இதர பிரிவுகள்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் துணிச்சல் சிறுவன் சூர்யாவுக்குக் கிடைத்த சர்ப்ரைஸ்!

துணிச்சல் சிறுவன் சூர்யாவுக்குக் கிடைத்த சர்ப்ரைஸ்!

துணிச்சல் சிறுவன் சூர்யாவுக்குக் கிடைத்த சர்ப்ரைஸ்! post thumbnail image

சென்னை அண்ணாநகரில் திருடனைத் துணிச்சலாக விரட்டிச் சென்று பிடித்த சிறுவன் சூர்யாவுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கிக் கொடுத்துள்ளார் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்.

சென்னை அண்ணாநகரில் பெண் டாக்டர் ஒருவரிடம் நோயாளிபோல வந்த திருடன் அவரின் தங்கச் செயினை பறித்துவிட்டு தப்பினார். டாக்டரின் அலறல் சத்தம் கேட்டு திருடனை தனியொருவனாக விரட்டிச் சென்று அண்ணாநகரைச் சேர்ந்த சிறுவன் சூர்யா மடக்கிப்பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார். இந்தத் தகவலையறிந்த கமிஷனர் ஏ.கே.விஸ்வாநாதன், சூர்யாவை நேரில் அழைத்து பாராட்டினர். அப்போது அவருக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட டாக்டரும் சிறுவன் சூர்யாவை பாராட்டியதோடு வெகுமதியும் கொடுத்தார்.

சூர்யா, நிரந்தர வேலை எதுவும் இல்லாமல் சிரமப்படுவதாக விகடன் டாட் காமில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்தநிலையில் சூர்யாவுக்கு தனியார் நிறுவனத்தில் ஏ.சி மெக்கானிக் பணியை பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “சம்பவம் நடந்தபோது சிறுவன் சூர்யாவுக்கு 17 வயது. இதனால் அவரை எந்த வேலையிலும் சேர்க்க இயலாது. இதனால், 18 வயது வரை காத்திருந்தோம். அவருக்கு 18 வயது பூர்த்தியடைந்தவுடன் தனியார் நிறுவனத்தில் சிபாரிசு செய்து ஏ.சி மெக்கானிக் வேலைக்கு ஏற்பாடு செய்துள்ளோம்” என்றனர்.

இந்தப் பணியில் சேர்ந்த சூர்யாவுக்கு பணிக்கான ஆர்டரை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. அதில் தனியார் நிறுவன சீருடையுடன் வந்த சூர்யாவுக்கு, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் முன்னிலையில், சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் (மனிதவள மேம்பாட்டுத்துறை) சீனிவாசன் வேலைக்கான அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை வழங்கினார். தொடர்ந்து, ரோட்டரி கிளப் நிர்வாகிகள் சார்பில் 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. மேலும், தனியார் கல்விக்குழுமம் சார்பில் ஒரு லட்சத்துக்கான காசோலையும் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் ஜெயராம், தெற்குமண்டல கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் (மேற்கு) விஜயகுமாரி, அண்ணா நகர் துணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி