தனக்குத் “தமிழர் தலைவர்” பட்டம்!
தமிழர்களுக்கோ “திராவிடர்” முத்திரை!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
திராவிடர் கழகத்தின் நாளேடான “விடுதலை” இதழின் ஞாயிறு மலரில் (வெளியூர் 21.06.2020) சிறப்பு வினா ஒன்றும், அதற்கான சிறப்பு விடையும் வெளிவந்துள்ளன. சிறப்புக் கேள்வியைக் கேட்டவர் சி.பி.எம். கட்சியின் பேராசிரியர் அருணன் அவர்கள். சிறப்பு விடையளித்தவர் திராவிடர் கழகத் தலைவர் ஐயா வீரமணி அவர்கள்.
“பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது ஏன்? அவர்களை எதிர்கொள்வது எப்படி” என்பது வினா!
இந்த வினாவிற்கு விடையளிக்க வேண்டிய காலக்கட்டாயத்தில் ஆசிரியர் வீரமணி அவர்கள் இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன், “தமிழ்த்தேசியவாதிகள் அல்ல, அவர்கள் தமிழ்த்தேசிய வியாதிகள்” என்று மொட்டையாக வீரமணி அவர்கள் சாடிச் சென்றதுபோல் – இன்று ஒதுங்கிக் கொள்ள முடியாது. தமிழ்த்தேசியம் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால், அவர் அகவைக்கும் அனுபவங்களுக்கும், தலைமைக்கும் உரிய பண்புடன் இப்போதும் விடை கூறவில்லை!
“பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் வாழ்வு நீடிப்பதற்காக!”
“இதற்கு முன் பெரியாரை எதிர்த்து எவ்வளவோ பேர் காணாமற் போய் உள்ளனர். இவர்கள் புதிய வரவுகள்”.
மேற்கண்ட பாணியில் திராவிட முகாமின் புதிய வரவுகள் பேசினால் புரிந்து கொள்ளலாம். எவ்வளவோ அனுபவங்களைக் கொண்ட தலைவர் இப்படிப் பேசுவது பொருத்தமன்று. மற்றபடி எந்த பாணியில் பேசலாம் என்று தேர்ந்தெடுப்பது அவர் உரிமை!
“தந்தை பெரியார் கூறும் திராவிடம் என்பதும், திராவிடர் என்பதும் தந்தை பெரியாரின் கற்பனையல்ல. அது வரலாற்று ரீதியான உண்மை. வரலாறு நெடுக ஆரிய – திராவிடப் போராட்டம் நடந்துள்ளது” என்று ஆசிரியர் வீரமணி அவர்கள் அந்த விடையில் கூறுகிறார். ஆனால், “வரலாறு நெடுக நடந்ததாகச் சொல்லப்படும் ஆரிய – திராவிடப் போராட்டத்திற்கு ஒரு வரலாற்றுச் சான்றைக்கூட இதுவரை பெரியாரும் காட்டியதில்லை, அண்ணாவும் காட்டியதில்லை, “திராவிட” ஆய்வாளர்களும் காட்டியதில்லை!
தமிழ்த்தேசியர்களாகிய நாங்கள் சங்ககாலத்திலிருந்து வரலாறு நெடுக நடந்து வந்த ஆரியர் எதிர் தமிழர் போராட்டத்திற்கான சான்றுகள் பலவற்றைக் கூறியுள்ளோம். ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன், ஆரிய மன்னர்களான கனகன், விசயன் ஆகியோர் தலையில் இமயக்கல்லை ஏற்றி வந்து, கண்ணகிக்குச் சிலை எடுத்த தமிழ் வேந்தன் சேரன் செங்குட்டுவன், இமயம் வரை படையெடுத்து வெற்றிக் கொடி நாட்டிய தமிழ்ப் பேரரசன் கரிகால்சோழன் போன்ற வரலாறுகளை நாங்கள் காட்டி வருகிறோம். ஆன்மிகத்திலும் ஆரியத்தை எதிர்த்த திருமூலர், வள்ளலார் எனப் பல வரலாற்றுச் செய்திகளைக் கூறி வருகிறோம்.
“திராவிடர்கள்” ஆரியர்களை எதிர்த்ததற்கு ஒரு வரலாற்றுச் செய்தியைக் கூட இதுவரை – பெரியாரியர்கள் கூறியதே இல்லை. இப்போது வீரமணி ஐயா அவர்களும் கூறவில்லை!
பெரியாரும் அண்ணாவும் திராவிடர் என்பது மனுநீதியில் கூறப்பட்டுள்ளது, மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது, சனகனமண பாட்டில் கூறப்பட்டுள்ளது, உ.வே.சா. சிலைக்குக் கீழே எழுதப்பட்டுள்ளது என்றார்கள். இவை ஆரியச் சான்றுகள்! தமிழ்ச் சான்றுகள் கொடுங்கள் என்று இக்காலத் திராவிடவாதிகளிடம் நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன். இதுவரை யாரும் அவ்வாறான அகச்சான்று கொடுக்கவில்லை.
தமிழர்கள் – தங்களைத் திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்வதை இழிவாகக் கருதியதால் நமது சங்க கால – காப்பியக்கால – பக்திக்கால – சித்தர் கால இலக்கியங்கள் எதிலும் “திராவிடர்” என்ற சொல்லையே பயன்படுத்தவில்லை. விசயநகர ஆட்சியின் கீழ் தமிழ்நாட்டில் தெலுங்கு பிராமணர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தபோதுதான் தமிழ்நாட்டில் “திராவிட” என்ற சொல் புழக்கத்திற்கு வந்தது. அச்சொல்லை 20ஆம் நூற்றாண்டில் திட்டமிட்டு அரசியலில் புகுத்திப் பிரபலப்படுத்தியவர் பெரியார்.
திராவிடர் என்றால் அதில் பார்ப்பனர்கள் சேர மாட்டார்கள்; தமிழர் என்றால் எங்களுக்கும் தமிழ் தாய்மொழி என்று கூறிக் கொண்டு பார்ப்பனர்கள் உள்ளே வந்து விடுவார்கள் என்று பெரியார் சொன்னார்.
திராவிடர்கள் என்ற பெயர் அசலாக யாருக்கு வந்தது? தென்னாட்டுப் பிராமணர்களுக்கு! இதைத் “தென்னாட்டுக் குலங்களும் குடிகளும்” என்ற தலைப்பில் கள ஆய்வு நூல் எழுதிய தர்ஸ்ட்டன், “திராவிடர்” என்பது தென்னாட்டுப் பிராமணர்களை மட்டுமே அசலாகக் குறித்த சொல் என்று குறிப்பிடுகிறார். பிரித்தானியக் கலைக்களஞ்சியத்தில் “திராவிடியன்” என்ற சொல்லுக்கு விளக்கம் கூறும்போது, தர்ஸ்ட்டனின் மேற்கோளை அப்படியே அது காட்டுகிறது (Encyclopaedia Britannica, Vol. 7, Edn. 15 – 1947).
வடமேற்கே இருந்து வந்து குசராத்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய தாய்மொழிகள் பேசும் ஐந்து தாயக மண்டலங்களில் குடியேறிய பிராமணர்கள் “பஞ்ச திராவிடர்கள்” என்று அழைக்கப்பட்டனர். இதைப் பெரியாரிய ஆதரவாளரான பேராசிரியர் தொ. பரமசிவம் அவர்களும் ஒரு நூலில் எழுதியுள்ளார்.
ஆதிசங்கரர் சமற்கிருதத்தில் எழுதிய “சௌந்தர்ய லகரி”யில், “திராவிட சிசு” என்று 75ஆம் எண் பாடலில் கூறுகிறார். அதில் வரும் “திராவிட சிசு” என்பது திருஞானசம்பந்தரைக் குறிக்கிறது என்றும், இல்லை ஆதிசங்கரரையே குறிக்கிறது என்றும் விளக்கவுரையாளர்கள் கூறுகிறார்கள். இவ்விருவருமே பிராமணர்கள்!
சென்னையில் “தென் கனரா திராவிட பிராமணர் சங்கம்” (The South Kanara Dravida Brahmin Association) செயல்பட்டு வருகிறது. 1953 அக்டோபரில் இச்சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. (காண்க : www.skdbassociation.com). இவ்வாறு ஆந்திராவின் நெல்லூர் அருகே உள்ள புதூரில் அவ்வட்டார பிராமணர்களுக்கு மட்டுமே உரிய “புதூரு திராவிட பிராமண சங்கம்” செயல்படுகிறது. (காண்க : www.pudurdravida.com). இவை மட்டுமல்லாமல், ஐதராபாத்திலிருந்து செயல்பட்டு வரும் தெலுங்கு பிராமணர் அமைப்பான “சிறீ கோனசீமா திராவிட சங்கம்” (காண்க : https://www.facebook.com/skds1928), தும்மங்கட்டா திராவிட பிராமணர் சங்கம் – (காண்க http://www.thummagunta.org), உடுப்பி ஸ்தனிகா திராவிட பிராமண சங்கா (Stanika Dravida Brahmana Sangha), உடுப்பி தென்கனரா காசர்கோடு திராவிட பிராமணர் சங்கம் (USKDBES) எனப் பல திராவிட பிராமண சங்கங்கள் இப்போதும் செயல்பட்டு வருகின்றன.
சென்னை மயிலாப்பூர் சமற்கிருதக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிராமணப் பேராசிரியர் ஒருவரின் பெயர் மணி திராவிட் சாஸ்த்திரி! மட்டைப் பந்து வீரர் பெங்களூர் பிராமணரின் பெயர் இராகுல் திராவிட்!
ஓர் இராகுல் திராவிட், ஒரு மணி திராவிட் சாத்திரி – இவர்களை மட்டுமே எடுத்துக் காட்டுகிறோம் என்று குறைபட்டுக் கொள்ளக்கூடிய திராவிடவாதிகள், “திராவிட பிராமண மணமக்கள் சேவை” (Dravida Brahmins Matrimony) என்பதை இணையதளத்தில் தேடிப் பாருங்கள். (https://www.brahminmatrimony.com/brahmin-dravida-grooms, http://www.dravidamatrimony.com/brides). ஆயிரக்கணக்கான திராவிட பிராமண மணமகன் – மணமகள் பெயர்கள் “திராவிட” பின்னொட்டுடன் வந்து விழும்!
தென்னாட்டுப் பிராமணர்களுக்கு மட்டுமே உரிய பெயர்தான் “திராவிடர்” என்று இத்தனை சான்றுகள் தருகிறோம். திராவிடர் என்பது தூய தமிழரைக் குறிக்கும் என்பதற்கு ஒரு சான்றுகூட பெரியாரியர்கள் இதுவரை காட்டியதில்லை!
“தமிழர்” என்று தனித்தன்மையுள்ள இனப்பெயர் இருக்கக்கூடாது; அதைத் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் கலந்த கலப்பினமாகச் சித்தரிக்க வேண்டும் என்பது பெரியாரின் திட்டம்!
பெரியார் தமிழினத்தில் பிறக்கவில்லை என்பதற்காக இந்த வேலையைச் செய்தார் என்று நான் கருதுகிறேன். அதேவேளை பெரியாரின் தாய்மொழி “கன்னடம்” என்பதால் அவரை அயலாராக எள்ளளவும் நானோ, எங்களின் தமிழ்த்தேசியப் பேரியக்கமோ கருதவில்லை. பெரியாரை மட்டுமல்ல, நானூறு – ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வரலாற்றுப் போக்கில் தமிழ்நாட்டில் குடியேறி நிலைத்துவிட்ட தெலுங்கு, கன்னடம், உருது, மராத்தி, சௌராட்டிரம் போன்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களையும் அயலாராக நாங்கள் கருதவில்லை. மரபுவழித் தமிழர்களுக்குரிய உரிமைகள் அவர்களுக்கும் உண்டு என்கிறோம்.
அதேபோல் பிராமண வகுப்பில் பிறந்து, பிராமணிய ஆதிக்கக் கருத்தியலை மறுத்து, சமற்கிருத – இந்தித் திணிப்புகளை எதிர்க்கின்றவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தில் சேர்த்துக் கொள்வோம் என்கின்றோம்.
இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாகவும், கல்விமொழியாகவும் தமிழை ஏற்க வேண்டும் என்பதே நாங்கள் முன்வைக்கும் நிபந்தனை!
பார்ப்பனத் தூசு கூட உள்ளே நுழைய முடியாதபடி “திராவிடர் கழகம்” என்ற பெயர் சூட்டினார் பெரியார் என்று இந்த வினா விடையில் “வீரம்” பேசுகிறார் வீரமணி ஐயா! ஆனால், இவர்தாம் “பார்ப்பன” செயலலிதா அம்மையார்க்கு “சமூகநீதி காத்த வீராங்கனை” பட்டம் கொடுத்தார்.
திராவிடத்தின் இரட்டைக் குழல் துப்பாக்கிகளில் ஒன்றான கலைஞரின் தி.மு.க. 1999இல் ஆரிய பிராமணத்துவா கட்சியான பா.ச.க.வுடன் கூட்டணி சேர்ந்து நடுவண் ஆட்சியில் பங்கு வகித்தது. தி.மு.க.வில் தலைமையின் ஏற்புடன், சாதிவாதமும் சாதி முகாம்களும் வெளிப்படையாகச் செயல்படுகின்றன.
இவ்வாறு திராவிட முகாமில் “பார்ப்பனத் தூசு” அல்ல – பிராமணியச் சாக்கடையே ஓடிக் கொண்டுள்ளது!
“பிராமண மாசு படிந்த சொல் தமிழர்” என்கிறீர்கள். தமிழர் என்ற சொல்லைப் பயன்படுத்தித், “தமிழர்” தலைவர் என்று வீரமணியார் போட்டுக் கொள்வது ஏன்? ஏமாளித் தமிழர்களை மட்டும் திராவிடர் என்று அழைத்துக் கொள்ளச் சொல்வது ஏன்? இந்த வினாவிடை வந்துள்ள இதே “விடுதலை”யில் முதல் பக்கத்தில், தலைப்புச் செய்தி – “காணொலியில் தமிழர் தலைவர் உரை!” என்று செய்தி போடப்பட்டுள்ளது. தனக்குத் “தமிழர்” தலைவர் பட்டம்! தமிழர்களுக்கோ “திராவிடர்” முத்திரை! வீரமணியாரின் தந்திரம் புரிகிறதா?
ஆசிரியர் வீரமணி அவர்கள், தேசிய இனத்திற்குக் கொடுக்கும் விளக்கம் உலக வரலாற்றாசிரியர்கள் யாரும் கூறாத விளக்கமாகும். அதே விளக்கத்தை, இக்கேள்வி கேட்ட பேராசிரியர் அருணனும் கூறியுள்ளாராம்!
“தமிழன் – மொழிப்பெயர்; திராவிடன் – இனப்பெயர்” என்கிறார் ஆசிரியர். தமிழ் என்பதுதான் மொழிப்பெயர் என்று இதுவரை மொழியியல் அறிஞர்களும், வரலாற்று அறிஞர்களும் கூறியுள்ளார்கள். ஆசிரியர் வீரமணி அவர்களோ, தமிழன் என்பது மொழிப்பெயர் என்கிறார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தெலுங்கர்களாக இருக்கலாம்; கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் கன்னடர்களாக இருக்கலாம்; மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மலையாளிகளாக இருக்கலாம். ஆனால், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் தமிழர்களாக இருக்கக்கூடாது! தமிழினத்திற்கு ஏன் இப்படி இரண்டகம் செய்கிறீர்கள்?
தமிழர்கள் பெரியாரையும், வீரமணியாரையும் தலைவராக ஏற்றுக் கொண்டதற்குத் தண்டனையா இது?
நீங்கள் சொல்லும் திராவிடத்தில் தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோரும் இருக்கிறார்கள். அவர்கள் பெரியாரையோ, வீரமணியாரையோ தலைவராக ஏற்றுக் கொண்டதே இல்லை!
தமிழர் திருநாள் என்று தமிழறிஞர்களாலும், பல்வேறு அரசியல் கட்சிகளாலும் வரையறுக்கப்பட்ட “பொங்கல் விழா”வை – “திராவிடர் திருநாள்” என்று சூழ்ச்சியாக மாற்றி வருகிறீர்கள்!
ஓர் இனத்தின் பெயரை அழிப்பது இனப்படுகொலைக்குச் சமம்! ஐயா வீரமணி அவர்களே, கருத்துக் களத்தில் தமிழினப் படுகொலை செய்யாதீர்கள்!
=====================================
தலைமைச் செயலகம்,
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே