சொந்த மண்ணில் சாதித்த இந்தியா 2011 உலக கோப்பை – ஒரு பார்வை…

10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய ஆசிய நாடுகள் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை இணைந்து நடத்தின. பாகிஸ்தானும் இந்த உலக கோப்பையை நடத்துவதில் முதலில் கைகோர்ப்பதாக இருந்தது. ஆனால் 2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் எதிரொலியாக பாகிஸ்தான் கழற்றி விடப்பட்டது. இருப்பினும் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பாகிஸ்தானின் லீக் ஆட்டங்கள் அனைத்தும் இலங்கை மண்ணில் நடத்தப்பட்டன. இதில் பெர்முடா, ஸ்காட்லாந்து நீக்கப்பட்டு அணிகளின் எண்ணிக்கை 16-ல் இருந்து 14ஆக குறைக்கப்பட்டது. முந்தைய உலக கோப்பைகளில் கடைபிடிக்கப்பட்ட குழப்பமான சூப்பர் சிக்ஸ், சூப்பர்-8 முறைகளும் அடியோடு ஒழிக்கப்பட்டன. கடந்த உலக கோப்பையில் குறைந்த அணிகளுடன் குரூப் பிரிக்கப்பட்டதால், ஒரு சில அதிர்ச்சி தோல்வி காரணமாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எதிர்பாராதவிதமாக முதல் சுற்றுடன் நடையை கட்டின.

இது போன்று பெரிய அணிகள் ஆரம்பத்திலேயே வெளியேறுவதை தவிர்ப்பதற்காக இந்த தடவை அணிகள் இரு பிரிவாக மட்டும் பிரிக்கப்பட்டன. நடுவர்களின் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் அதை எதிர்த்து அப்பீல் செய்யும் முறையும் (டி.ஆர்.எஸ்.) அறிமுகம் ஆனது. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே, கனடா, கென்யா அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளும் இடம் பெற்றன.இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதியை எட்டும். சொந்த மண்ணில் போட்டிகள் நடந்ததால் டோனி தலைமையில் களம் இறங்கிய இந்திய அணி மீது பலமான எதிர்பார்ப்பு நிலவியது. அதை நிறைவேற்றும் வகையில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை சந்தித்த இந்திய அணியினர் முந்தைய உலக கோப்பையில் விழுந்த அடிக்கு வட்டியும் முதலுமாக பழிதீர்த்தனர். இந்த ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 370 ரன்கள் குவித்தது.

ஷேவாக் 175 ரன்களும் (14 பவுண்டரி, 5 சிக்சர்), கோலி 100 ரன்களும் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். இதில் 87 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வங்காளதேசத்தை தோற்கடித்தது. லீக் சுற்றில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஆட்டம் கடைசி நிமிடம் வரை திக்..திக்..நிறைந்ததாக மெய்சிலிர்க்க வைத்தது.பெங்களூரில் நடந்த இந்த ஆட்டத்தில் சச்சின் தெண்டுல்கரின் சதத்தின் உதவியுடன் (120 ரன்) இந்திய அணி 338 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டிராசின் (158 ரன்) சதத்தால் துரிதமாக முன்னேறிய போதிலும் இறுதி கட்டத்தில் இந்திய பவுலர்களின் சாமர்த்தியத்தால் இந்த ஆட்டம் சமன் (டை) (இங்கிலாந்து 8-338 ரன்) ஆனது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மட்டும் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய இந்திய அணி நெதர்லாந்து, அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளை எளிதில் தோற்கடித்து கால்இறுதியை உறுதி செய்தது. தென்ஆப்பிரிக்கா (10 புள்ளி), இங்கிலாந்து (7 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (6 புள்ளி) ஆகிய அணிகளும் கால்இறுதிக்கு முன்னேறின.

‘ஏ’ பிரிவில், உலக கோப்பையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி முதல்முறையாக தோல்வியை சந்தித்தது. உலக கோப்பையில் 34 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் ராஜநடை போட்டு வந்த ஆஸ்திரேலியாவுக்கு, லீக் சுற்றில் பாகிஸ்தான் முட்டுக்கட்டை போட்டது.கொழும்பில் நடந்த இந்த லீக்கில் ரிக்கிபாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியாவை 176 ரன்களில் அடக்கி பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லீக் முடிவில் இந்த பிரிவில் பாகிஸ்தான் (5 வெற்றி, ஒரு தோல்வியுடன் 10 புள்ளி), இலங்கை (9 புள்ளி), ஆஸ்திரேலியா (9 புள்ளி), நியூசிலாந்து (8 புள்ளி) ஆகிய அணிகள் கால்இறுதியை அடைந்தன. கால்இறுதி ஆட்டங்களில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசையும், இலங்கை 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும் பந்தாடின. வெட்டோரி தலைமையிலான நியூசிலாந்து அணி 49 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி 6-வது முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.
நாக்-அவுட் சுற்றுகளில் வெற்றி பெற்றதில்லை என்ற தென்ஆப்பிரிக்காவின் துரதிர்ஷ்டம் இந்த முறையும் நீடித்தது. இன்னொரு கால்இறுதியில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் ஆமதாபாத்தில் மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரிக்கிபாண்டிங் தனது 30-வது சதத்தை பதிவு செய்தார்.

பிறகு ஆடிய இந்திய அணி தெண்டுல்கர் (53 ரன்), கவுதம் கம்பீர் (50 ரன்), யுவராஜ்சிங் (57 ரன்) ஆகியோரின் நேர்த்தியான ஆட்டத்தால் 47.4 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலக கோப்பையில் 24 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்தியாவிடம் ஆஸ்திரேலிய அணி மண்ணை கவ்வியது.1992-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி இறுதி சுற்றில் இடம் பெற முடியாமல் போனதும் இது தான் முதல்முறையாகும். இதைத் தொடர்ந்து அரைஇறுதி ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை விரட்டி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மற்றொரு அரைஇறுதியில் பரம வைரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மொகாலியில் மோதின. பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி மற்றும் அரசியல் பிரபலங்களுக்கு மத்தியில் இந்த அரைஇறுதி நடந்தது. இரு நாட்டு பிரதமர்களுக்கும் வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். உச்சக்கட்ட டென்ஷனுக்கு இடையே முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்தது. 6 முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய சச்சின் தெண்டுல்கர் அதிகபட்சமாக 85 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார். இன்னும் 15 ரன் எடுத்திருந்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 100-வது சதத்தை ருசித்திருப்பார். பின்னர் விளையாடிய அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 231 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற பெருமையையும் தக்க வைத்துக் கொண்டது. இந்திய தரப்பில் பந்து வீசிய ஜாகீர்கான், நெஹரா, முனாப் பட்டேல், யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங் அனைவரும் சொல்லி வைத்தார் போன்று தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பாகிஸ்தானை வீழ்த்தியதும் இந்தியா முழுவதும் ரசிகர்கள் இரவில் பட்டாசு வெடித்து உற்சாகத்தில் திளைத்தனர். இதையடுத்து இந்தியா-இலங்கை இடையிலான இறுதி ஆட்டம் ஏப்ரல் 2-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் அரங்கேறியது. உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இரண்டு ஆசிய அணிகள் சந்திப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். டாஸ் போடப்பட்ட போது இலங்கை கேப்டன் சங்கக்கரா என்ன கேட்டார் என்பது சரியாக காதில் விழவில்லை என்று போட்டி நடுவர் ஜெப் குரோவ் கூறியதால் குழப்பம் ஏற்பட்டது. பிறகு இரண்டாவது முறையாக நாணயம் சுண்டப்பட்ட போது, டாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் சங்கக்கரா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.இதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்தது. மஹேலா ஜெயவர்த்தனே சதம் அடித்து (103 ரன்) ஜொலித்தார். பின்னர் ஆடிய இந்திய அணியில் முதல் ஓவரிலேயே ஷேவாக் (0) மலிங்காவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். சச்சின் தெண்டுல்கரும் (18 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய கவுதம் கம்பீர் தூண் போல் நிலைத்து நின்று தனது பங்குக்கு 97 ரன்கள் திரட்டி வெற்றிக்கு அடித்தளமிட்டார். மிடில் வரிசையில் கேப்டன் டோனி திடீர் விசுவரூபம் எடுத்ததால், இந்திய அணியின் ஸ்கோர் எகிறியதுடன் இலக்கையும் வேகமாக நெருங்கியது. கடைசியில் தனக்கே உரிய பாணியில் அட்டகாசமான ஒரு சிக்சரை பறக்க விட்ட டோனி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்து ஒட்டுமொத்த தேசத்தையும் எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 277 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடி சொந்த மண்ணில் சாதித்தது. 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு முறை உலக கோப்பைக்கு முத்தமிட்டது. இறுதி ஆட்டத்தில் ஒரு வீரர் (ஜெயவர்த்தனே) சதம் அடித்தும் அந்த அணி வெற்றி பெற முடியாமல் போனது இதுவே முதல் முறையாகும். 91 ரன்கள் (8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசிய டோனி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த உலக கோப்பையுடன் இலங்கை சுழல் சூறாவளி முரளிதரன் ஓய்வு பெற்றார். இந்த உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றதில் யுவராஜ்சிங்கின் பங்களிப்பு மகத்தானது. அவர் பேட்டிங்கில் மிரட்டியதுடன் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராகவும் பிரமாதப்படுத்தினார். இதனால் சில ஆட்டங்களில் இந்திய அணி கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் களம் இறங்க முடிந்தது. சதம், 4 அரைசதம் உள்பட 362 ரன்களுடன் 15 விக்கெட்டுகளும் வீழ்த்தி ஆல்-ரவுண்டராக பிரகாசித்த யுவராஜ்சிங் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த உலக கோப்பைக்கு பிறகு அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து குணமடைந்தாலும், 2015-ம் ஆண்டு உலக கோப்பையில் அவருக்கு இடம் கிட்டவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago