செய்திகள்,விளையாட்டு 2வது அரையிறுதியில் ஆஸ்திரேலியா 328 ரன்கள் குவிப்பு!…

2வது அரையிறுதியில் ஆஸ்திரேலியா 328 ரன்கள் குவிப்பு!…

2வது அரையிறுதியில் ஆஸ்திரேலியா 328 ரன்கள் குவிப்பு!… post thumbnail image
சிட்னி:-இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது அரையிறுதி போட்டி இன்று சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக பிஞ்ச்சும், வார்னரும் களமிறங்கினர். ஆட்டத்தின் 4வது ஓவரின் முதல் பந்தில் வார்னர் 12 ரன்னில் அவுட்டானார். அதன் பின் களமிறங்கிய ஸ்மித் அதிரடியாக விளையாட மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிஞ்ச் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 19வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 100 ரன்களை எட்டியது. அதே ஓவரில் ஸ்மித்தும் தனது அரை சதத்தை கடந்தார். தொடர்ந்து ஸ்மித் அதிரடி காட்ட 25 ஓவரின் முடிவில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 132 ஆனது.

27வது ஓவரில் பிஞ்சும் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். அதிரடியை சற்றும் குறைக்காத ஸ்மித் 33வது ஓவரில் பவுண்டரி, சிக்சர், பவுண்டரி என அடித்து 100 ரன்களை எட்டினார்.
அடுத்த சில நிமிடங்களில், உமேஷ் யாதவ் வீசிய 35வது ஓவரின் முதல் பந்தில் 105 ரன்களுக்கு ஸ்மித் அவுட்டாக, அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் முன்னதாக பேட்டிங் செய்ய அனுப்பப்பட்டார். அவரும் அதிரடியாக ஆடி 14 பந்தில் 23 ரன்கள் குவித்து அவுட்டானார்.அடுத்த ஓவரில் பிஞ்சும், உமேஷ் யாதவ் பந்தில் 81 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த கிளார்க் அதிரடியாக ஆட முற்பட்டு 10 ரன்களுக்கு அவுட்டானார். அதன் பின் வந்த வீரர்கள் அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். 12 பந்தில் 21 ரன்கள் எடுத்து உமேஷ் யாதவ் பந்தில் பால்க்னர் அவுட்டாகி வெளியேற, அடுத்த ஓவரில் வாட்சனும் 28 ரன்களுக்கு அவுட்டானார்.

பின்னர் களமிறங்கிய ஜான்சன் 49வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை அடித்து அசத்தினார். தொடர்ந்து 50வது ஓவரிலும் பவுண்டரி மற்றும் சிக்சரை விளாசிய ஜான்சன் அணியின் ஸ்கோர் 328 ஆக உயர வழிவகை செய்தார். 9 பந்துகளை மட்டுமே சந்தித்து 27 ரன்களை குவித்த ஜான்சனும், ஹாடின் 7 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். வெற்றிக்கு 329 ரன்கள் தேவை என்ற இலக்குடன் இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி