அன்புக்கு சிம்பு சவால்…!!

விளம்பரங்கள்

திரைப்படங்களில் புகை பிடிப்பது போன்ற சர்ச்சைகள் பேசப்பட்டு வருவது தொடர்பாகப் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணியுடன் விவாதிக்கத் தயார் என நடிகர் சிம்பு அறிவித்துள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபுவின் படத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் கூறப்பட்டு வந்தது. மேலும், இன்று காலை இவர்கள் இணையும் படத்தின் தலைப்பும் வெளியிடப்பட்டது. `மாநாடு’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில்தான் அடுத்ததாகச் சிம்பு நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாகச் சிம்பு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்து வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

வீடியோவில் பேசியுள்ள அவர், “ ‘மாநாடு’ படத்தின் தலைப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டு வரவேற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வெங்கட் பிரபுவுடன் இணைந்து படம் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசையாக இருந்தது. தற்போது அது நிறைவேற உள்ளது. இந்தப் படம் நல்லபடியாக முடிவுபெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறும் என நம்புகிறேன். இந்தப் படத்துக்கு `மாநாடு’ எனப் பெயரிடப்பட்டுள்ளதால், படத்தில் மட்டும்தான் அரசியல் இருக்கும். நான் அரசியலில் இறங்க உள்ளதால்தான், இதுபோன்ற படங்களில் நடிப்பதாகச் சிலர் கூறி வருகின்றனர். ஆனால், அது உண்மை கிடையாது. அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. ஆனால், ஒரு படத்தில் பேச வேண்டிய விஷயங்களைக் கட்டாயம் பேசித்தான் ஆக வேண்டும்.

இன்னொரு விசயத்தை நான் இங்கு பேச நினைக்கிறேன். பொதுவாகப் படத்தில் பேசப்படும் விஷயங்கள் குறித்து பல கருத்துகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. பாபா முதல் தற்போது விஜய் நடித்து வரும் `சர்கார்’ படத்தின் முதல் போஸ்டர் வரை `புகைபிடிக்கும் காட்சிகள் ஏன் வருகின்றன’ என்ற கேள்விகள் அதிகம் வருகிறது. அங்கிள் அன்புமணி ராமதாஸ்கூட இதைப் பற்றிப் பேசியிருந்தார். தற்போது இதுகுறித்து நான் இங்கு பேசினால், அது தப்பாகிவிடும். எந்த விவாதத்திலும் நான் கலந்துகொள்ளத் தயார் என்று அன்புமணியே கூறியிருந்தார். எனவே ஒரு விவாத மேடையில், இதுகுறித்து அங்கிள் அன்புமணி கேட்க நினைக்கும் கேள்விகளைக் கேட்டால், சினிமா தரப்பிலிருந்து கூறவேண்டிய பதில்களை நான் நேரலையில் கூறத் தயாராக உள்ளேன். மக்கள் மத்தியில் கலந்துரையாடுவதுதான், இதற்கு சிறந்த தீர்வாக இருக்கும். இதற்கு அன்புமணி அங்கிள் ஒப்புக்கொண்டு அதற்கான நேரம் மற்றும் இடத்தை அவரே கூறினால், அங்கு நான் வரத் தயாராக உள்ளேன். தொடர்ந்து சினிமா பற்றிய விமர்சனங்கள் எழுவதுக்கு இது ஒரு நல்ல தீர்வாக இருக்கும். என் ரசிகர்களுக்கு மிக்க நன்றி” எனப் பேசி முடித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: