11 குழாய்கள்….! 11 பேர் மரணம்…! டைரியில் ஒளிந்திருக்கும் மர்ம வாசகம் என்ன?

விளம்பரங்கள்

டெல்லியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரின் மரணத்தில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘அந்தக் குடும்பத்தில் உள்ள நபர் ஒருவர், 11 டைரிகளை இதுவரை எழுதிவைத்திருக்கிறார். இதன்மூலம், ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன’ என்கின்றனர் போலீஸார்.

டெல்லி புராரி பகுதியில், கடந்த 1-ம் தேதியன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர், வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். இதில், 10 பேர் கை, கால், கண்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையிலும், ஒருவர் கழுத்து இறுக்கப்பட்ட நிலையிலும் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டனர். இவர்களின் கூட்டு மரணம் தொடர்பாக பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கடவுள் நம்பிக்கையில் இறந்த குடும்பத்தினர், விநோத பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து வந்தது தெரியவந்துள்ளது. வீட்டை சோதனை செய்ததில், வீட்டின் பின்பக்கச் சுவரில் 11 குழாய்கள் மர்மமான முறையில் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் பதிவாகிய சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், `11 பேரின் மரணத்தில் எந்தக் கொலை முயற்சியும் நடக்கவில்லை. குடும்பத்தின் மூத்த மருமகள், தனது மகளுடன் சென்று நாற்காலிகளை வாங்கி வருவதும், தூக்கில் தொங்குவதற்காக சிறுவர்கள் வயர்களைக் கொண்டுசெல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. அந்த நாற்காலிகள் மற்றும் வயர்களைப் பயன்படுத்தி தூக்கில் தொங்கியுள்ளனர்’ எனத் தெரிவித்தனர்.

அந்த வீட்டை, இன்று மேலும் சோதனை செய்ததில், 11 டைரிகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அந்த டைரிகள் அனைத்தும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே தொடர்ந்து 11 ஆண்டுகளாக எழுதி வந்துள்ளார். அந்த டைரியில், `ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வையுங்கள்; அந்தத் தண்ணீரின் நிறம் எப்போது மாறுகிறதோ, அப்போது நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்; இந்தச் சடங்குகளுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் அவிழ்க்க வேண்டும்’ என எழுதப்பட்டிருக்கிறது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `டைரியில் எழுதிய வரிகளுக்கும் மரணத்துக்கும் எதோ ஒருவகையில் தொடர்பு இருப்பதாகவே தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடந்துவருகிறது’ என்றார்.

இன்னும் மர்மங்கள் தொடரும்..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: