மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்கள் தங்கள் வகித்த பொறுப்பை துறக்க செய்து மக்கள் தேர்ந்தெடுத்த சனநாயக அரசை கவிழ்க்கும் புதிய கட்சித் தாவலை இந்திய ஒன்றியத்திற்கு அறிமுகப்படுத்தி அதில் வெற்றி கண்டிருக்கிறது பாரதீய சனதா கட்சி. இந்துத்துவா, தேச ஒற்றுமை பேசிய பாரதீய சனதா கட்சி, எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்கின்ற நோக்கோடு , எந்த எல்லைக்கும் செல்லுவோம் நாங்கள் என்பதை ஏற்கனவே வடகிழக்கு மாநிலங்களில் அரங்கேற்றியது போல் கர்நாடகத்திலும் அரகேற்றியுள்ளது. முதன் முதலில் அருணாச்சல பிரதேசத்தில் தொடங்கியது பாரதீய சனதாவின் அரசியல் கேலிக்கூத்து. முதலில் எம்.எல்.ஏக்களை கட்சித் தாவ வைத்து தமது பலத்தை அதிகரிப்பது அல்லது எதிர்க்கட்சிகளின் அரசை கவிழ்ப்பது என்று தொடர்ந்த பாரதீய சனதாவின் இந்த யுக்தி இன்று சட்டசபை உறுப்பினர்களை பதவி விலக வைத்து ஆட்சியை கவிழ்க்கும் அளவிற்கு வந்துள்ளது. மேலும் சிறுசிறு கட்சிகளை வளைத்துப் போடும் முயற்சிகளும் பாரதீய சனதா கட்சிக்குக்கு கைவந்த கலையாக மாறியுள்ளது.
வடகிழக்கு கூட்டணி என்கின்ற நோக்கிலே வடகிழக்கு மாநிலங்களுக்கான தனியே ஒரு கூட்டணியை உருவாக்கி அதில் வெற்றியை கண்ட பாரதீய சனதா ,காங்கிரஸ் கட்சியில் இருந்து பல பெரும் தலைவர்களை பல மாநிலங்களில் இழுத்த வண்ணம் உள்ளது காங்கிரஸ் கட்சியையே அது கபளீகரம் செய்தாலும் அது ஆச்சரியப்படுவதற்கில்லை.