பாலிவுட் நடிகர் சல்மான்கான் மீது மேலும் ஒரு வழக்கு!…

விளம்பரங்கள்

மும்பை:-பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் கடந்த 2002–ம் ஆண்டு மும்பையில் காரில் சென்றபோது அவர் கார் தாறுமாறாக ஓடி ஒருவர் பலியானார். சல்மான்கான் நிறைய மது குடித்து விட்டு போதையில் கார் ஓட்டியதால், இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சல்மான்கானுக்கு 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் சல்மான்கான் மேலும் ஒரு பிரச்சினையில் சிக்கியுள்ளார்.

அவர் முக்கிய ஆவணம் ஒன்றை தன்னிடம் இருந்து பறித்து சென்று விட்டதாக ரவீந்திர திவேதி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மும்பை கோர்ட்டில் அவர் சல்மான்கான் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:– பா.ஜ.க. தலைவர் பிரமோத் மகாஜன் கொலை தொடர்பாக நான் ஒரு ஆவணத்தொகுப்பு தயாரித்திருந்தேன். அதை அரசிடம் சமர்ப்பிக்க நவம்பர் மாதம் கொண்டு சென்றேன். அப்போது தன் ஆட்களுடன் வந்த சல்மான்கான் என்னை கடுமையாகத் திட்டி ஆவணத்தை பறித்து சென்று விட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

அந்த மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சல்மான்கான் ஆவணப் பறிப்பு செய்தது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 323, 392 504, 506 ஆகிய 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: