அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் நீண்ட விடுமுறையை தொடர்ந்து ராகுல் காந்தி ஆன்மிக பயணம்!…

நீண்ட விடுமுறையை தொடர்ந்து ராகுல் காந்தி ஆன்மிக பயணம்!…

நீண்ட விடுமுறையை தொடர்ந்து ராகுல் காந்தி ஆன்மிக பயணம்!… post thumbnail image
டேராடூன்:-கடந்த பாராளுமன்றத்தேர்தல் மற்றும் அதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை துணைத்தலைவரான ராகுல்காந்திக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதற்கு சில மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந்தேதி ராகுல்காந்தி திடீரென மாயமானார். ராகுல்காந்தி ஓய்வு எடுப்பதற்காக விடுமுறையில் சென்று இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. இதற்கு பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் தனது 56 நாள் ஓய்வுக்கு பின்னர் கடந்த 16-ந்தேதி ராகுல்காந்தி டெல்லி திரும்பினார். அதனைத்தொடர்ந்து கடந்த 19-ந்தேதி டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் அவர் கலந்து கொண்டார். மேலும், பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக கடுமையாக பேசினார். இந்நிலையில் ராகுல்காந்தி நேற்று திடீரென தனது ஆன்மிக பயணத்தை தொடங்கி உள்ளார். சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் 11-வது ஜோதிர்லிங்கம் அமைந்துள்ள கேதர்நாத்திற்கு அவர் நேற்று புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்ற அவர், உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் உள்ள ஜாலிகிராண்ட் விமானநிலையத்தை காலை வந்தடைந்தார்.

அவரை மாநில முதல்-மந்திரி ஹரிஷ் ராவாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். கடந்த 2013-ம் ஆண்டு கேதர்நாத்தில் நடந்த மழை வெள்ளத்தில் கேதர்நாத் கோவில் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. தற்போது அங்கு மேற்கொண்டுள்ள சீரமைப்பு பணிகள் பற்றிய படங்களை ராகுல்காந்தி பார்வையிட்டார். பின்னர், ஜாலிகிராண்ட் விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கவுரிகுந்திற்கு ராகுல்காந்தி புறப்பட்டார். அவருடன் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அம்பிகாசோனி, மாநிலத்தலைவர் கிஷோர் உபத்யாயா மற்றும் மூத்த தலைவர்கள் சென்றனர். கவுரிகுந்த் சென்ற ராகுல்காந்தி, அங்குள்ள லின்சோலி பகுதியில் இருந்து கேதர்நாத் செல்கிறார். அவர் இன்று காலை சாமி தரிசனம் செய்வார் என்று தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி