தினமணியின் எந்திரன் பார்வை சரியோ…

ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் – 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) “ஜெமினி பிலிம்ஸ்’ உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான “சந்திரலேகா’ 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.

தஞ்சாவூரில் “சந்திரலேகா’ வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: “”ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?”

படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது “ஜெமினி ஸ்டுடியோ’. “சந்திரலேகா’ வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!

ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக “சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்…

வரலாறுதானா “சன் பிக்சர்’ஸின் “எந்திரன்’?

நிச்சயமாக “எந்திரன்’ ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.

மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. “சன் குழும’ ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான “கோலோஸியம்’ உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை “எந்திரன்’ உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?

ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; “வால்மார்ட்’டுக்கும் “கோகோ கோலா’வுக்கும் “ரிலையன்ஸ் ஃப்ர’ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் “எந்திர’னையும் எதிர்க்கவைக்கின்றன.

சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் “எந்திரன்’ வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.

இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு “எந்திரன்’ படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.

படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட “எந்திரன்’ பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் “எந்திரன்’ அறிமுகப்படுத்தி இருக்கும் “ஏகபோக’ (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.

தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, “எந்திரன்’ விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!

“எந்திரன்’ திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். “எந்திரன்’ வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் “எந்திரன்’ படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!

– தினமணியின் இந்த கருத்துகள் கண்டிப்பாக யோசிக்க வேண்டிய விசயம் தான்…ரஜினி,கலாநிதி மாறன்,ஷங்கர் இவர்களில் யார் பேராசை பிடித்தவர்கள்….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

View Comments

  • ரஜினி,கலாநிதி மாறன்,ஷங்கர் இவர்களில் யார் பேராசை பிடித்தவர்கள்….

    Answer
    All are Money Minded People,
    especially Rajini.

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago