செய்திகள்,திரையுலகம் கங்காரு (2015) திரை விமர்சனம்…

கங்காரு (2015) திரை விமர்சனம்…

கங்காரு (2015) திரை விமர்சனம்… post thumbnail image
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த நாயகன் அர்ஜூனா, தனது தங்கை பிரியங்காவுடன் கொடைக்கானலுக்கு வருகிறார். அங்கு தம்பி ராமையா இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். அவருடனே இருந்து பெரிய ஆளாக உருவாகும் இருவருக்கும் சொந்தமாக டீக்கடை வைத்துக் கொடுத்து அழகு பார்க்கிறார் தம்பி ராமையா.அர்ஜூனா தனது தங்கை பிரியங்கா மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார். அவளுக்காக எதையும் செய்யத் துணிந்தவராக இருக்கிறார்.அதேஊரில், விபச்சார தொழில் செய்துவருகிறாள் நாயகி வர்ஷாவின் அக்கா. அவளுக்கு ஏஜெண்டாக கலாபவன் மணி இருக்கிறார். இருவரும் சேர்ந்து வர்ஷாவையும் விபச்சார தொழிலுக்கு இழுக்க நினைக்கிறார்கள். ஆனால், வர்ஷாவோ இதற்கு இடம்கொடுக்காமல் அவர்களுடன் போராடி வருகிறாள்.

இவர்களுடைய கழுகு பார்வை நாயகன் தங்கை மீதும் விழுகிறது. அவளது தங்கையையும் விபசாரத்திற்கு இழுக்க கலாபவன் மணி முயற்சி செய்கிறார். இது நாயகனுக்கு தெரிந்ததும், கலாபவன் மணியை அடித்து துவம்சம் செய்கிறார். இதனால், கலாபவன் மணிக்கும், நாயகனுக்கு பகை ஏற்படுகிறது.இதற்கிடையில், நாயகனின் தங்கை அஜித்தின் தீவிர ரசிகை என்பதை தெரிந்துகொண்ட, ஒருவன் அவளிடம் தனக்கு அஜித்தை தெரியும், அஜித் படங்கள் என்றால் எனக்கு ரொம்ப இஷ்டம் என்று பில்டப் காட்டி அவளிடம் காதல் வலை வீசுகிறான்.ஆனால், இதற்கு நாயகனின் தங்கை பிடிகொடுத்தபாடில்லை. தனக்கு எல்லாமே அண்ணன்தான் என்று அவனை வெறுத்து ஒதுக்குகிறாள். இது நாயகனுக்கு தெரியவருகிறது. அவனை அடித்து உதைக்கிறார். அப்போது அவன், பிரியங்கா மீது அதிக பாசம் வைத்திருப்பதாக கூறுவதை கேட்டதும், அவனையே தனது தங்கைக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார் நாயகன்.

அதன்படி இருவருக்கும் திருமண ஏற்பாடுகளை செய்கிறார். திருமணத்திற்கு முன்பு மாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்து போகிறார். இதனால் வெறுப்படைந்த பிரியங்கா, திருமணமே வேண்டாம் என்று முடிவெடுக்கிறாள். ஆனால், அவளை தம்பி ராமையாவும், நாயகனும் சேர்ந்து சமதானப்படுத்தி வேறு ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார்கள்.அந்த மாப்பிள்ளையும் கல்யாணத்துக்கு முன்பே மர்மமான முறையில் இறந்துபோகிறான். இப்படி தொடர்ந்து திருமணம் தடைபடுவதற்கு என்ன காரணம் என அனைவரும் குழம்பிப் போகின்றனர்.இதற்கெல்லாம் ஒரே வழி ஊரைவிட்டு காலி பண்ணுவதுதான் என முடிவெடுத்து, வேறு ஊருக்கு சென்று தனது தங்கைக்கு திருமணம் செய்து வைக்கிறார். ஆனால், அங்கும், தங்கையின் மாப்பிள்ளைக்கு விபத்து ஏற்படுகிறது. இதனை விசாரிக்க போலீஸ் அதிகாரியான சாமி களமிறங்குகிறார். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவருகிறது.இறுதியில், இந்த கொலைகளை செய்தது யார்? அவர் இந்த கொலைகளை செய்ய காரணம் என்ன? என்பதை பல்வேறு திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.அர்ஜூனா இந்த படத்தில் நடிக்க முயற்சி செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். முகம் முழுக்க தாடியுடன் இவரை பார்க்கவே பயமாக இருக்கிறது. இந்த முகத்தை வைத்துக்கொண்டு தங்கை மீது பாசம் காட்டுவதை ஏனோ ரசிக்க முடியவில்லை.

மேலும், நடிகை வர்ஷாவுக்கு இந்த படத்தில் அதிகமாக வாய்ப்பு இல்லை. ஹீரோவின் தங்கையை சமாதானப்படுத்தும் காட்சிகள், மற்றும் நாயகனுடன் ஒரு பாடலுக்கு மழையில் நனையும் காட்சிகளுக்கு மட்டுமே உதவியிருக்கிறார். தங்கையாக வரும் பிரியங்கா நடிப்பில் பரவாயில்லை. தங்கை கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.இவர்களைவிட தம்பி ராமையா தனது கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். கலாபவன் மணி தனக்கே உரித்தான நகைச்சுவை வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார்.சர்ச்சையான கதைகளை படமாக எடுத்து சர்ச்சை இயக்குனர் என்று பெயர் வாங்கிய சாமி, இந்த படத்தில் அண்ணன்-தங்கை பாசத்தை படமாக்கியிருக்கிறார். அந்த பாசம் அளவு கடந்தால் என்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை அழகாக காட்டியிருக்கிறார். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.படத்திற்கு பெரிய பலம் பாடகர் ஸ்ரீனிவாஸின் இசைதான். பாடல்களாகட்டும், பின்னணி இசையாகட்டும் இரண்டிலும் அறிமுக படத்திலேயே அசத்தி பாராட்டு பெறுகிறார். குறிப்பாக, இடைவேளைக்கு பிறகு வரும் மெலோடி பாடலும், குத்துப் பாடலும் ரசிக்க வைக்கின்றன. ராஜரத்தினத்தின் ஒளிப்பதிவு கொடைக்கானல் மலைப் பகுதியை அழகாக காட்டியிருக்கிறது.

மொத்தத்தில் ‘கங்காரு’ தடுமாற்றம்……….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி