தஞ்சைப் பெருவுடையார் குடமுழுக்கில் முழங்கப்பட வேண்டிய தமிழ் மந்திரங்கள்!

தஞ்சை இராசராசேச்சரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகி உடனுறை அருள்மிகு பெருவுடையார் திருக்கோயில் திருக்குடமுழுக்குப் பெருவிழாவை தமிழில் நடத்தும்பொருட்டு, தமிழ்நாடு அரசுக்கு தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் ஐயா இறைநெறி இமயவன் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள தமிழ் மந்திரங்களின் தொகுப்பு :

வேதிகை – குண்டம் – விமானம்

கருவறை – தமிழில் கிரியைகள்

வாயிற்காவலர் வழிபாடு

மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்
காவ லாளர்என் றேவிய பின்னை
ஒருவன் நீகரி காடரங் காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
மணிமு ழாமுழக் கவருள் செய்த
தேவ தேவநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

அன்றுய்ந்த மூவர்க் கமர்ந்து வரமளித்து
நின்றுய்ந்த வண்ணம் நிகழ்வித்து – நன்று
நடைகாவல் மிக்க அருள்கொடுத்துக் கோயில்
கடைகாவல் கொண்டவா போற்றி!

புனித நீர் வழிபாடு

ஏவி இடர்க் கடல் இடைப்பட்டு இளைக்கின்றேனை
இப்பிறவி அறுத்து ஏற வாங்கி ஆங்கே
கூவி அமர் உலகு அனைத்தும் உருவிப் போகக்
குறியில் அறு குணத்து ஆண்டு கொண்டார் போலும்
தாவி முதல் காவிரி நல் யமுனை கங்கை
சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெள் நீர்க்
கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த
குடந்தைக் கீழ்க் கோட்டத்து எம் கூத்தனாரே.

கடல்களின் அரசே வருணா போற்றி!
நன்னீர்ப் பெருங்கடல் பொன்னே போற்றி!
நீருக்கதிபதி நிறைவே போற்றி!
மகரவாகனம் மகிழ்ந்தாய் போற்றி!
புனிதன் சடைஅமர் வனிதை போற்றி!
கங்கையென்னும் மங்கை போற்றி!
யமுனை நதியெனும் நல்லாய் போற்றி!
நருமதை நதியாம் நல்லருள் போற்றி!
சிந்து நதியின் சிறப்பே போற்றி!
காவிரி நதியாய்க் காப்பாய் போற்றி!
துங்கா நதி நங்கா போற்றி!
ஆன் பொருனை அரசி போற்றி!
தண் பொருனைத் தாயே போற்றி!

ஆனைந்து வழிபாடு

பாவ மும்பழி பற்றற வேண்டுவீர்
ஆவில் அஞ்சுகந் தாடு மவன்கழல்
மேவ ராய்மிக வும்மகிழ்ந் துள்குமின்
காவ லாளன் கலந்தருள் செய்யுமே.

ஆவாகி ஆவினில் ஐந்து மாகி
அறிவாகி அழலாகி அவியு மாகி
நாவாகி நாவுக்கோர் உரையு மாகி
நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப்
பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப்
புக்குளால் வாசமாய் நின்றா னாகித்
தேவாகித் தேவர் முதலு மாகிச்
செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே!

இருக்கை வழிபாடு

  1. ஓம் ஆதாரசக்தியே போற்றி!
  2. ஓம் ஆமை இருக்கையே போற்றி!
  3. ஓம் அரவு இருக்கையே போற்றி!
  4. ஓம் சிம்ம இருக்கையே போற்றி!
  5. ஓம் ஓக இருக்கையே போற்றி!
  6. ஓம் தாமரை இருக்கையே போற்றி!
  7. ஓம் சூரிய மண்டல இருக்கையே போற்றி!
  8. ஓம் சந்திர மண்டல இருக்கையே போற்றி!
  9. ஓம் பராசக்தி மண்டல இருக்கையே போற்றி!

பிள்ளையார் எழுந்தருளச் செய்தல்

உருகும் அடியார் அள்ளூற உள்ளே ஊறும் தேன் வருக!
உண்ணத் தெவிட்டாச் சிவானந்த ஒளியே வருக! புலன்வழிபோய்த்
திருகும் உளத்தார் நினைவினுக்குச் சேயாய் வருக! எமை
ஆண்ட செல்வா.. வருக! இணைவிழியாற்
பருகும் அமுதே வருக! உயிர்ப் பைங்கூழ் தழைக்கக் கருணை
மழை பரப்பும் முகிலே வருக! நறும்பாகே வருக! வரைகிழித்த
முருக வேட்கு முன்உதித்த முதல்வா வருக வருகவே
மூரிக் கலேசைச் செங்கழுநீர் முனியே வருக! வருகவே!

முருகன் – எழுந்தருளச் செய்தல்

காக்கக் கடவிய நீ காவாது இருந்தக்கால்,
ஆர்க்குப் பரம் ஆம் அறுமுகவா! – பூக்கும்
கடம்பா! முருகா! கதிர் வேலா! நல்ல
இடம்காண்; இரங்காய், இனி!

ஆதிசிவனார் எழுந்தருளச் செய்தல்

மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழி அடைத்த அமுதே!
ஊறி நின்று என்னுள் எழு பரஞ்சோதி உள்ளவா காண வந்தருளாய்!
தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந்துறையுறை சிவனே
ஈறுலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே!

அம்மை எழுந்தருளச் செய்தல்

பெருந்தேன் இறைக்கும் நறைக் கூந்தல் பிடியே வருக!
முழுஞானப் பெருக்கே வருக! பிறைமெளவிப் பெம்மான்
முக்கண் சுடர்க்கிடும் நல் விருந்தே வருக! மும்முதற்கும் வித்தே வருக!
வித்தின்றி விளைந்த பரமா னந்தத்தின் விளைவே வருக!
பழமறையின் குருந்தே வருக! அருள் பழுத்த கொம்பே வருக!
திருக்கடைக்கண் கொழித்த கருணைப் பெருவெள்ளம்
குடைவார்ப் பெரும்பிணிக்கோர் மருந்தே வருக! பசுங்குதலை
மழலைக் கிளியே வருக! வருகவே! மலையத் துவசன் பெற்ற
பெரு வாழ்வே வருக! வருகவே!

தென்முகக் கடவுள் எழுந்தருளச் செய்தல்

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்!

அண்ணாமலையார் எழுந்தருளச் செய்தல்

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைமுழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே!

கொற்றவை எழுந்தருளச் செய்தல்

தனந்தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனந்தரும்
தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!

பைரவர் எழுந்தருளச் செய்தல்

விரித்த பல்கதிர் கொள் சூலம், வெடிபடு தமருகம், கை
தரித்தது ஓர் கோல கால பயிரவன் ஆகி, வேழம்
உரித்து, உமை அஞ்சக் கண்டு, ஒண் திரு மணிவாய் விள்ளச்
சிரித்து, அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே!

சண்டிகேசர் எழுந்தருளச் செய்தல்

தாதையைத் தாளற வீசிய சண்டிக்கு இவ்வண்டத்தொடும் உடனே
பூதலத் தோறும் வணங்கப் பொற்கோயிலும் போனகமும் அருளிச்
சோதி மணிமுடித் தாமமும் நாமமுந் தொண்டர்க்கு நாயகமும்
பாதகத்துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே!

முத்திரை காட்டுதல்

  1. எழுந்தருள்க!
  2. அமர்ந்தருள்க!
  3. நேர்நின்றருள்க!
  4. இடையூறு தவிர்த்தருள்க!
  5. முப்பேரொளி கேட்டருள்க!
  6. எண் திசை காத்தருள்க!
  7. திருச்சுற்று வருளைத்தருள்க!
  8. சிவசக்தி குறி கண்டருள்க!
  9. மீன் குறி கண்டருள்க!
  10. தாமரைக் குறி கண்டருள்க!
  11. மூவிலை சூலக்குறி கண்டருள்க!
  12. பசுவின்பால் மடிக்குறி கண்டருள்க!
  13. வணக்கக் குறி கண்டருள்க!

தூபம் :

சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்நாமம் மறந்தறியேன்

தீபம் :

இல்லக விளக்கது இருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

திருவமுது :

அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப் பிறவியே.

( தமிழ் அருச்சனை )

மலர் வணக்கம்

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி!
மீளாமே ஆள் என்னைக் கொண்டாய் போற்றி!
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி!
ஓவாத சத்தத்து ஒலியே போற்றி!
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி!
ஆறு அங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி!
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!

பிச்சாடல் பேயோடு உகந்தாய் போற்றி!
பிறவி அறுக்கும் பிரானே போற்றி!
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி!
மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி!
பொய்ச்சார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி!
போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி!
கச்சாக நாகம் அசைத்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!

அம்மை மலர் வணக்கம்

சுரும்புமுரல் கடிமலர்ப் பூங்குழல் போற்றி!
உத்தரியத் தொடித்தோள் போற்றி!
கரும்புருவச் சிலைபோற்றி கவுணியர்க்குப்
பால்சுரந்த கலசம் போற்றி!
இரும்புமனங் குழைத்தென்னை எடுத்தாண்ட
அங்கயற் கண் எம்பிராட்டி
அரும்புமிள நகைபோற்றி யாரணநூ
புரஞ்சிலம்பும் அடிகள் போற்றி!

பன்னிரு திருமுறை விண்ணப்பம்

பிழை பொறுத்தல் –

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே!

மங்கல வாழ்த்து

ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க! – வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க! – செவ்வேள்
ஏறிய மஞ்சை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க!
மாறில்லா வள்ளி வாழ்க! வாழ்க சீர் அடியார் எல்லாம்.!

வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க!
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்!

பெருந்தீப வழிபாடு

கற்பனை கடந்த சோதி கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடியருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி! போற்றி!

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

தமிழ்செல்வன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago