செய்திகள்,திரையுலகம் காஞ்சனா 2 (2015) திரை விமர்சனம்…

காஞ்சனா 2 (2015) திரை விமர்சனம்…

காஞ்சனா 2 (2015) திரை விமர்சனம்… post thumbnail image
லாரன்ஸ் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கேமராமேனாக பணிபுரிந்து வருகிறார். இதே தொலைக்காட்சியில் டாப்சி நிகழ்ச்சிகளை இயக்கும் பணி செய்து வருகிறார். டாப்சியை லாரன்ஸ் ஒருதலையாக காதலித்து வருகிறார்.இந்நிலையில், இவர்களுக்கு போட்டியாக மற்றொரு தொலைக்காட்சி இவர்களை இரண்டாவது இடத்துக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடிக்கிறது. அவர்களை எப்படியாவது முந்தவேண்டும் என்று களத்தில் இறங்குகிறார் சுஹாசினி. இவர் அதே தொலைக்காட்சியில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறார். இதற்காக இயக்குனர்களை சந்தித்து ஆலோசனை கேட்கிறார் சுஹாசினி. அப்போது, இவர்களுக்கு போட்டியான தொலைக்காட்சி ஆன்மீகம், பெண்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை வழங்குவதால்தான் முதலிடத்தை பிடித்துள்ளார்கள். ஆகவே, நாமும் அதேபோல் நிகழ்ச்சிகளை வழங்கலாம் என ஒரு சிலர் ஆலோசனை வழங்குகின்றனர். ஆனால், டாப்சிக்கோ இதில் முழு ஈடுபாடு இல்லை. அமானுஷ்யம், பேய் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை வழங்கினால் மக்களை கவரலாம் என ஆலோசனை கூறுகிறாள்.

இது சுஹாசினிக்கு சரியென படவே, இதற்கு ஒப்புதல் அளிக்கிறார். அதன்படி, டாப்சி தலைமையில் ஒரு குழுவை அமைத்து இதற்கான படப்பிடிப்புகளை தொடங்க ஏற்பாடு செய்கின்றனர். அதன்படி, இவர்களது குழுவில் லாரன்ஸ், பூஜா, ஸ்ரீமன், மனோபாலா ஆகியோர் இடம்பெறுகின்றனர். ஆரம்பத்திலிருந்து பேய் என்றால் பயப்படும் லாரன்ஸ் இந்த குழுவில் இணைய மறுக்கிறார். பின்னர் தான் ஒருதலையாக காதலிக்கும் டாப்சிதான் இதன் இயக்குனர் என்று தெரிந்ததும் ஒப்புக்கொள்கிறார்.
பின்னர் இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து மகாபலிபுரம் அருகே உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் சென்று படப்பிடிப்பு நடத்த செல்கின்றனர். அந்த வீட்டில் பேய் இருப்பதுபோன்று இவர்களே உருவாக்கி அதை படமாக்கி வருகின்றனர். அப்போது, அந்த வீட்டுக்கு பின்புறம் உள்ள கடற்கரைக்கு சென்று அங்கு சில காட்சிகளை படமாக்க முடிவு செய்கிறார் டாப்சி. அப்போது, கடற்கரை மணலை தனது கையால் அள்ளிப்போடுவதுபோல ஒரு காட்சியை படமாக்குகிறார். அப்போது, அவரது கையில் ஒரு கயிறு தட்டுப்படுகிறது. அது என்னவென்று பார்ப்பதற்குள், இடி, மின்னல், பலத்த காற்று வீசுகிறது. இதனால், படக்குழுவினர் அனைவரும் பயந்து அந்த இடத்தை விட்டு ஓடுகின்றனர். அப்போது, டாப்சி தன் கையில் இருக்கும் கயிற்றையும் எடுத்து வந்து விடுகிறார்.

வீட்டுக்குப் போய் அது என்னவென்று பார்க்கும் டாப்சி அதிர்ச்சியாகிறார். இதிலிருந்து திரில்லர் காட்சிகள் ஆரம்பமாகிறது. டாப்சி மற்றும் அவளுடன் வந்தவர்கள் அனைவரையும் பேய் பந்தாடும் காட்சிகள் என படம் முழுக்க திரில்லராக விரிகிறது.லாரன்ஸ் இந்த படத்தில் வெவ்வேறு கெட்டப்புகளில் வந்து அசத்துகிறார். அதிலும், மொட்டை சிவா கதாபாத்திரம் தியேட்டரில் விசிலை அள்ளுகிறது. சிறு குழந்தையாக வரும் கேரக்டரில் இவரா? என்று அசர வைத்திருக்கிறார். பாட்டி கதாபாத்திரத்தில் பிரமிக்க வைக்கிறார். இப்படியாக ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஏதாவது ஒரு வித்தியாசம் காட்டி அனைவரையும் அசர வைத்திருக்கிறார்.டாப்சி இந்த படத்தில் ரொம்பவும் அற்புதமாக நடித்திருக்கிறார். இவருடைய உடம்பில் பேய் புகுந்ததும் ஒவ்வொரு பேய் மாதிரியும் இவருடைய முகத்தில் கொடுக்கும் பாவனைகள் அனைத்தும் ரசிக்கும்படியாகவும், பயத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. இந்த மாதிரியான நடிப்பை டாப்சியிடமிருந்து யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு அற்புதமான நடிப்பு இவருடையது. வழக்கமான தமிழ் சினிமாவின் கதாநாயகி என்பதுபோல் இல்லாமல், இந்த படத்தில் இவருக்கு நல்லதொரு கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் லாரன்ஸ். படத்தில் ‘கங்கா’ என்ற கதாபாத்திரத்தில் முன்னணி நடிகை ஒருவரும் நடித்துள்ளார். அவருடைய நடிப்பும் பலே. அதேபோல் படத்தில் நடித்திருக்கும் கோவை சரளா, மனோபாலா, ஸ்ரீமன், மயில்சாமி ஆகியோரும் படத்தின் காமெடிக்கு ரொம்பவும் உதவியிருக்கிறார்கள். குறிப்பாக, ராகவா லாரன்ஸ் பாத்ரூம் செல்வதற்கு மயில்சாமியை வாட்ச்மேன் வேலை பார்க்கும் காட்சி ரொம்பவும் கலகலப்பு.

லாரன்ஸ் தன்னுடைய முந்தைய இரண்டு படங்களைப்போலவே இந்த படத்தையும் அதிபயங்கரமாக, ரொம்பவும் திரில்லராக எடுத்திருக்கிறார். படத்தில் எந்தளவுக்கு திரில்லர் இருக்கிறதோ அதே அளவுக்கு நகைச்சுவையையும் வைத்து ருசிக்க வைத்திருக்கிறார். எல்லா பாகத்தில் இருப்பதுபோல் இந்த படத்திலும் பிளாஷ்பேக் இருக்கிறது. இந்த கதையில் கிட்டத்தட்ட 7 பேருடைய ஆவிகள் ஒருத்தரின் உடம்புக்குள் புகுந்துகொள்வது போல் எடுத்திருக்கிறார். அனைத்தும் அற்புதம், மேலும் பயத்தையும் கொடுக்கக்கூடியவை. இதுபோல், இந்த படத்தில் இன்னொரு மிகப்பெரிய சஸ்பென்ஸையும் வைத்திருக்கிறார் லாரன்ஸ். அதை திரையில் மட்டுமே கண்டுகளியுங்கள். படத்திற்கு மற்றொரு பெரிய பலம் ராஜவேல் ஒளிவீரனின் ஒளிப்பதிவுதான். ஒவ்வொரு காட்சியையும் திரில்லிங்காக காட்டுவதற்கு ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசை மிரட்டல். கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் பயத்தை ஏற்படுத்த கூடிய வகையில் அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘காஞ்சனா 2’ திகில்…………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி