அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் தீவிரவாத நாடுகள் பட்டியலில் இருந்து கியூபா நீக்கம் – ஒபாமா அறிவிப்பு!…

தீவிரவாத நாடுகள் பட்டியலில் இருந்து கியூபா நீக்கம் – ஒபாமா அறிவிப்பு!…

தீவிரவாத நாடுகள் பட்டியலில் இருந்து கியூபா நீக்கம் – ஒபாமா அறிவிப்பு!… post thumbnail image
வாஷிங்டன்:-அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே அரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாக தீராப்பகை நிலவி வந்தது. கியூபாவுடனான ராஜ்ய ரீதியிலான உறவை 1961-ம் ஆண்டு அமெரிக்கா முறித்துக்கொண்டது. அது மட்டுமல்லாமல் அந்த நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்தது. இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா மறைந்தபோது, அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளச்சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவுடன் கை குலுக்கினார். சர்வதேச அளவில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் 17-ந் தேதி, ராவுல் காஸ்ட்ரோவை ஒபாமா தொலைபேசியில் அழைத்து, ஒரு மணி நேரம் பேசினார். இரு தரப்பு உறவுக்கு அது நல்லதொரு அடித்தளமாக அமைந்தது. அந்த வகையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று அப்போது இரு தலைவர்களும் முடிவு எடுத்தனர். இந்த நிலையில், கடந்த 11-ந் தேதி பனாமா நாட்டில் நடந்த உச்சி மாநாட்டின்போது, ஒபாமாவும், ராவுல் காஸ்ட்ரோவும் நேருக்கு நேர் சந்தித்து பேசினர். 60 ஆண்டு காலத்தில் இரு நாடுகளின் தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்து பேசியது இதுவே முதல் முறை. இந்தப் பேச்சு, இரு நாட்டு உறவில் ஒரு திருப்புமுனை என ஒபாமா வர்ணித்தார். தீவிரவாதத்துக்கு துணை போகிற நாடுகள் இடம் பெற்றுள்ள கருப்பு பட்டியலில் இருந்து தங்களை நீக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் கியூபா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 1982-ம் ஆண்டு, ஆப்பிரிக்காவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் கிளர்ச்சியாளர்களின் இயக்கங்களுக்கு கியூபா உதவியதாக கூறி, அமெரிக்கா அந்த நாட்டை தீவிரவாத பட்டியலில் சேர்த்தது. ஆனால், தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுவதை நீண்ட காலத்துக்கு முன்பாகவே நிறுத்தி விட்டதாக கியூபா கூறியது.

இந்நிலையில், தீவிரவாத நாடுகள் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்க முடிவு செய்திருப்பதாக அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒபாமா அறிவித்தார். இதன்மூலம் இருநாடுகளுக்கு இடையே மீண்டும் தூதரக உறவுகள் மலருவதற்கான வாய்ப்புகள் கனிந்துள்ளன. இதுதொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒபாமா அளித்த அறிக்கையில், கடந்த 6 மாத காலத்தில் சர்வதேச அளவில் எந்தவொரு தீவிரவாத இயக்கத்துக்கும் கியூபா ஆதரவு அளிக்க வில்லை. எதிர்காலத்தில் எந்தவொரு தீவிரவாத இயக்கத்துக்கும் ஆதரவு அளிக்க மாட்டோம் என்று அந்த நாடு உறுதி அளித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ஒபாமாவின் முடிவை பரிசீலிக்க அமெரிக்க பாராளுமன்றத்துக்கு 45 நாட்கள் அவகாசம் உள்ளது. ஆனால் இரு சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் இந்த முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாதது வரையில், ஒபாமா முடிவை நிறுத்த முடியாது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என தகவல்கள் கூறுகின்றன. ஒபாமாவின் இந்த முடிவை அவரது ஜனநாயகக்கட்சி பாராட்டி உள்ளது.ஒபாமாவின் முடிவை கியூபா வரவேற்றுள்ளது. இது நியாயமான முடிவு என்று அந்த அரசு கூறி, அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கியூபா, தீவிரவாத நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதால், அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளும் அகலும் காலம் தொலைவில் இல்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி