ரஜினி கொடுத்த பதில்கள்…

என்னை இந்த உயரத்தில் தூக்கி வைத்த தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் பெருமை தரும் விஷயத்தைச் செய்வேன் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

அதேபோல தான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

சனிக்கிழமை மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 40 வது ஆண்டு விழாவில் அவர் இதைத் தெரிவித்தார்.

ஒவ்வொரு இயக்குநரும் தாங்கள் அறிமுகப்படுத்திய மாணவரிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு மகுடம் வைத்தது போல அமைந்தது குரு கே.பாலச்சந்தர் – மாணவர் ரஜினி நேர்காணல் .

நிகழ்ச்சியை கே.பி இப்படி ஆரம்பித்தார்:

“ரஜினி இன்றைக்கு உலக சினிமாவுக்குப் போய்விட்டார். இந்திய சினிமாவின் உச்ச நடிகர். எவ்வளவோ வளர்ந்து விட்ட நிலையிலும் இன்றும் எனக்கு அவர் மாணவன்தான். என்னை எப்போதும் குருவாகவே மதிக்கிறார். அவரிடம் கேட்க ஏராளமான கேள்விகளை வைத்திருக்கிறேன். இந்த விழா மேடையில் கேட்டுவிடப் போகிறேன்… இந்த மேடையைப் பொறுத்தவரை என்னை குருன்னு நினைக்காம ஒரு பிரஸ்காரனா அவர் நெனச்சிக்க வேண்டியதுதான். அவருக்கு பதில் சொல்ல தயக்கமா இருக்கிற கேள்விகளுக்கு தாராளமா நோ கமெண்ட்ஸ்னு சொல்லிடலாம்…”

கேபியின் கேள்விகளும் ரஜினி தந்த பதில்களும்:

கேபி: எந்திரனுக்குப் பிறகு, நினைத்துப் பார்க்க முடியாத பெரிய உயரத்தில் நீ இருக்கிறாய். இப்போ மீண்டும் உன்னால் பழைய சிவாஜி ராவாக முடியுமா?

ரஜினி: நான் இன்னும் சிவாஜி ராவாகவே இருக்கிறதாலதான் ரஜினிகாந்த்தா இருக்க முடியுது. இந்த பேர், புகழெல்லாம் சிவாஜி ராவை பாதிக்கவில்லை!

கேபி: இன்னைக்கு உன்னால நினைச்சமாதிரி எங்கும் போக முடியாது. ஊரில் உள்ள சரவண பவனையெல்லாம் விலைக்கு வாங்கும் அளவுக்கு நீ இருந்தாலும், அதே ஹோட்டலில் போய் உன்னால உட்கார்ந்து சாப்பிட முடியாது. நடிகரான பிறகு நிறைய இழந்துட்டோமேங்கிற வருத்தம் உண்டா?

ரஜினி: சாதாரண மனிதர்களைப் போல எனக்கும் ஓட்டல்களுக்கு சென்று சாப்பிட்டு வர ஆசை உண்டு. அந்த சந்தோஷத்தை இழந்துவிட்டேன். சில நேரங்கள்ல நிம்மதியை இழந்திருக்கிறேன். சூழ்நிலை கைதியாக இருக்க வேண்டியும் உள்ளது. இவைகளை தியாகம் செய்துதான் இந்தப் புகழை அடைந்திருக்கிறேன்.

கேபி: உன்னோட வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக எழுதலாமே…?

ரஜினி: சுயசரிதை எழுதினால் உண்மைகளை மறைக்காமல் அதில் குறிப்பிடவேண்டும். நான் உண்மைகளை அப்படியே எழுதினால் நிறைய பேர் மனசு கஷ்டப்படும். மகாத்மா காந்தியிடம் சுயசரிதை எழுதுவதற்கு தைரியம் இருந்தது. அந்தத் தைரியம் எனக்கும் வரும்போது எழுதுவேன்.

கேபி: உன்னை தூக்கி வைத்துள்ள சினிமாவுக்கு என்ன செய்யப் போகிறாய்?

ரஜினி: நிச்சயம் நல்லது செய்வேன். தமிழர்களும், தமிழ் சினிமாவும் பெருமைப் படுகிற மாதிரி ஒண்ணை நிச்சயம் செய்வேன் (விசில் – கைதட்டல் பறக்கிறது).

கேபி: இன்னிக்கு நீதான் இந்தியாவின் உச்ச நட்சத்திரம். வட இந்திய மீடியாவே சொல்லுது. டிவியில பார்த்தேன். இந்த நிலையை தக்க வைக்க என்ன பண்ணப் போறே?

ரஜினி: இதை எதிர்ப்பார்த்து நான் எதையும் செய்யல. அதனால காப்பாத்திக்கவும் முயற்சி பண்ணலை. நான் என் வேலையை செய்துட்டு இருக்கேன். இப்போ இருக்கிற நிலை ஒரு எந்திரனால மட்டும் வந்ததில்லை. அதுக்கு முன்ன நான் பண்ண நிறைய படங்களும் காரணம். அதேநேரம், இந்த நிலையை எப்படி தக்க வச்சிக்கப் போறோம்ங்கிற பயம் இருக்கத்தான் செய்யுது.

கேபி: சில்வர்ஸ்டர் ஸ்டெலோன் மாதிரி ஒரு ஒன்மேன் ஆர்மி நீ. உன்னோட பன்முகப் பரிமாணத்தைக் காட்டும் அளவு படம் எடுக்க இனி யாராலும் முடியாதுன்னு நினைக்கிறேன். நீயே ஏன் ஒரு படத்தை இயக்கக் கூடாது?

ரஜினி: படங்களை டைரக்டு செய்யற ஐடியா எதுவுமில்லை. அது எனக்குத் தெரியாதது. நிறைய பொறுப்புமிக்கது.

கேபி: ஒருவேளை நீ படம் டைரக்ட் பண்ணா என்னை உதவியாளரா சேர்த்துக்குவியா?

ரஜினி: நிச்சயம் உங்களை உட்கார வச்சி வணங்கி, நீங்க சொல்ற வேலையை செய்வேன்.

கே பி: இதுவரை எத்தனை படங்கள் நடிச்சிருப்பே?

ரஜினி: (சற்றும் யோசிக்காமல்) 154 படங்களில் நடித்துள்ளேன்.

கேபி: இந்தப் படங்களில் நாம நடிக்காம போயிட்டோமேன்னு நினைச்சுதுண்டா..?

ரஜினி: ஓரிரு படங்கள் உண்டு.

கேபி: என்னென்ன படங்கள்னு சொல்ல முடியுமா?

ரஜினி: இல்லே… இப்போ சொல்றது சரியா இருக்காது. நான் சொல்லவும் விரும்பல.

கேபி: வீரபாண்டிய கட்ட பொம்மன், எங்க வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்கள் இப்போதும் பேசப்படுகிறது. அதுபோல் 50 ஆண்டுகளை தாண்டியும் நிற்கிற உன்னோட படங்கள்ன்னு எதைச் சொல்லுவே?

ரஜினி: ராகவேந்திரா, பாட்ஷா, எந்திரன்.

கேபி: நீ மிகச் சிறந்த நடிகன். ஆனா தேசிய விருது கிடைக்கலேன்னு ரசிகர்களைப் போலவே எங்களுக்கும் ஏக்கம் உண்டு. எப்போது தேசிய விருது பெறுவாய்?

ரஜினி: அது டைரக்டர் கையில் இருக்கு!

கேபி: நாடகங்களில் நடிக்கணும் என்ற ஆர்வம் உனக்கு உண்டு. நீயே பல முறை சொல்லியிருக்கே. இப்போது நாடகங்கள் போட்டால் நடிப்பியா?

ரஜினி: கண்டிப்பா நடிப்பேன்.

கேபி: மேஜர் சந்திரகாந்த் நாடகத்தை ஏப்ரல் 15-ந் தேதி போடப்போறேன். அதில் நடிப்பியா?

ரஜினி: நீங்க சொன்னா, நீங்க டைரக்ட் பண்ணா, நானும் நடிக்கிறேன்.

கேபி: சினிமாவுக்கு வந்த புதிதில் சிகரெட்டை தூக்கி போட்டு ஸ்டைல் காட்டினே. சிகரெட்டும் அதிகமா பிடிப்பே. இப்போ குறைச்சிட்டியா?

ரஜினி: சிகரெட் பிடிப்பதை இப்போது நிறையவே குறைச்சிட்டேன்.

கேபி: சரி.. நான் இயக்கிய படங்களில் உனக்குப் பிடிச்ச படங்கள் என்னென்ன?

ரஜினி: 2 படங்கள் ரொம்ப பிடிக்கும். ஒண்ணு, அவள் ஒரு தொடர்கதை. அதை 8 முறை பார்த்தேன். இன்னொன்னு அரங்கேற்றம். 12 தடவை பார்த்தேன்.

கேபி: அரசியலில் உனக்குப் பிடித்த தலைவர் யார்?

ரஜினி: லீ குவான் யூ. நவீன சிங்கப்பூரை உருவாக்கிய தலைவர்.

கேபி: வாழ்க்கையில யாரையாவது பார்த்து பொறாமைப் பட்டிருக்கியா?

பதில்: இமயமலையில் உள்ள துறவிகளைப் பார்த்து ரொம்ப பொறாமைப் பட்டிருக்கிறேன்.

கேபி: உனக்குப் பிடிச்ச இயக்குனர் யார்… தயங்காம சொல்லு!

ரஜினி: மகேந்திரன்.

கேபி: நீ விரும்பிச் சாப்பிடற உணவு எது?

ரஜினி: சிக்கன்.

கேபி: வாழ்க்கையில் நீ நட்புக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பது எல்லோருக்கும் தெரியும். உனக்கு நெருங்கிய நண்பர் யார்?

ரஜினி: ராவ்பகதூர்.

கேபி: என்கிட்டே உனக்குப் பிடிக்காத விஷயம் எது?

ரஜினி: நீங்கள் கோபப்படுவதைக் குறைச்சிக்கணும்!

கேபி: எல்லோரும் கேட்கணும்னு நினைக்கிற கேள்வி இது. நீ அரசியலுக்கு வருவியா மாட்டியா?

ரஜினி: அது அந்த ஆண்டவன் கையில் இருக்கு!

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago