அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் 5 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!…

5 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!…

5 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!… post thumbnail image
புதுடெல்லி:-உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலைப் பிரதேசமான தேவ் பிரயாக் பகுதியில் பாகீரதி, அலக்நந்தா நதிகள் கங்கோத்ரி என்ற இடத்தில் ஒன்று சேர்ந்து கங்கை நதியாக உற்பத்தியாகிறது. அதன் பிறகு பல கிளை நதிகள் அதில் கலக்கிறது. இமயமலையில் உள்ள நீர் ஊற்றுகளில் இருந்தும் பனிப்பாறைகள் உருகியும் வெள்ளமாக கொட்டுகிறது. கங்கையை இந்துக்கள் புனிதமாக கருதுகிறார்கள். கங்கையில் புனித நீராடினால் பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது. கங்கை நதியானது உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காள மாநிலங்கள் வழியாக கடலில் கலக்கிறது. இதன் மொத்த நீளம் 2,500 கி.மீ. ஆகும். நோபளத்தில் உற்பத்தியாகும் கோசி நதியும் பீகார் வழியாக கங்கையில் கலக்கிறது. கடலில் கலக்கும் போது கங்கை உப நதிகளாக பிரிந்து வங்காள தேசத்தின் வழியாகவும் ஊடுருவி செல்கிறது.புனித நதியான கங்கை மிகவும் மாசுபட்டு வருகிறது.

அதுவும் சமீப காலத்தில் கங்கையின் மாசு அபாயகரமான அளவை தாண்டி விட்டதாக சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.கங்கையை தூய்மைப்படுத்தும் பணியில் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டன. என்றாலும் பலன் இல்லை. பாராளுமன்ற தேர்தலின் போது உத்தரப்பிரதேசத்தில் கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தை பா.ஜனதா தனது முக்கிய தேர்தல் வாக்குறுதியாக அளித்தது.கங்கை நதிக்கரையில் உள்ள புனித நகரமாக போற்றப்படும் வாரணாசியில் பிரதமர் மோடி போட்டியிட்டார். தனது தேர்தல் பிரசாரத்தின் போது கங்கையை தூய்மைப்படுத்துவேன் என்று பிரசாரம் செய்தார். தேர்தலில் வெற்றி பெற்றதும் கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு மத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைந்த தனி இலாகாவை உருவாக்கி அதற்கு உமா பாரதியை மந்திரியாக நியமித்தார்.
நீர்வளத்துறை நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு உமாபாரதி தலைமையில் கங்கையை சுத்தப்படுத்தும் திட்டம் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தியது. கங்கை உற்பத்தியாகும் இடத்தில் இருந்து கடலில் கலக்கும் இடம் வரை நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து எங்கெங்கு கழிவுகள் கலக்கிறது. எப்படி மாசு ஏற்படுகிறது. எந்த வகையில் மாசு படுத்தப்படுகிறது என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்தனர்.
ஆய்வு அறிக்கையில் கங்கையில் 144 கழிவு நீர் கால்வாய்கள் கலப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. கங்கையை சுத்தப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் சிபாரிசு செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து பா.ஜனதா அரசு தாக்கல் செய்த முதலாவது மத்திய பட்ஜெட்டில் கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு ரூ.2,040 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்க கங்கை நதி பாயும் 5 மாநில முதல்–மந்திரிகள் கூட்டத்தை பிரதமர் மோடி தனது வீட்டில் இன்று கூட்டினார்.

இதில் கலந்து கொள்ளுமாறு உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காள மாநில முதல்–மந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று முதல்–மந்திரிகளும், அவர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். நீர் வளத்துறை மந்திரி உமா பாரதி மற்றும் நீர்வளத்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கங்கையை சுத்தப்படுத்தும் திட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கங்கையில் கலக்கும் கழிவு நீர் கால்வாய்களை தடுப்பது, சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவுவது, கழிவு குப்பைகள், பிணங்களை வீசுவதை தடுக்க அவற்றுக்கு மாற்று ஏற்பாடு செய்து தருவது பற்றி முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.கங்கை நதி உத்தரப்பிரதேசத்திலும், மேற்கு வங்காளத்திலும் தான் அதிக அளவு மாசு அடைகிறது. எனவே இந்த மாநிலங்களில் செயல்படுத்த வேண்டிய மாற்று ஏற்பாடுகள் பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை 3 கட்டமாக நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி குறுகிய கால திட்டம் (3 ஆண்டுகள்), நடுத்தர கால திட்டம் (5 ஆண்டுகள்), நீண்ட கால திட்டம் (10 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேல்) என 3 கட்டமாக செயல்படுத்தப்படுகிறது.கங்கையை சுத்தப்படுத்த உத்தரவிடக்கோரி 30 ஆண்டுகளுக்கு முன்பே சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 1985–ம் ஆண்டில் இருந்தே சுத்தப்படுத்தும் திட்டம் குறித்து மத்திய அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டன. ஆனால் எந்த திட்டமும் நிறைவேற்றப்பட முடியாமல் தோல்வி அடைந்தன. தற்போது பிரதமர் மோடி அரசு இந்த திட்டத்தை செயல் படுத்துவதில் முனைப்புடன் இறங்கியுள்ளதால் கங்கை படிப்படியாக சுத்தமாகும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி