் இருப்பதாக கூறி தங்கள் ஊருக்கு வரவழைத்து தனது சக்தியால் செல்வந்தர்களின் பணத்தை பெற்றுக் கொண்டு, அவர்கள் தானாகவே தற்கொலை செய்யும் படியாகவும் செய்து வருகிறார். இந்நிலையில் மர்மமான முறையில் சிலர் தற்கொலை செய்துக்கொள்ளும் விஷயம் அந்தப் பகுதியின் இன்ஸ்பெக்டரான மோகன் குமாருக்கு தெரியவருகிறது. தனிப்படை அமைத்து இதற்கெல்லாம் காரணமானவர்களை தேடி வருகிறார். இதற்கிடையில், கல்லூரி படித்து வரும் நாயகி ஆருசியை அதே கல்லூரியில் படிக்கும் நாயகன் ஒருதலையாக காதலித்து வருகிறார். ஆருசி வெளிநாட்டிற்குச் சென்று நன்கு சம்பாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்து வருவதால் அவரிடம் நாயகன் தன் காதலை சொல்லாமலே இருந்து வருகிறார். இருந்தாலும் ஆருசியிடம் நட்போடு பழகி வருகிறார். ஒரு கட்டத்தில் தன் காதலை சொல்லும் நாயகனை, ஆருசி ஏற்றுக்கொள்கிறார். ஆருசியின் லட்சியத்தையும் நிறைவேற்ற அவருக்கு தேவையான பாஸ்ட்போர்ட் உள்ளிட்ட பல உதவிகளை செய்து கொடுக்கிறார். இறுதியில் நாயகி வெளிநாடு சென்றாரா? நாயகனும் நாயகியும் ஒன்று சேர்ந்தார்களா? போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் குமார், செல்வந்தர்கள் சாவுக்கு காரணமான குற்றவாளியை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.படத்தில் போலீசாக நடித்திருக்கும் மோகன் குமார், அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ப மிடுக்காக வலம் வருகிறார். நாயகி ஆருசி துறுதுறு நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்கிறார். பார்ப்பதற்கு அழகாகவும் அளவான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகனாக நடித்திருப்பவர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.இயக்குனர் ஷாய் முகுந்தன் இரிடியத்தை மையமாக வைத்து அதில் மர்மம், காமெடி மற்றும் காதல் கலந்து கொடுத்திருக்கிறார். ஆனால், திரைக்கதையை சுவாரஸ்யம் இல்லாமலேயே அமைத்திருக்கிறார். யஷ்வந்த் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். கோபி சபாபதியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. காட்சிகள் அனைத்தும் தெளிவாக உள்ளன. மொத்தத்தில் ‘இரிடியம்’ வலிமை இல்லை………..

செய்திகள், திரையுலகம்

அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015) திரை விமர்சனம்…

படத்தின் கதைப்படி, அல்ட்ரான் உருவானதற்கு ஒரு வகையில் ‘அயன் மேன்’ டோனி ஸ்டார்க்கே காரணம். வேற்றுகிரகவாசிகளிடமிருந்து இந்த உலகத்தைக் காப்பதற்காக அவர் உருவாக்கிய ரோபோக்களான அல்ட்ரான் மனிதர்களுக்கு எதிராய் திரும்புவதே இப்படத்தின் கதை. பூமியின் அழிவுக்குக் காரணமாக இருப்பது மனித இனமே என நினைக்கும் அல்ட்ரான், மனிதர்களை பூமியில் இருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கிறது. அல்ட்ரானின் இந்த விபரீத முயற்சியை அவெஞ்சர்ஸ் ஹீரோக்கள் எப்படி முறியடிக்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதைக்களம். தமிழ்ப்படத்திற்குக்கூட இதற்கு முன்பு இவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. அந்தளவுக்கு காட்சிக்கு காட்சி தியேட்டரில் ரசிகர்கள் கூச்சலிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அல்ட்ரானை மனிதர்களுக்கு எதிராய் திருப்பும் குழுவில் குவிக் சில்வர் (ஆரோன் டெய்லர்), ஸ்கேர்லெட் விட்ச் (எலிசபெத் ஒல்சென்) என இரண்டு சிறப்பு சக்தி வாய்ந்த மனிதர்களும் இருக்கிறார்கள். இவர்களது திட்டப்படி முதலில் அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோக்களை அழித்துவிட்டால் மனிதர்களை எளிதில் பூமியிலிருந்து அப்புறப்படுத்திவிடலாம் என நினைக்கிறார்கள். இதனால் ஸ்கேர்லெட் விட்ச் தனது சக்தியின் மூலம் ஹல்க்கின் மூளையை தன் வசப்படுத்தி சிட்டியை அழிக்க அனுப்புகிறாள். மூர்க்க குணத்துடன் ஹல்க் தனது அசுரத் தாக்குதலை நகர மக்கள் மீது தொடுக்க, அதனை அயன்மேன் தன் கவச மனிதர்கள் மூலம் கட்டுப்படுத்தும் காட்சியில் தியேட்டரே அதிர்கிறது. இத்தனை சூப்பர் ஹீரோக்களை வைத்துக் கொண்டு ஒரு படத்தை எடுக்க வேண்டுமானால் ஒவ்வொருவருக்கும் சமமான காட்சிகளை எப்படி திரையில் கொண்டுவர வேண்டும் என்பதற்கு இப்படம் சரியான உதாரணம். படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே இந்த சூப்பர் ஹீரோக்கள் இணைந்து எதிரிகளைப் பந்தாடும்போதே உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. வெறும் ஆக்ஷன் மட்டுமில்லாமல் சின்னச்சின்ன காமெடிகளையும் சூப்பர் ஹீரோக்கள் செய்வது படத்திற்கு கூடுதல் பலம். தொழில்நுட்ப ரீதியில் ஹாலிவுட் படங்கள் எத்தனை உயரத்திலிருக்கின்றன என்பதை இப்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஒரு சிட்டியையே பூமியோடு பெயர்த்தெடுத்து அந்தரத்தில் அல்டரான் ரோபோக்கள் தூக்கிச் செல்லும் காட்சி ரசிகர்களை சீட் நுனிக்கு வரவைக்கிறது. அதுவும் 3டியில் பார்க்கும்போது, ஒவ்வொரு காட்சியும் நம் கண்ணெதிரே நடப்பதுபோல் அவ்வளவு துல்லியம். மொத்தத்தில் ‘அவெஞ்சர்ஸ் 2 : ஏஜ் ஆஃப் அல்ட்ரான்’ பிரம்மாண்டம்………

செய்திகள், திரையுலகம்

யூகன் (2015) திரை விமர்சனம்…

யஸ்மித், சித்து, ஷாம், பிரதீப் பாலாஜி, மனோஜ் ஆகியோர் ஐ.டி.கம்பெனியில் ஒன்றாக வேலை செய்கிறார்கள். நண்பர்களான இவர்களில் மனோஜ் மர்மான முறையில் இறக்கிறார். இதனால் அதிர்ந்து போகும் நண்பர்கள் போலீசுக்கு தகவல் கொடுக்கிறார்கள். போலீஸ் முதலில் இவர்கள் நான்கு பேரை விசாரித்து வருகிறார்கள். இதன்பிறகு ஷாம் மற்றும் பிரதீப் பாலாஜி ஆகியோரும் அடுத்தடுத்து மர்மான முறையில் இறக்கிறார்கள். இதையடுத்து போலீஸ் தீவிரமாக விசாரிக்க ஆரம்பிக்கிறது. மீதமுள்ள யஸ்மித் மற்றும் சித்துவை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்துகிறார்கள். மேலும் கொலைக்கான காரணத்தையும் தேடி வருகிறார்கள். இந்த விசாரணையில் ஒரு பெண்ணுடைய போனில் இருந்து எம்.எம்.எஸ். வந்த பிறகுதான் இவர்கள் மூன்று பேரும் இறந்திருக்கிறார்கள் என்று கண்டறிகிறார்கள். அந்த பெண் யார்? இவர்களை அவள் கொல்ல காரணம் என்ன? மீதமுள்ள இரண்டு பேரும் உயிர் பிழைத்தார்களா? என்பதே மீதிக்கதை.படத்தில் நாயகனாக நடித்திருக்கும் யஸ்மித் அறிமுக நாயகன் போல் இல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார். நண்பர்களாக வரும் சித்து, ஷாம் பிரதீப் பாலாஜி, மனோஜ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நாயகியான சாக்‌ஷி அகர்வாலுக்கு முதல் பாதியில் வேலையே இல்லை. இரண்டாம் பாதியில் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வழக்கமான நாயகிகள் செய்யும் ஆடல், பாடல் காட்சிகள் சாக்‌ஷி அகர்வாலுக்கு கிடைக்கவில்லை. ஐ.டி. கம்பெனியில் நடைபெறும் பிரச்சனையை மையப்படுத்தி அதில் திகில் கலந்த படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் கமல் குமார். திகில் மற்றும் பல திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்திருக்கிறார். சிம்பிலான ஸ்கிரிப்ட்டை லாவகமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர். இப்படத்திற்கு இவரே எடிட்டிங் செய்திருக்கிறார். திகில் படத்திற்குண்டான எடிட்டிங்கை செவ்வனே செய்திருக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகள் இல்லாமல் கேமரா தந்திரம் மற்றும் ஒப்பனைகள் மூலமாக திகில் காட்சிகளை நேர்த்தியாக படம்பிடித்திருப்பது படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. ரஷாந்த் அர்வின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ரவி ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். மொத்தத்தில் ‘யூகன்’ வேகம்………

செய்திகள், திரையுலகம்

அவெஞ்சர்ஸ் க்ரிம் (2015) திரை விமர்சனம்…

அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடைப்போடும் அவெஞ்சர்ஸ் க்ரிம் திரைப்படம் வித்தியாசமான, புதுமையான கதைக்களத்தை கொண்டுள்ளது. கதைப் புத்தகங்களிலும் திரைப்படத்திலும் நாம் கண்டுகளித்த தேவதைகள் நிஜ உலகை கைப்பற்ற நினைக்கும் வில்லனிடமிருந்து எவ்வாறு மக்களை காப்பாற்றினார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை. அழகான ஆடைகள் அணிந்து மென்மையாக காட்சியளிக்கும் சிண்ட்ரல்லா, ஸ்லீப்பிங் பியூட்டி, ஸ்னோ வைட், ரப்பன்செல், ரெட் ரைடிங் ஹூட் ஆகிய கதாப்பாத்திரங்கள் இந்த படத்தில் ஆக்ஷன் நாயகிகளாக மாறியுள்ளனர். மாயாஜால உலகில் இருந்து மந்திர கண்ணாடி வழியாக ரம்பேல்ஸ் டில்ட்ஸ்கின் நிஜ உலகிற்கு வருகிறார். தனது பிரத்யேக மாயஜால சக்திகளைக் கொண்டு உலக மக்களை அடிமைப்படுத்த திட்டமிடுகிறார். ரம்பேல்ஸ் டில்ட்ஸ்கின்னின் சதியை முறியடிக்க அவரை பின்தொடர்ந்து வரும் ஸ்னோ வைட் தனது கணவரை கொன்றதற்காக அவரை பழிவாங்க துடிக்கிறாள். இந்நிலையில், ஸ்னோ வைட்டை மாயாஜால உலகத்தில் சந்திக்க வரும் சிண்ட்ரல்லா, ஸ்லீப்பிங் பியூட்டி, ரப்பன்செல் மற்றும் ரெட் ரைடிங் ஹூட் ஆகியோர் அவள் அங்கு இல்லாததை அறிந்து ஏமாற்றமடைகிறார்கள். ஸ்னோ வைட் தனது கணவன் கொலைக்கு காரணமாவர்களை பழி தீர்க்க நிஜ உலகத்திற்கு சென்றிருக்கிறார் என்று அறிந்ததும் இவர்கள் அனைவரும் நிஜ உலகத்திற்கு பயணிக்கிறார்கள். மாயாஜால உலகில் இருந்து புறப்பட்ட அனைவரும் நிஜ உலகில் ஸ்னோ வைட்டை சந்திக்கும்போது, வில்லனான ரம்பேல்ஸ்டில்ட்ஸ்கின் லாஸ் ஏஞ்சல்ஸின் மேயராக இருப்பதை தெரிந்து கொள்கிறார்கள். தனது தந்திர சக்திகளை பயன்படுத்தி மாயாஜால உலகில் இருந்து படைகளை நிஜ உலகிற்கு கொண்டு வந்து உலக மக்களை தனது அடிமைகளாக மாற்ற ரம்பேல்ஸ்டில்ட்ஸ்கின் திட்டமிடுகிறான். இந்நிலையில் நிஜ உலகிற்கு வந்த சிண்ட்ரல்லா, ஸ்லீப்பிங் பியூட்டி, ஸ்னோ வைட், ரப்பன்செல் மற்றும் ரெட் ரைடிங் ஹூட் ஆகியோர் தங்களின் மந்திர சக்திகளை உதவியோடு மக்களை காப்பாற்றினார்களா? இல்லையா? என்பது மீதி கதை. ஜெரேமி எம்.இன்மன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதைக்களம் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. அழகிய தேவதைகள் முற்றிலும் புதுமையான தோற்றத்தில் ஆக்ஷன் காட்சிகளில் சண்டையிடுவதை பார்க்க வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளது.வில்லனாக நடித்திருக்கும் காஸ்பர் வான் டியன் தத்ரூபமாக நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து திறம்பட நடித்துள்ளார். படத்தில் இடம்பெறும் பிற நடிகர்களைவிட இவரே நடிப்பில் அசத்தியிருக்கிறார். கதாநாயகிகளை எடுத்துக்கொண்டால் ரெட் ரைடிங் ஹுட்டாக வரும் எலிசபெத் பீட்டர்சென் நன்றாக நடித்துள்ளார். பிற கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளவர்கள் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தலாக நடித்துள்ளனர். ஆனால் கதாநாயகிகளின் தோற்றத்தில் அதிக வித்தியாசம் இல்லாததால் கதாப்பாத்திரங்களின் பெயர்களில் குழப்பம் ஏற்படுகிறது. ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் செயற்கையாக இல்லாமல் இயல்பாக படமாக்கப்பட்டுள்ளது. கிரிஸ் ரைடன்ஹாரின் இசையமைப்பு படத்திற்கு வலு சேர்கிறது. மொத்தத்தில் ‘அவெஞ்சர்ஸ் க்ரிம்’ புதிய அனுபவம்……….

செய்திகள், திரையுலகம்

கங்காரு (2015) திரை விமர்சனம்…

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த நாயகன் அர்ஜூனா, தனது தங்கை பிரியங்காவுடன் கொடைக்கானலுக்கு வருகிறார். அங்கு தம்பி ராமையா இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். அவருடனே இருந்து பெரிய ஆளாக உருவாகும் இருவருக்கும் சொந்தமாக டீக்கடை வைத்துக் கொடுத்து அழகு பார்க்கிறார் தம்பி ராமையா.அர்ஜூனா தனது தங்கை பிரியங்கா மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார். அவளுக்காக எதையும் செய்யத் துணிந்தவராக இருக்கிறார்.அதேஊரில், விபச்சார தொழில் செய்துவருகிறாள் நாயகி வர்ஷாவின் அக்கா. அவளுக்கு ஏஜெண்டாக கலாபவன் மணி இருக்கிறார். இருவரும் சேர்ந்து வர்ஷாவையும் விபச்சார தொழிலுக்கு இழுக்க நினைக்கிறார்கள். ஆனால், வர்ஷாவோ இதற்கு இடம்கொடுக்காமல் அவர்களுடன் போராடி வருகிறாள். இவர்களுடைய கழுகு பார்வை நாயகன் தங்கை மீதும் விழுகிறது. அவளது தங்கையையும் விபசாரத்திற்கு இழுக்க கலாபவன் மணி முயற்சி செய்கிறார். இது நாயகனுக்கு தெரிந்ததும், கலாபவன் மணியை அடித்து துவம்சம் செய்கிறார். இதனால், கலாபவன் மணிக்கும், நாயகனுக்கு பகை ஏற்படுகிறது.இதற்கிடையில், நாயகனின் தங்கை அஜித்தின் தீவிர ரசிகை என்பதை தெரிந்துகொண்ட, ஒருவன் அவளிடம் தனக்கு அஜித்தை தெரியும், அஜித் படங்கள் என்றால் எனக்கு ரொம்ப இஷ்டம் என்று பில்டப் காட்டி அவளிடம் காதல் வலை வீசுகிறான்.ஆனால், இதற்கு நாயகனின் தங்கை பிடிகொடுத்தபாடில்லை. தனக்கு எல்லாமே அண்ணன்தான் என்று அவனை வெறுத்து ஒதுக்குகிறாள். இது நாயகனுக்கு தெரியவருகிறது. அவனை அடித்து உதைக்கிறார். அப்போது அவன், பிரியங்கா மீது அதிக பாசம் வைத்திருப்பதாக கூறுவதை கேட்டதும், அவனையே தனது தங்கைக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார் நாயகன். அதன்படி இருவருக்கும் திருமண ஏற்பாடுகளை செய்கிறார். திருமணத்திற்கு முன்பு மாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்து போகிறார். இதனால் வெறுப்படைந்த பிரியங்கா, திருமணமே வேண்டாம் என்று முடிவெடுக்கிறாள். ஆனால், அவளை தம்பி ராமையாவும், நாயகனும் சேர்ந்து சமதானப்படுத்தி வேறு ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார்கள்.அந்த மாப்பிள்ளையும் கல்யாணத்துக்கு முன்பே மர்மமான முறையில் இறந்துபோகிறான். இப்படி தொடர்ந்து திருமணம் தடைபடுவதற்கு என்ன காரணம் என அனைவரும் குழம்பிப் போகின்றனர்.இதற்கெல்லாம் ஒரே வழி ஊரைவிட்டு காலி பண்ணுவதுதான் என முடிவெடுத்து, வேறு ஊருக்கு சென்று தனது தங்கைக்கு திருமணம் செய்து வைக்கிறார். ஆனால், அங்கும், தங்கையின் மாப்பிள்ளைக்கு விபத்து ஏற்படுகிறது. இதனை விசாரிக்க போலீஸ் அதிகாரியான சாமி களமிறங்குகிறார். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவருகிறது.இறுதியில், இந்த கொலைகளை செய்தது யார்? அவர் இந்த கொலைகளை செய்ய காரணம் என்ன? என்பதை பல்வேறு திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.அர்ஜூனா இந்த படத்தில் நடிக்க முயற்சி செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். முகம் முழுக்க தாடியுடன் இவரை பார்க்கவே பயமாக இருக்கிறது. இந்த முகத்தை வைத்துக்கொண்டு தங்கை மீது பாசம் காட்டுவதை ஏனோ ரசிக்க முடியவில்லை. மேலும், நடிகை வர்ஷாவுக்கு இந்த படத்தில் அதிகமாக வாய்ப்பு இல்லை. ஹீரோவின் தங்கையை சமாதானப்படுத்தும் காட்சிகள், மற்றும் நாயகனுடன் ஒரு பாடலுக்கு மழையில் நனையும் காட்சிகளுக்கு மட்டுமே உதவியிருக்கிறார். தங்கையாக வரும் பிரியங்கா நடிப்பில் பரவாயில்லை. தங்கை கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.இவர்களைவிட தம்பி ராமையா தனது கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். கலாபவன் மணி தனக்கே உரித்தான நகைச்சுவை வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார்.சர்ச்சையான கதைகளை படமாக எடுத்து சர்ச்சை இயக்குனர் என்று பெயர் வாங்கிய சாமி, இந்த படத்தில் அண்ணன்-தங்கை பாசத்தை படமாக்கியிருக்கிறார். அந்த பாசம் அளவு கடந்தால் என்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை அழகாக காட்டியிருக்கிறார். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.படத்திற்கு பெரிய பலம் பாடகர் ஸ்ரீனிவாஸின் இசைதான். பாடல்களாகட்டும், பின்னணி இசையாகட்டும் இரண்டிலும் அறிமுக படத்திலேயே அசத்தி பாராட்டு பெறுகிறார். குறிப்பாக, இடைவேளைக்கு பிறகு வரும் மெலோடி பாடலும், குத்துப் பாடலும் ரசிக்க வைக்கின்றன. ராஜரத்தினத்தின் ஒளிப்பதிவு கொடைக்கானல் மலைப் பகுதியை அழகாக காட்டியிருக்கிறது. மொத்தத்தில் ‘கங்காரு’ தடுமாற்றம்……….

செய்திகள், திரையுலகம்

காஞ்சனா 2 (2015) திரை விமர்சனம்…

லாரன்ஸ் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கேமராமேனாக பணிபுரிந்து வருகிறார். இதே தொலைக்காட்சியில் டாப்சி நிகழ்ச்சிகளை இயக்கும் பணி செய்து வருகிறார். டாப்சியை லாரன்ஸ் ஒருதலையாக காதலித்து வருகிறார்.இந்நிலையில், இவர்களுக்கு போட்டியாக மற்றொரு தொலைக்காட்சி இவர்களை இரண்டாவது இடத்துக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடிக்கிறது. அவர்களை எப்படியாவது முந்தவேண்டும் என்று களத்தில் இறங்குகிறார் சுஹாசினி. இவர் அதே தொலைக்காட்சியில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறார். இதற்காக இயக்குனர்களை சந்தித்து ஆலோசனை கேட்கிறார் சுஹாசினி. அப்போது, இவர்களுக்கு போட்டியான தொலைக்காட்சி ஆன்மீகம், பெண்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை வழங்குவதால்தான் முதலிடத்தை பிடித்துள்ளார்கள். ஆகவே, நாமும் அதேபோல் நிகழ்ச்சிகளை வழங்கலாம் என ஒரு சிலர் ஆலோசனை வழங்குகின்றனர். ஆனால், டாப்சிக்கோ இதில் முழு ஈடுபாடு இல்லை. அமானுஷ்யம், பேய் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை வழங்கினால் மக்களை கவரலாம் என ஆலோசனை கூறுகிறாள். இது சுஹாசினிக்கு சரியென படவே, இதற்கு ஒப்புதல் அளிக்கிறார். அதன்படி, டாப்சி தலைமையில் ஒரு குழுவை அமைத்து இதற்கான படப்பிடிப்புகளை தொடங்க ஏற்பாடு செய்கின்றனர். அதன்படி, இவர்களது குழுவில் லாரன்ஸ், பூஜா, ஸ்ரீமன், மனோபாலா ஆகியோர் இடம்பெறுகின்றனர். ஆரம்பத்திலிருந்து பேய் என்றால் பயப்படும் லாரன்ஸ் இந்த குழுவில் இணைய மறுக்கிறார். பின்னர் தான் ஒருதலையாக காதலிக்கும் டாப்சிதான் இதன் இயக்குனர் என்று தெரிந்ததும் ஒப்புக்கொள்கிறார். பின்னர் இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து மகாபலிபுரம் அருகே உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் சென்று படப்பிடிப்பு நடத்த செல்கின்றனர். அந்த வீட்டில் பேய் இருப்பதுபோன்று இவர்களே உருவாக்கி அதை படமாக்கி வருகின்றனர். அப்போது, அந்த வீட்டுக்கு பின்புறம் உள்ள கடற்கரைக்கு சென்று அங்கு சில காட்சிகளை படமாக்க முடிவு செய்கிறார் டாப்சி. அப்போது, கடற்கரை மணலை தனது கையால் அள்ளிப்போடுவதுபோல ஒரு காட்சியை படமாக்குகிறார். அப்போது, அவரது கையில் ஒரு கயிறு தட்டுப்படுகிறது. அது என்னவென்று பார்ப்பதற்குள், இடி, மின்னல், பலத்த காற்று வீசுகிறது. இதனால், படக்குழுவினர் அனைவரும் பயந்து அந்த இடத்தை விட்டு ஓடுகின்றனர். அப்போது, டாப்சி தன் கையில் இருக்கும் கயிற்றையும் எடுத்து வந்து விடுகிறார். வீட்டுக்குப் போய் அது என்னவென்று பார்க்கும் டாப்சி அதிர்ச்சியாகிறார். இதிலிருந்து திரில்லர் காட்சிகள் ஆரம்பமாகிறது. டாப்சி மற்றும் அவளுடன் வந்தவர்கள் அனைவரையும் பேய் பந்தாடும் காட்சிகள் என படம் முழுக்க திரில்லராக விரிகிறது.லாரன்ஸ் இந்த படத்தில் வெவ்வேறு கெட்டப்புகளில் வந்து அசத்துகிறார். அதிலும், மொட்டை சிவா கதாபாத்திரம் தியேட்டரில் விசிலை அள்ளுகிறது. சிறு குழந்தையாக வரும் கேரக்டரில் இவரா? என்று அசர வைத்திருக்கிறார். பாட்டி கதாபாத்திரத்தில் பிரமிக்க வைக்கிறார். இப்படியாக ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஏதாவது ஒரு வித்தியாசம் காட்டி அனைவரையும் அசர வைத்திருக்கிறார்.டாப்சி இந்த படத்தில் ரொம்பவும் அற்புதமாக நடித்திருக்கிறார். இவருடைய உடம்பில் பேய் புகுந்ததும் ஒவ்வொரு பேய் மாதிரியும் இவருடைய முகத்தில் கொடுக்கும் பாவனைகள் அனைத்தும் ரசிக்கும்படியாகவும், பயத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. இந்த மாதிரியான நடிப்பை டாப்சியிடமிருந்து யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு அற்புதமான நடிப்பு இவருடையது. வழக்கமான தமிழ் சினிமாவின் கதாநாயகி என்பதுபோல் இல்லாமல், இந்த படத்தில் இவருக்கு நல்லதொரு கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் லாரன்ஸ். படத்தில் ‘கங்கா’ என்ற கதாபாத்திரத்தில் முன்னணி நடிகை ஒருவரும் நடித்துள்ளார். அவருடைய நடிப்பும் பலே. அதேபோல் படத்தில் நடித்திருக்கும் கோவை சரளா, மனோபாலா, ஸ்ரீமன், மயில்சாமி ஆகியோரும் படத்தின் காமெடிக்கு ரொம்பவும் உதவியிருக்கிறார்கள். குறிப்பாக, ராகவா லாரன்ஸ் பாத்ரூம் செல்வதற்கு மயில்சாமியை வாட்ச்மேன் வேலை பார்க்கும் காட்சி ரொம்பவும் கலகலப்பு. லாரன்ஸ் தன்னுடைய முந்தைய இரண்டு படங்களைப்போலவே இந்த படத்தையும் அதிபயங்கரமாக, ரொம்பவும் திரில்லராக எடுத்திருக்கிறார். படத்தில் எந்தளவுக்கு திரில்லர் இருக்கிறதோ அதே அளவுக்கு நகைச்சுவையையும் வைத்து ருசிக்க வைத்திருக்கிறார். எல்லா பாகத்தில் இருப்பதுபோல் இந்த படத்திலும் பிளாஷ்பேக் இருக்கிறது. இந்த கதையில் கிட்டத்தட்ட 7 பேருடைய ஆவிகள் ஒருத்தரின் உடம்புக்குள் புகுந்துகொள்வது போல் எடுத்திருக்கிறார். அனைத்தும் அற்புதம், மேலும் பயத்தையும் கொடுக்கக்கூடியவை. இதுபோல், இந்த படத்தில் இன்னொரு மிகப்பெரிய சஸ்பென்ஸையும் வைத்திருக்கிறார் லாரன்ஸ். அதை திரையில் மட்டுமே கண்டுகளியுங்கள். படத்திற்கு மற்றொரு பெரிய பலம் ராஜவேல் ஒளிவீரனின் ஒளிப்பதிவுதான். ஒவ்வொரு காட்சியையும் திரில்லிங்காக காட்டுவதற்கு ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசை மிரட்டல். கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் பயத்தை ஏற்படுத்த கூடிய வகையில் அமைந்திருக்கிறது. மொத்தத்தில் ‘காஞ்சனா 2’ திகில்…………..

செய்திகள், திரையுலகம்

ஓ காதல் கண்மணி (2015) திரை விமர்சனம்…

விவாகரத்து ஆன அப்பா-அம்மாவின் மீதுள்ள வெறுப்பால் திருமணத்தின் மீது நாட்டமே இல்லாமல் இருந்து வருகிறார் நாயகி நித்யாமேனன். இவரைப் போலவே, சென்னையில் அனிமேஷன் படித்துவிட்டு, பெரிய பணக்காரராகி, திருமணம் என்ற பந்தத்துக்குள் சிக்கிவிடாமல், ஜாலியான வாழ்க்கை வாழவேண்டும் என்ற கொள்கைப் பிடிப்போடு இருந்து வருகிறார் நாயகன் துல்கர் சல்மான். ஒருநாள் வேலை தேடி சென்னையிலிருந்து மும்பைக்கு போகிறார் துல்கர் சல்மான். அங்கு நாயகி நித்யாமேனனை எதிர்பாராத விதமாக சந்திக்கிறார். அடுத்தடுத்து இருவருடைய சந்திப்பும் எதிர்பாராதவிதமாக அமைய இருவரும் நெருங்கிய நண்பர்களாகிறார்கள். நாளடைவில் இருவருடைய எண்ணமும் ஒத்துப்போவது போல் இருப்பதால், இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாகிறது. இறுதியில், இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே கணவன்-மனைவி போல் வாழ ஆரம்பிக்கிறார்கள். படுக்கையையும் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் நாயகியை, தான் தங்கியிருக்கும் வீட்டிலேயே கூட்டி வந்து தங்க வைக்கிறார் நாயகன். அப்போது, துல்கரை பார்க்க அவரது அண்ணன்-அண்ணி ஆகியோர் மும்பையில் உள்ள துல்கரின் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது, நித்யாமேனனுடன் தான் இருப்பது அவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக அவளை வெளியே அனுப்பிவிடுகிறார். இறுதியில், இவர்களது மறைமுகமான வாழ்க்கை துல்கரின் வீட்டாருக்கு தெரிந்ததா? இருவரும் திருமணம் செய்துகொண்டார்களா? அல்லது திருமணம் செய்யாமலேயே கணவன்-மனைவியாக வாழ்ந்தார்களா? என்பதை வித்தியாசமான திரைக்கதையுடன் படமாக்கியிருக்கிறார்கள். நாயகன் துல்கர் துறுதுறு நடிப்புடன் எளிதாக கவர்கிறார். அதேபோல் நாயகியுடன் நெருங்கி பழகும் காட்சிகளில் ரொமான்ஸ் கூட்டியிருக்கிறார். நாயகி நித்யாமேனன் அழகோ அழகு. மாடர்ன் பெண்ணாக பளிச்சிடுகிறார். கவர்ச்சியிலும் அதிகம் எல்லை மீறவில்லை. பிரகாஷ் ராஜ், லீலா சாம்சன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இவரது கேமரா கண்கள் அழகாக படமாக்கியிருக்கிறது. ஏ.ஆர். ரகுமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக உள்ளன. பின்னணி இசையும் அருமை. மணிரத்னம் தன்னுடைய வழக்கமான பாணியில் ஒரு அழகான காதல் கதையை படமாக்கியிருக்கிறார். படத்திற்கு பெரிய பலம் இவருடைய வசனங்கள் தான். நாயகனும், நாயகியும் போனில் உரையாடும்போது பேசிக்கொள்ளும் வசனங்கள், நாகரீக உலகில் ஒரு ஆணும் பெண்ணும் எந்தமாதிரி பேசிக் கொள்வார்களோ, அதை அப்பட்டமாக பதிவு செய்திருக்கிறார். மொத்தத்தில் ‘ஓ காதல் கண்மணி’ நவீன காதல்…………

செய்திகள், திரையுலகம்

துணை முதல்வர் (2015) திரை விமர்சனம்…

மஞ்சமாக்கனூர் கிராமம் ஆறுகளால் சூழப்பட்ட கிராமம். சாலை வசதிகள் ஏதும் இல்லாத இந்த கிராமத்தில் உள்ள மக்கள் வெளியில் செல்ல வேண்டுமானால் பரிசல் மூலம்தான் செல்ல வேண்டும். இப்படிப்பட்ட ஊரில் இரண்டே இரண்டு படித்தவர்கள்தான் இருக்கிறார்கள். அதில் ஒருவர் பாக்யராஜ், மற்றொருவர் ஜெயராம். பாக்யராஜ் 5ம் வகுப்பும், ஜெயராம் 3ம் வகுப்பும் வரை படித்திருக்கின்றனர். ஊரில் உள்ள மற்றவர்களெல்லாம் முட்டாள்களாக இருக்கிறார்கள். இதே கிராமத்தில் உள்ள டீக்கடையில் வேலை பார்க்கும் கேரள பெண் ஸ்வேதா மேனனை பாக்யராஜ் காதல் திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பையன் இருக்கிறார். படிப்பறிவில்லாத தன் கிராமத்தில் படிப்பை சொல்லி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தன் தங்கையை டீச்சருக்கு படிக்க வைத்து வருகிறார் பாக்யராஜ். பாக்யராஜின் நண்பரான ஜெயராமும் அந்த ஊரில் வசிக்கும் சந்தியாவும் ஒருவருக்கொருவர் காதலித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஊருக்கு சட்டமன்ற தேர்தல் வருகிறது. பாக்யராஜின் தங்கை, ஜெயராம் உட்பட பலரும் ஒன்று கூடி, இந்த ஊருக்கு இதுவரை ஜெயிச்சு யாரும் எதுவும் செய்யவில்லை. அதனால் நம்ம ஊர் மக்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து தேர்தலில் நிறுத்தலாம் என முடிவு செய்து பாக்யராஜை தேர்தலில் நிறுத்துகின்றனர். அந்த தேர்தலில் பாக்யராஜ் சுயேட்சையாக ஜெயித்து விடுகிறார். தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காமல் போன முக்கிய கட்சிகள் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான பாக்யராஜை அணுகி ஊருக்கு பல நல்லது செய்கிறோம் என்று பாக்யராஜை நம்ப வைத்து ஊருக்கு ஒன்றும் செய்து தராமல் ஏமாற்றுகின்றனர். இந்த நிலையில், ஜெயராமும், பாக்யராஜும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டுகின்றனர். அதாவது பாக்யராஜ் இறந்துவிட்டால் அந்த ஊருக்கு இடைத்தேர்தல் வரும். சாதாரண தேர்தலை விட இடைத்தேர்தலுக்கு அரசியல்வாதிகள் போட்டி போட்டு செலவழிப்பர். எனவே பாக்யராஜ் இறந்துவிட்டதாக எல்லோரையும் நம்பவைத்து ஜெயராம் பாக்யராஜை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார். பாக்யராஜை மறைத்து வைத்ததன் மூலம் அந்த ஊரில் என்ன நடந்தது? இடைத்தேர்தல் வந்ததா? ஊருக்கு நல்லது நடந்ததா? என்பதை அருமையான முறையில் விளக்கியிருக்கிறார்கள். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் பாக்யராஜ். நீண்ட இடைவேளைக்கு பிறகு தான் திரைக்கதையில் மன்னன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். வழக்கமான பாக்யராஜ் படங்களில் இருக்கும் அனைத்து சமாச்சாரங்களும் இப்படத்தில் அமைந்திருக்கின்றன. முதுமை தெரியாத அளவிற்கு இந்த வயதிலும் சிறப்பாக நடித்திருக்கிறார் பாக்யராஜ். ஜெயராமுடன் இணைந்து நடித்திருக்கும் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார்கள். பாக்யராஜின் நடன அமைப்புகள் இல்லாததே வருத்தம்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு வழக்கமான குறும்புதனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ஜெயராம். பாக்யராஜின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்வேதா மேனன் பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். சந்தியாவும் படத்தின் காட்சிக்கேற்ப நன்றாக நடித்துள்ளனர். பாக்யராஜின் மகனாக வரும் சிறுவன் காமெடி காட்சிகளில் கைத்தட்டல் பெறுகிறான்.படத்தில் வரும் தில்லு முல்லு காட்சிகள், குடும்பம் சம்பந்தமான காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் படியாக உள்ளன. காட்சிகளில் சுவாரஸ்யம் இருந்தாலும், ஒரு சில காட்சிகள் மிகவும் நீளமாக உள்ளது. அதை இயக்குனர் விவேகானந்தன் குறைத்திருக்கலாம். ஜெய், பாலாஜி, பிரதீப் ஆகியோரின் இசையில் பாடல்கள் சுமாராக உள்ளது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். கார்த்திக் ராஜா ஒளிப்பதிவில் ஓரளவு ரசிக்க வைத்திருக்கிறது. மொத்தத்தில் ‘துணை முதல்வர்’ வெற்றிக்கூட்டணி…………

செய்திகள், திரையுலகம்

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது (2015) திரை விமர்சனம்…

வேலை தேடி சென்னைக்கு வருபவர்களின் வாழ்வில் ஏற்படும் சிரமங்களை பற்றிய கதையே சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது.பல்வேறு கனவுகளுடன் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து பேச்சுலராக வாழ்ந்து வருகிறார்கள் பாபி சிம்ஹா, லிங்கா, பிரபஞ்செயன். இவர்களில் பாபி சிம்ஹா வித்தியாசமான கதை எழுதி, அதன்மூலம் திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். ஆனால், சென்னையின் சுற்றுப்புற சூழ்நிலை, போதிய வருமானமின்மை போன்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சரியான கதை எழுத முடியாமல் தவிக்கிறார். மற்றொருவரான பிரபஞ்ஜெயன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். லிங்கா சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் பார்க்கும் பெண்களிடமெல்லாம் அசடு வழிகிறார். ஒருமுறை கிராமத்திற்கு லிங்கா செல்லும்போது அங்கு நாயகியை பார்க்கிறார். ஏற்கெனவே திருமணம் முடிந்து விவாகரத்து பெற்றவரான நாயகியுடன் நட்பாக பழகி வருகிறார் லிங்கா. இந்த நட்பு நாளடைவில் பெரிதாக வளர்கிறது.ஒருநாள் தேர்வு எழுதுவதற்காக சென்னை வரும் நாயகியும், லிங்காவும் நெருக்கமாக இருக்கிறார்கள். இதனால் நாயகி கர்ப்பமடைகிறார். அவளுடைய கர்ப்பத்தை கலைக்குமாறு லிங்கா வற்புறுத்துகிறார். ஆனால், அவளோ அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை.இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இவர்கள் விஷயம் பிரபஞ்ஜெயனுக்கு தெரியவர, இவர்களை சேர்த்து வைக்க போராடுகிறார்.முடிவில், இவர்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி கிடைத்ததா? பாபி சிம்ஹா வித்தியாசமான கதை எழுதி சினிமாவில் வெற்றி பெற்றாரா? என்பதே மீதிக்கதை.பாபி சிம்ஹா ஹீரோவாக அவதாரம் எடுத்து வெளிவந்திருக்கும் முதல்படம். தனது முந்தைய படங்கள் போல் இந்த படத்தில் கொஞ்சம் அழகாக இருக்கிறார். நாயகனாக இவரது நடிப்பு ஓகே ரகம்தான். சிம்ஹாவின் நண்பராக வரும் லிங்கா செய்யும் சில்மிஷங்கள் ஆங்காங்கே சிரிக்க வைத்தாலும், சிந்திக்கவும் வைக்கிறது. நாயகிகளான பனிமலர், நீஷா ஆகியோர் கொள்ளை அழகு. படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது பலத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது.வேலை தேடி சென்னைக்கு வரும் இளைஞர்கள் எந்தவிதமான பிரச்சினைகளில் சிக்கி கொள்கின்றனர், அவர்களின் வாழ்க்கை முறை எப்படி உள்ளது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் மருதுபாண்டியன். படத்தின் சில காட்சிகள் சுவாராஸ்யமாக இருந்தாலும், பல காட்சிகள் சோர்வை ஏற்படுத்துகிறது. படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.வினோத் ரத்னசாமியின் ஒளிப்பதிவு படத்துக்கேற்ற சராசரியான ஒளிப்பதிவை பதிவு செய்திருக்கிறார். கேம்லின்- ராஜா இரண்டு இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள் இருந்தாலும் பின்னணி இசை, பாடல்கள் சுமாராகவே உள்ளன. மொத்தத்தில் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ வரவேற்கலாம்…………..

செய்திகள், திரையுலகம்

பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் 7 (2015) திரை விமர்சனம்…

ஹாலிவுட்டில் சக்கை போடு போட்ட ‘பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’ படம் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. தொடர்ந்து 6 பாகங்களாக உலகெங்கும் உள்ள ரசிகர்களை மகிழ்வித்த பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் குழுவினர், தற்போது 7ம் பாகத்தை வெளியிட்டுள்ளனர்.வின் டீசல் குழுவின் உறுப்பினரான சுங்காங் கொலையாவதுடன் 6ம் பாகம் முடிவடைகிறது. அதில், இருந்து 7-வது பாகத்தின் கதை தொடங்குகிறது. 6வது பாகத்தில் பாகத்தில் வில்லனாக நடித்திருந்த எவன்ஸ் சார்பில், அவனது அண்ணன் ஜேசன் சாத்தம் இந்த பாகத்தில் வின் டீசல் குழுவை பழிவாங்க புறப்படுகிறான். முதலில் ஜேசன் சாத்தம் போலீஸ் அதிகாரியான ட்வெயின் ஜான்சனை அடித்து விட்டு செல்கிறான். பின்னர், வின் டீசல், பால் வாக்கர் தங்கியிருக்கும் வீட்டை வெடிகுண்டு வைத்து தகர்க்கிறான். இதனால் கோபமடையும் வின் டீசல், ஜேசன் சாத்தமை அழிக்க செல்கிறான். அப்போது அமெரிக்க அரசாங்கம் குறுக்கிட்டு, ஒருவர் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடிக்கும் அதிநவீன சாதனம் ராம்சி என்னும் பெண்ணிடம் இருப்பதாகவும், அவள் தற்போது தீவிரவாதியின் பிடியில் சிக்கியிருப்பதாகவும், அவளை மீட்டுத் வந்தால் அந்த சாதனத்தின் உதவியுடன் ஜேசன் சாத்தமை பிடித்து தருகிறோம் என்று கூறுகிறது.அதன்படி, வின் டீசல் தன் குழுவுடன் தீவிரவாதியின் பிடியில் இருக்கும் ராம்சியை மீட்டு, ஜேசன் சாத்தமை அழித்தானா? இல்லை ஜேசன் சாத்தம் வின் டீசல் குழுவை அழித்தானா? என்பதை சீறிப் பாயும் கார் ரேசுடன் கூடிய ஏகப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகளுடன் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் முதல் பாகத்தில் இருந்து கடைசி பாகம் வரை விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் இருக்கும். அதேபோல் 7ம் பாகத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. ஒரு நிமிடம் கூட சோர்வடைய வைக்காமல் ஆக்‌ஷன் காட்சிகள் படம் முழுவதும் நிரம்பியிருக்கின்றன. திரைக்கதையும் காட்சியமைப்பும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. மேலும் விமானத்தில் இருந்து கார் விழும் காட்சி (பாரா டைவிங்), அபுதாபியில் கட்டிடங்களுக்கிடையே பாயும் கார், ரோட்ரிக்ஸின் அபுதாபி சண்டை, ஆளில்லா விமானத்தை தாக்கி அழிக்கும் ஜான்சன், பாதாளத்தில் சரியும் பஸ்ஸில் இருந்து தாவும் பால் வாக்கர்… என ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சுவாரஸ்யம் குறையாமல் விறுவிறுப்பான எடிட்டிங் மூலம் படம் நிமிர்ந்து நிற்கிறது. குறிப்பாக அபுதாபியில் உள்ள மிகப்பெரிய கட்டிடங்களுக்கு நடுவே செல்லும் கார் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு விஷுவல் டிரீட்டாக அமைந்திருக்கிறது. படத்தின் முதல் நிமிடம் முதல் இறுதிக்காட்சி வரை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் அளவுக்கு படத்தின் காட்சிகள் வேகமாக செல்கின்றன.இதில் நடித்துள்ள அனைவரின் நடிப்புத்திறனைப் பற்றி விமர்சிக்கத் தேவையில்லை என்னும் அளவுக்கு அனைவரும் அவரவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை கனகச்சிதமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். ஆறாவது படத்துடன் இயக்குனர் ஜஸ்டின் லின் விலக, புதிதாக வந்த ஜேம்ஸ் வான் இந்த படத்தின் மூலம் தனி முத்திரை பதித்து விட்டார் என்றே சொல்லலாம். பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் அனைத்து பாகத்திலும் இடம் பெற்ற பால் வாக்கரின் கடைசிப் பாஸ்ட் சீரிஸ் இது. பால் வாக்கர் எதிர்பாராத விபத்தில் இறந்தபொழுது இந்த பாகம் வராது என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இப்படம் பால் வாக்கர் படமாக அமைந்திருக்கிறது. படம் முடித்ததும், பாலுக்காக சமர்ப்பணம் என்று டைட்டில் வரும்போது அது படக்குழுவினருக்கு மட்டுமல்ல, ரசிகர்கள் அனைவருக்கும்தான் என்று நினைக்க வைக்கிறது.படத்தின் கடைசிக் காட்சியில் உள்ள சென்டிமென்ட் காட்சியைப் பார்க்கும் போது தமிழ் படம் பார்க்கிற உணர்வு ஏற்படுகிறது. மொத்தத்தில் ‘பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’ ஆக்சன் டீரிட்……………

Scroll to Top