29ம் தேதி ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமீன் மனு, மறுநாள் 30ம் தேதி கர்நாடகா ஐகோர்ட்டின் விடுமுறை கால நீதிபதியால் விசாரிக்கப்பட்டது. அவர் 6ம் தேதி ஐகோர்ட்டு பெஞ்சில் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் என்றார்.இதையடுத்து ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த 1ம் தேதி அந்த மனுவை விசாரித்த விடுமுறை கால கோர்ட்டு நீதிபதி, இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை வழக்கமான அமர்வில் நடத்தப்படுவதுதான் பொருத்தமானதாக இருக்கும் என்று கூறி 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அதன்படி ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று பெங்களூர் ஐகோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஐகோர்ட் நீதிபதி ஏ.வி.சந்திர சேகரா முன்னிலையில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது.73–வது வழக்காக இந்த மனு விசாரிக்கப்படும் என்று பெங்களூர் ஐகோர்ட்டில் பட்டியலிடப்பட்டிருந்தது. அந்த வரிசைப்படி நடந்தால் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை சற்று தாமதமாகும் என்று கருதப்பட்டது.எனவே பெங்களூர் ஐகோர்ட்டு காலை 10.30 மணிக்கு கூடியதும் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு முன்னுரிமை கொடுத்து, அதை முன் கூட்டியே முதல் மனுவாக காலையிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை நீதிபதி சந்திர சேகரா ஏற்றுக்கொள்ள வில்லை. வரிசைப்படிதான் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை நடத்தப்படும் என்றார்.
இந்நிலையில் 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் 1 மணி நேரத்தில் 72 மனுக்கள் மீதான விசாரணை மின்னல் வேகத்தில் நடந்து முடிந்தது. அதன்பிறகு ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை பகல் 11.30 மணிக்கு தொடங்கியது.அரசுத் தரப்பில் பவானிசிங் ஆஜரானார். ஜெயலலிதா தரப்பில் வக்கீல்கள் ராம் ஜெத்மலானி, பி.குமார், எம்.ஏ.வேணு கோபால், எஸ்.செந்தில், கே.சி.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆஜரானார்கள். சசிகலா, இளவரசி தரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகி வாதாடினார்கள்.ஜெயலலிதா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி, தனக்கு நீண்ட நேரம் பேச அனுமதி தர வேண்டும் என்று கூறினார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி சந்திரசேகரா, நீங்கள் பேசுங்கள். கேட்க தயாராக இருக்கிறேன் என்றார்.இதையடுத்து வக்கீல் ராம்ஜெத்மலானி தனது வாதங்களை எடுத்து வைத்தார். ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறிய அவர், அதற்காக சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய தீர்ப்புகளை சுட்டிக் காட்டினார். அவர் கூறியதாவது:–ஊழல் வழக்கில் 5 ஆண்டு தண்டனை பெற்ற லல்லு பிரசாத் யாதவுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் கொடுத்துள்ளது. அந்த வகையில் ஜெயலலிதாவுக்கும் ஜாமீன் வழங்கலாம்.அதோடு சிறப்புக் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். ஏற்கனவே இது போன்ற வழக்குகளில் சிறப்பு கோர்ட்டின் தீர்ப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ராம்ஜெத் மலானி சுட்டிக்காட்டினார். அந்த ஆவணங்களையும் அவர் கோர்ட்டில் சமர்ப்பித்தார்.
ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள் வாதாடும்போது அவரது உடல் நிலை, வயது, கட்சி தலைவருக்குரிய சமுதாயப் பொறுப்பு ஆகியவற்றை சுட்டிக் காட்டி ஜாமீனில் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும் என்றனர். ஜெயலலிதா ஏற்கனவே தன் ஜாமீன் மனுவில் தனக்கு சர்க்கரை நோயும், உயர் ரத்த அழுத்தமும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.ஆனால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று அரசு வக்கீல் பவானி சிங் வாதாடினார். அது போல லஞ்ச ஒழிப்புத்துறை சார்பிலும் ஜெயலலிதாவை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.ஜெயலலிதா செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவர் என்பதால், அவர் தன் செல்வாக்கை பயன்படுத்தி சொத்துக்குவிப்பு வழக்கின் சாட்சிகளை கலைத்து விடக்கூடும். எனவே சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை கவுரவிக்கும் வகையில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கொடுக்காமல் அவரது அப்பீல் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.அரசு வக்கீல் பவானி சிங்கின் எதிர்ப்புக்கு ஜெயலலிதா வக்கீல் ராம் ஜெத்மலானி உடனடியாக பதில் அளித்தார். அவர் கூறியதாவது:–ஜெயலலிதா சட்டத்துக் குட்பட்டு செயல்பட கூடியவர். அவர் சட்ட விதிகளுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வார். ஜாமீன் கொடுத்தால் அவர் தலை மறைவாக மாட்டார். நாட்டை விட்டு அவர் தப்பி ஓடி விடமாட்டார். அவர் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் கொடுக்க வேண்டும்.
ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு அரசு தரப்பு கருத்தைக் கேட்காமலே ஜாமீன் வழங்க சட்டத்தில் இடம் உள்ளது.அரசு தரப்பு கருத்தை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே ஜெயலலிதா வின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.இவ்வாறு ராம் ஜெத்மலானி வாதாடினார்.அத்துடன் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை முடிந்தது. அதன் பிறகு சசிகலா ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தது.
சசிகலா, இளவரசி ஆகியோர் சார்பில் மும்பை மூத்த வக்கீல் அமித் தேசாய் ஆஜராகி வாதாடினார். அவர் சசிகலா மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்றார். வக்கீல் அமித்தேசாய் மேலும் கூறியதாவது:–
சசிகலா, இளவரசி ஆகியோர் மீதான குற்றச் சாட்டுக்கள் உரிய முறையில் நிரூபிக்கப்படவில்லை. மேலும் அவர்களது சொத்துக்களை நிபுணர்கள் அதிக மதிப்பில் மதிப்பீடு செய்துள்ளனர். சொத்துக்கள் சரியாக மதிப்பீடு செய்யப்படவில்லை. இவை தவிர ஜெயலலிதாவின் பினாமி சசிகலா என்று கூறப்படுவது தவறு. சசிகலா யாருடைய பினாமியும் அல்ல. அது நிரூபணம் செய்யப்படவில்லை.எனவே சந்தேகத்தின் அடிப்படையில் கோர்ட்டு எந்த முடிவுக்கும் வர முடியாது. அத்தகைய முடிவு சரியானது அல்ல. எனவே தனிக்கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு வக்கீல் அமித் தேசாய் வாதாடினார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வக்கீல் பவானி சிங், சசிகலாவுக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என்றார்.
ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை 11.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை 2 மணிநேரம் நீடித்தது. அதன் பிறகு மதிய உணவுக்காக இடைவேளை விடப்பட்டது.மீண்டும் பிற்பகல் 2.30 மணிக்கு ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இளவரசி, சுதாகரன் ஆகியோரின் வழக்கறிஞர்களின் வாதம் முடிந்தபிறகு, அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டதாக செய்தி வெளியானது. இதனால், 11 நாள் சிறைவாசம் முடிந்து ஜெயலலிதா வெளியே வருவார் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க.வினர் உற்சாகமடைந்தனர். பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.ஆனால், சிறிது நேரத்திற்குள் நீதிமன்றத் தீர்ப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானபோது, ஜெயலலிதாவின் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது தெரியவந்தது. இதேபோல் மற்ற மூவரின் ஜாமின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. அவசரமாக ஜாமின் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதி சந்திர சேகரா தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.ஊழலுக்கு எதிரான வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் பல்வேறு முன்மாதிரிகளை வகுத்துள்ளது. அதன் அடிப்படையில் ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன. நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு தெளிவாக உள்ளது. ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் ஜெயலலிதா சொத்து வாங்கியது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜாமினில் விடுவிக்க வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்கள் ஏற்க முடியாதவை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.இந்த தீர்ப்பைக் கேட்டதும் அ.தி.மு.க. தொண்டர்கள் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர். பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ஜெயலலிதாவுக்கு எப்படியும் இன்று ஜாமீன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் நேற்று முதலே பெங்களூருக்கு வந்து காத்திருந்த அ.தி.மு.க. பிரமுகர்கள் கடும் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே