செய்திகள்,முதன்மை செய்திகள் பெட்ரோல் -டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

பெட்ரோல் -டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

பெட்ரோல் -டீசல் விலை உயர்வை கண்டித்து  போராட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு post thumbnail image
பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்டோபர் 5-ந்தேதி போராட்டம் நடைபெறும் என்று அதன் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்து ரூ.86.28ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 13 காசுகள் உயர்ந்து ரூ.78.49 ஆகவும் அதிகரித்திருக்கிறது. ஏழை மக்களின் நலனில் அக்கறையின்றி எரிபொருள் விலையை மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் தொடர்ந்து உயர்த்துவது கண்டிக்கத்தக்கது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கிய விலை உயர்வு நீடிக்கிறது. கடந்த 43 நாட்களில் ஒருமுறை கூட பெட்ரோல்-டீசல் விலைகள் குறைக்கப் படவில்லை. அதேநேரத்தில் கடந்த 43 நாட்களில் பெட்ரோல் விலை 40 முறை ரூ.6.14 உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 43 நாட்களில் 35 முறை ரூ.5.90 உயர்த்தப்பட்டு ரூ.78.49 என்ற உச்சத்தை எட்டியிருக்கிறது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தினமும் நிர்ணயிக்கப்படும் முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இதுவரை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 21.00 ரூபாயும், டீசல் விலை 21.61 ரூபாயும் உயர்த்தப் பட்டுள்ளன. இது முறையே 32.%, 38% உயர்வு ஆகும். கடந்த 15 மாதங்களில் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் எந்தப் பொருளும் இந்த அளவுக்கு விலை உயர்த்தப்படவில்லை. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இந்த ஆண்டு இறுதியிலோ, அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ 100 டாலர் என்ற அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே அளவிலான வரி விகிதமும், ரூபாய் பணமதிப்பும் தொடர்ந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110 என்ற அளவுக்கு அதிகரிப்பதை தடுக்க முடியாது.

தமிழக அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.21.89, ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15.70 வீதம் மதிப்புக் கூட்டு வரி கிடைக்கிறது. இது தவிர மத்திய அரசு வசூலிக்கும் கலால் வரியில், மாநில அரசின் பங்காக பெட்ரோலுக்கு ரூ.8.18, டீசலுக்கு ரூ.6.47 கிடைக்கிறது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டால் ரூ.30.07, டீசல் விற்கப்பட்டால் ரூ.22.17 வரியாக கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழக அரசுக்கு ரூ.470 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இது ரூ.600 கோடியாக அதிகரிக்கும். நடப்பாண்டில் பெட்ரோல், டீசல் மீதான வரிகள் மூலம் ரூ.4000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் எனும் போது அதை விட்டுக்கொடுத்தால் பெட்ரோல், டீசல் விலையை ரூ.5.00 வரை குறைக்க முடியும். ஆனால், அதை செய்ய தமிழக அரசு தயாராக இல்லை.

மத்திய, மாநில அரசுகளின் இந்த மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்டோபர் 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை உட்பட அனைத்து மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களிலும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி