பச்சையப்பா இது தேவையாப்பா….

பஸ் தினம் என்ற போர்வையில் சென்னையில் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் அட்டகாசம், எல்லை தாண்டிப் போக ஆரம்பித்திருக்கிறது. நேற்று பச்சையபப்பன் கல்லூரி மாணவர்கள் நடத்திய பஸ் தின நிகழ்ச்சி பெரும் வன்முறையாக மாறியது. பெண் துணை கமிஷனர், பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 35 பேரை மாணவர்கள் தாக்கியதில் அவர்கள் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக 300 மாணவர்கள் மீது போலீஸார் கொலை மிரட்டல், பொது அமைதிக்குப் பங்கம் உள்பட 10 பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டு போலீஸாரைக் கடுமையாக தாக்கிய மாணவர்களை அடையாளம் காண அடையாள அணிவகுப்பு நடத்தப்படவுள்ளது.

பஸ் தினம் என்ற பெயரில் ஆண்டுதோறும் மாணவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது பல காலமாக நடந்து வருகிறது. ஆனால் சென்னையைத் தவிர மற்ற ஊர்களில் இது ஒரு ஜாலியான நிகழ்ச்சியாக நடைபெறுகிறதே ஒழிய, வன்முறையாகவோ அல்லது மக்கள் முகம் சுளிக்கும் வகையிலோ நடைபெறுவதில்லை. ஆனால் சென்னையில் மட்டும் இது அத்து மீறல் நிகழ்வாக நடந்து வருவதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சமீபத்தில்தான் இதுபோன்ற வன்முறையை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை ஏன் அனுமதி தருகிறது என்று உயர்நீதிமன்றம் கேட்டிருந்தது. இருப்பினும் மாணவர்களின் உற்சாகத்தைத் தடுக்க விரும்பாத காவல்துறை பாதுகாப்புடன் பஸ் தின நிகழ்ச்சிகளை அனுமதித்து வருகிறது. ஆனால் நேற்று தங்களுக்குப் பாதுகாப்பாக வந்த போலீஸாரையே கடுமையாக தாக்கி, பெண் துணை கமிஷனரையும், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரையும் ஆபாசமாக பேசி மது பாட்டில்கள், கற்களால் தாக்கி தங்களது முட்டாளதனத்தை வெளிப்படுத்தியுள்ளனர் மாணவர்கள்.

நேற்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 15பி மாநகர பஸ்சில் பஸ் தின விழா கொண்டாடப்போவதாக அறிவித்திருந்தனர். முதலில் சென்னை பாரிமுனையில் இருந்து மாணவர்கள் 15பி பஸ்சில் ஊர்வலமாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து பாரிமுனையில் இருந்து ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையிலும், கீழ்ப்பாக்கம் பகுதியிலும் வழிநெடுகிலும், ஏதோ அரசியல் கட்சிகளின் பேரணிக்குக் கொடுக்கப்படுவதைப் போல போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் பகல் 11 மணி அளவில் சுமார் 300 மாணவர்கள் எழும்பூர் ரயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் கூடினார்கள். முதலில் அவர்களுக்கு பஸ்களை வழங்க மாநகர போக்குவரத்துக்கழகம் மறுத்தது. இருப்பினும் மாணவர்கள் பிரச்சினை வராது என்று உறுதிமொழி அளித்ததைத் தொடர்ந்து பஸ்கள் தரப்பட்டன. 3 பஸ்களில் மாணவர்கள் ஏறிக் கொண்டனர். அவர்களுக்குப் பாதுகாப்பாகவும், பிரச்சினை ஏற்படுவதை தடுப்பதற்காகவும், பெண் துணை கமிஷனர் லட்சுமி, உதவி கமிஷனர் விஜயராகவன், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் பெரும் போலீஸ் படை பஸ்களின் பின்னாலேயே சென்றது.

கல்லூரி செல்லும் வரை மாணவர்கள் பெரிய அளவில் பிரச்சினை தரவில்லை. ஆனால் கல்லூரியை அடைந்ததும் ஒரு பிரிவு மாணவர்கள் கல்லூரிக்குள் போகாமல் வெளியிலேயே இருந்தபடி ஆட்டம் பாட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அவர்களை அணுகிய போலீஸார், அதுதான் பஸ் தினம் முடிந்து விட்டதே, உள்ளே போங்கள் என்று கூறினர். இதையடுத்து போலீஸாருடன், மாணவர்கள் வாக்குவாதத்தில் இறங்கினர்.

அவர்களை சமாதானப்படுத்த துணை கமிஷனர் லட்சுமி முயன்றார். ஆனால் அவரை நோக்கி சில மாணவர்கள் மது பாட்டில்களையும், கற்களையும் வீசித் தாக்கினர். மேலும் அவரை நெருக்கித் தள்ளவும் முயன்றனர். சிலர் ஆபாசமாகவும் பேசினர். இதையடுத்து துணை கமிஷனரைக் காக்கும் வகையில், உதவி கமிஷனரும், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியும் முன்னால் வந்தபோது கல்வீச்சில் அவர்கள் காயமடைந்தனர். ராஜேஸ்வரியின் தலையில் கற்கள் பட்டதில் ரத்தம் கொட்டத் தொடங்கியது. இருப்பினும் அவர் அதைப் பொருட்படுத்தாமல் மாணவர்களை உள்ளே செல்லுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது துணை கமிஷனர் லட்சுமி, மாணவர்கள் மீது தடியடி நடத்த வேண்டாம் என்று போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதனால் போலீஸார் தடியடி நடத்தாமல், தங்களை நோக்கி வீசப்பட்ட கற்களையும் பொருட்படுத்தாமல் தடுப்புகளால் மறைத்தபடி, மாணவர்களை உள்ளே செல்லுமாறு வாய் மூலமாக கூறினர்.

இந்த நிலையில் ஈவேரா சாலையில் கற்கள் வீசப்பட்டதில் சாலையில் சென்ற வாகனங்கள் சில சேதமடைந்தன. பொதுமக்கள் சிலரும் காயமடைந்தனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சமயத்தில் திடீரென கல்லூரி வளாகத்திற்குள்ளிருந்து கல்வீச்சு பலமாக எழுந்தது. செருப்புகள், உடைந்து போன டியூப் லைட்டுகள், இரும்புக் குழாய்கள் என சரமாரியாக வீசப்பட்டன. இதனால் நிலைமை மோசமடைந்தது. இனியும் அமைதி காக்க முடியாது என்று உணர்ந்த போலீஸார் மாணவர்கள் மீது லேசான தடியடி நடத்தி உள்ளே விரட்டினர்.

இதையடுத்து பயந்து போன மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் ஓடினர். கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்களை விரட்டிய போலீஸார் உள்ளே செல்லாமல் அங்கேயே நின்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் மாணவர்கள் கல்வீச்சை நிறுத்தவில்லை. தொடர்ந்து வீசியபடி இருந்தனர். இதில் 35 போலீஸார் காயமடைந்தனர். அவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சக போலீஸார்.

இந்த நிலையில் கல்லூரி முதல்வர் சேகர் அங்கு வந்தார். மாணவர்களை சமாதானப்படுத்த முயன்ற அவருக்குப் பலன் கிடைக்கவில்லை. ஆனால் வெளியே நின்றிருந்த போலீஸாரிடம் வந்து உடனடியாக அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று கூறினார். அதற்கு துணை கமிஷனர் லட்சுமி, முதலில் மாணவர்களை கல்வீச்சை நிறுத்தச் சொல்லுங்கள். உள்ளே நடந்தால் பரவாயில்லை, வெளியில் செல்லும் பொதுமக்களையும், போக்குவரத்தையும் உங்களது மாணவர்கள் பாதிக்கிறார்கள். அதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும் என்று கோபத்துடன் கேட்டார். இதையடுத்து மாணவர்களிடம் மீண்டும் பேசினார் சேகர். ஆனால் சமரசம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் அங்கு இணை ஆணையர் சாரங்கன் வந்து சேர்ந்தார். கல்லூரி முதல்வரை அழைத்த அவர், அவருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். 15 நிமிடம் டைம் தருகிறேன். அதற்குள் அனைவரும் போய் விட வேண்டும். பெண் என்றும் பாராமல் துணை கமிஷனரை ஆபாசமாக பேசியுள்ளனர். பெண் இன்ஸ்பெக்டரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் நலன் கருதித்தான் அமைதி காக்கிறோம். ஒன்று நீங்கள் அவர்களை கட்டுப்படுத்துங்கள், இல்லாவிட்டால் எங்களிடம் விடுங்கள் என்று கடுமையாக எச்சரித்தார்.

இதையடுத்து இணை ஆணையரின் எச்சரிக்கையை மாணவர்களிடம் சேகர் சொல்ல, அதன் பிறகு மாணவர்கள் சற்று தணிந்து கல்வீச்சை நிறுத்தி விட்டு கலைந்து செல்ல ஆரம்பித்தனர். அவர்களைப் போலீஸார் ஒன்றும் செய்யவில்லை.

மாணவர்களின் இந்த அட்டகாசத்தால் அந்தப் பகுதியே பெரும் போர்க்களமாக காணப்பட்டது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

படிக்கும் மாணவர்களுக்கு கொண்டாட்டம் தேவைதான், ஆனால் தங்களைக் காக்க வந்த போலீஸாரையும் தாக்கி, அப்பாவி பொதுமக்களையும் அச்சுறுத்தி, வாகனப் போக்குவரத்தையும் பாதித்து ஒரு கொண்ட்டாட்டம் அவசியம்தானா. படிக்கும் மாணவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago