செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்திய 20 தமிழர்கள் சுட்டுக்கொலை!…

திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்திய 20 தமிழர்கள் சுட்டுக்கொலை!…

திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்திய 20 தமிழர்கள் சுட்டுக்கொலை!… post thumbnail image
திருமலை:-தமிழ்நாடு, ஆந்திரா எல்லைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பெரும்பாலும் செம்மரங்கள் வளர்க்கப்படுகின்றன.குறிப்பாக சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி–திருமலை வனப்பகுதியில் செம்மரங்களை ஆந்திர மாநில வனத்துறை பாதுகாத்து வருகிறது.ஆந்திர செம்மரக்கட்டைகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வரவேற்பு உள்ளது. சீன நாட்டை சேர்ந்தவர்கள் இந்த செம்மரக்கட்டைகளை எவ்வளவு விலை கொடுத்து வாங்கவும் தயாராக உள்ளனர்.இதனால் ஆந்திர செம்மரக்கட்டைகள் ஒரு டன் ரூ.10 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. கொஞ்சம் செம்மரக்கட்டை கடத்தி விற்றாலும் லட்சாதிபதி ஆகி விடலாம் என்பதால் திருப்பதி வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை கடத்தல்காரர்கள் போட்டி போட்டு வெட்டி கடத்துகிறார்கள்.சமீபகாலமாக செம்மரங்களை கடத்தி வெட்டும் நடவடிக்கைகளில் சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து ஏழை தொழிலாளர்களை செம்மரம் வெட்ட அழைத்து செல்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

நிறைய பணம் கிடைப்பதால் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் செம்மரம் வெட்ட செல்கிறார்கள்.செம்மரங்கள் வெட்ட செல்லும் வேலூர்–திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆந்திர போலீசாரால் இதற்கு முன்பு பல தடவை கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவங்களும் நடந்துள்ளன.அப்பாவி தமிழக தொழிலாளர்கள் செம்மர கடத்தல் கும்பல் ஏஜெண்டுகளை நம்பி மரம் வெட்ட வரவேண்டாம் என்று ஆந்திரா வனதுறையினர் எச்சரித்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று இரவு திருப்பதி சேஷாத்திரி மலையில் ஸ்ரீவாரிமெட்டு ஈசகுண்டா பகுதியில் மரம் வெட்டும் கும்பல் செம்மரங்களை வெட்டி கடத்துவதாக ஆந்திர வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து ஆந்திர சிறப்புப்படை போலீசாரும், ஆந்திர வனத்துறையினரும் ஒருங்கிணைந்து திருப்பதி வனப்பகுதிக்கு சென்றனர். அப்போது 100–க்கும் மேற்பட்டவர்கள் கும்பலாக நின்று செம்மரம் வெட்டி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மரம் வெட்டிய கும்பலை பிடிக்க முயன்றனர்.அப்போது வனத்துறையினர் மீது செம்மரக்கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்த முயன்றனர். இதனையடுத்து ஆந்திர மாநில சிறப்பு பிரிவு போலீசார் அதிரடியாக செயல்பட தொடங்கினார்கள்.

மரம் வெட்டிய கும்பல் மீது அவர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். தொழிலாளர்களை சுற்றி வளைத்து சுட்டுத்தள்ளினர். இதில் 20 பேர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.இந்த சண்டையில் ஆந்திர போலீசார் 10 பேர் காயம் அடைந்தனர்.சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேர் பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பலியான 20 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.அவர்களில் 9 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தையும், 3 பேர் வேலூர் மாவட்டத்தையும், 6 பேர் தர்மபுரி மாவட்டத்தையும், 2 பேர் திருவள்ளூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை ஆந்திர மாநில போலீஸ் டி.ஐ.ஜி. கங்காராவ் உறுதிப்படுத்தினார்.பலியானவர்களில் 2 தமிழர்கள் சர்வதேச அளவில் செம்மரக்கட்டைகளை கடத்தும் தொழிலை செய்து வந்தனர். இவர்கள் சர்வதேச அளவில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்கள்.
பலியானவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், செல்போன்கள், மரம் வெட்ட பயன்படுத்தப்படும் கோடாரி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.செல்போன்கள் மூலம் பலியானவர்களின் வீடுகளை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.தமிழக தொழிலாளர்கள் 20 பேரை சுட்டு தள்ளிய ஆந்திர மாநில சிறப்பு படை போலீசார் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். திருப்பதி மலையில் நடக்கும் செம்மரக்கடத்தலை தடுத்து நிறுத்த காடுகளில் இவர்களுக்கு மலையேறும் பயிற்சி துப்பாக்கி சுடும் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வனத்துறையினர் மட்டுமே செல்வதுண்டு. கடத்தல்காரர்கள் மிரட்டியதும் அவர்கள் திரும்பி வந்து விடுவார்கள்.அதுபோல சாதாரண படை பிரிவு போலீசாரும் செம்மர கடத்தல்காரர்களுக்கு பயப்படுவார்கள். உயிருக்கு பயந்து அவர்கள் செம்மர கடத்தல்காரர்களை தைரியமாக நெருங்கி சென்று தடுக்க மாட்டார்கள்.
ஆனால் இன்று 100–க்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் முகாமிட்டு செம்மரம் வெட்டுவதாக தகவல் அறிந்ததும் மலைக்காடுகளில் சிறப்பு பயிற்சி பெற்ற போலீஸ் படை வரவழைக்கப்பட்டது. இந்த போலீசார் அனைவரும் நன்கு குறி பார்த்து சுடும் பயிற்சி பெற்றவர்கள்.இதை அறியாத செம்மர கடத்தல்காரர்கள் வழக்கம் போல வனத்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவது போல தாக்கினார்கள். ஆனால் சிறப்பு பிரிவு போலீசார் எடுத்த எடுப்பிலேயே துப்பாக்கியை தூக்கி விட்டனர்.சரமாரியாக அவர்கள் சுட்டதில் 20 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். இதனால் மற்ற 80 பேரும் அலறியடித்து அடர்ந்த காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர்.சிறிய போலீஸ் படைதானே வந்துள்ளது என்ற அலட்சியத்துடன் செம்மர கடத்தல்காரர்கள் 100 பேரும் தாக்குதல் நடத்தியதால்தான் இந்த துப்பாக்கி சூடு நடந்ததாக தெரியவந்துள்ளது.திருப்பதி மலையில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தமிழக அரசியல் கட்சிகள் ‘என்கவுன்டர்’ என்று கடுமையாக கண்டனம் தெரிவித்து உள்ளன. தொழிலாளர்களை கைது செய்வதற்கு பதில் காக்கை குருவிகளை போல சுடுவதா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதை தொடர்ந்து ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு ஆந்திர அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி