இதர பிரிவுகள்,செய்திகள்,முதன்மை செய்திகள் `ஒரு இரும்புத் துண்டு… ஒரு தீக்குச்சி …’ – போலீஸைக் கலங்கடித்த ஏ.டி.எம் கொள்ளையர்களின் வாக்குமூலம்

`ஒரு இரும்புத் துண்டு… ஒரு தீக்குச்சி …’ – போலீஸைக் கலங்கடித்த ஏ.டி.எம் கொள்ளையர்களின் வாக்குமூலம்

`ஒரு இரும்புத் துண்டு… ஒரு தீக்குச்சி …’ – போலீஸைக் கலங்கடித்த ஏ.டி.எம் கொள்ளையர்களின் வாக்குமூலம் post thumbnail image
சிறிய அளவிலான இரும்புத் துண்டு, தீக்குச்சி, மருந்து அட்டை ஆகியவை மூலம் ஏ.டி.எம் இயந்திரங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த வடமாநிலத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர், சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணியாற்றுகிறார். இவர், எழிலகம் வளாகத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க முயன்றார். அப்போது இயந்திரத்திலிருந்து பணம் வரவில்லை. ஆனால், வங்கி அக்கவுன்ட்டில் பணம் எடுக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ். வந்தது. இதுகுறித்து வங்கியிலும் அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்திலும் சீனிவாசன் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தீபா விசாரணை நடத்தினார். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். இயந்திரத்திலிருந்து சீனிவாசன் மட்டுமல்லாமல் இன்னும் சிலரும் பாதிக்கபட்டது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். இயந்திரம் முன்பு போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அடிக்கடி இந்த ஏ.டி.எம் மையத்துக்குள் செல்லும் தகவல் கிடைத்தது. அவர்களை போலீஸார் ரகசியமாகக் கண்காணித்தனர். அப்போதுதான் ஏ.டி.எம் இயந்திரத்திலிருந்து நூதன முறையில் பணத்தை அவர்கள் எடுப்பது தெரியவந்தது. அவர்களை கையும் களவுமாகப் பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். இதற்காக அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, வடமாநில வாலிபர்களின் குட்டு வெளிப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “சீனிவாசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம் மையத்தில் கடந்த மூன்று மாதங்களாக மப்டியில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த ஏ.டி.எம் மையத்துக்கு வருபவர்களை இரண்டு வடமாநில வாலிபர்கள் பின்தொடரும் தகவல் கிடைத்தது. இதனால் அந்த வாலிபர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்தோம். அப்போது, ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுப்பவர்களுடன் வாலிபர்கள் பேசுவது சிசிடிவி வீடியோ பதிவு மூலம் தெரிந்தது. அடுத்து, பணம் எடுக்க வருபவர்கள் சென்றபிறகு அந்த ஏ.டி.எம் இயந்திரத்திலிருந்து ஏதோ ஒன்றை அவர்கள் எடுப்பதும், பிறகு பணத்தைப் பெறுவதும் சிசிடிவி வீடியோவில் தெரிந்தது. இதனால் அந்த வாலிபர்களை மடக்கிப்பிடித்தோம். அவர்களிடம் விசாரித்தபோது, பீகார் மாநிலம், கயா மாவட்டத்தைச் சேர்ந்த மனோகர்குமார், முன்னாகுமார் என்று தெரிந்தது. அவர்கள் இருவரும் பட்டதாரிகள். பீகாரிலிருந்து விமானத்தில் சென்னை வந்து, ஏ.டி.எம் மையங்களில் நூதன முறையில் கைவரிசை காட்டிவருவது தெரிந்தது. கொள்ளையடிப்பது எப்படி என்று அவர்கள் தெரிவித்த தகவல் எங்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டு ஏ.டி.எம் இயந்திரங்கள் இருக்கும் இடத்தைத்தான் முதலில் இவர்கள் தேர்வு செய்வார்கள். அதுவும் பழைய ஏ.டி.எம். இயந்திரங்களில்தாம் எளிதில் கைவரிசை காட்ட முடியும். பணத்தை எடுக்க வரும் வாடிக்கையாளரைப் பின்தொடரும் இவர்கள், அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதைப் போல நீண்ட நேரம் காத்திருப்பார்கள். ஆனால், அருகில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுப்பவரைக் கண்காணித்து அவர்களின் பாஸ்வேர்டு ஆகியவற்றை மனதில் பதியவைத்துக் கொள்வார்கள்.

அதற்கு முன்பு, ஏ.டி.எம் இயந்திரத்தின் கீ போர்டில் சிறிய அளவிலான இரும்புத் துண்டு, தீக்குச்சி, சிறிய அளவிலான மருந்து அட்டை ஆகியவற்றை நுழைத்துவிடுவார்கள். இதனால் ஏ.டி.எம் இயந்திரத்தில் கார்டை தேய்த்தவுடன், பாஸ்வேர்டை கீபோர்டில் போடும்போது அது வொர்க் ஆகாது. இதனால் இயந்திரம் பழுது என்று கருதி வாடிக்கையாளர் வெளியில் சென்றுவிடுவார்கள். உடனடியாக இவர்கள், கீ போர்டில் உள்ள இரும்புத் துண்டு, தீக்குச்சி, மருந்து அட்டைகளை வெளியில் எடுத்துவிட்டு பாஸ்வேர்டை டைப் செய்து பணத்தை எடுத்துக்கொள்வார்கள். இதுதான் இந்தக் கொள்ளையர்களின் ஸ்டைல். எழிலகத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் மட்டுமல்லாமல் சென்னையில் பல இடங்களில் இவர்கள் கைவரிசைக் காட்டியுள்ளனர். கொள்ளையடிக்கப் பயன்படுத்திய இரும்புத் துண்டு, தீக்குச்சி, மருந்து அட்டை ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம். அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்தில் மட்டும் 5 பேர் புகார் கொடுத்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தை அவர்களின் அம்மா அக்கவுன்டில் போட்டுள்ளனர். அதை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையடித்ததாக வடமாநிலக் கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர்” என்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “எங்களிடம் சிக்கிய வடமாநில ஏ.டி.எம் கொள்ளையர்கள் மனோகர்குமார், முன்னாகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் பழைய ஏ.டி.எம் இயந்திரங்களில்தான் இவர்கள் நூதன முறையில் கைவரிசைக் காட்டியுள்ளனர். சிந்தாரிப்பேட்டையிலும் இவர்கள் ஏ.டி.எம் இயந்திங்களில் கொள்ளையடித்ததாகக் கூறியுள்ளனர். இவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ இதுபோன்று கொள்ளையடித்ததாகத் தெரிவித்துள்ளனர். இவர்களை பின்னாலிருந்து இயக்கும் நெட்வொர்க் குறித்து விசாரித்துவருகிறோம். வழக்கமாக ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் வரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் கொடுப்பதுண்டு. அவ்வாறு கொடுக்கப்படும் புகாருக்கு வங்கித் தரப்பில் உடனடி நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால்தான் இந்த ஏ.டி.எம் கொள்ளையர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

வழக்கமாக இரானியக் கொள்ளையர்கள்தாம் விமானத்தில் வந்து கொள்ளையடிப்பார்கள். அந்தப் பாணியை பீகார் மாநில ஏ.டி.எம் கொள்ளையர்கள் பின்பற்றியுள்ளனர். பீகாரிலிருந்து சென்னை வந்த மனோகர்குமார், முன்னாகுமார் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். அங்கிருந்து டிப் டாப் உடையணிந்து இரண்டு ஏ.டி.எம் இயந்திரங்கள் இருக்கும் மையங்களை முதலில் தேர்வு செய்துகொள்வார்கள். அதுவும் பழைய ஏ.டி.எம் இயந்திரங்களில்தாம் இரும்புத் துண்டு, தீக்குச்சி, மருந்து அட்டைகளை நுழைக்க முடியும். புதிய ஏ.டி.எம் இயந்திரங்களில் டச் ஸ்கீரின் என்பதால் கொள்ளையடிக்க முடியாது என்றும் அவர்கள் போலீஸிடம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வங்கித் தரப்பில் பேசியவர்கள், “பொதுவாக ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் வரவில்லை என்றால் கேன்சல் பட்டனை அழுத்திவிட்டு அங்கிருந்து வெளியில் வரவேண்டும். ஆனால், சில வாடிக்கையாளர்கள் அதைச் செய்வதில்லை. வாடிக்கையாளர்களின் கவனக்குறைவே கொள்ளையர்களுக்கு பிளஸ் பாயின்ட்டாக அமைகிறது. இப்படியும் கொள்ளையடிப்பார்களா என்று எங்களை யோசிக்க வைத்துள்ளது” என்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி