செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு 23 ஆண்டு பெருமையை தக்க வைக்குமா இந்தியா!…

23 ஆண்டு பெருமையை தக்க வைக்குமா இந்தியா!…

23 ஆண்டு பெருமையை தக்க வைக்குமா இந்தியா!… post thumbnail image
சிட்னி:-உலக கோப்பை கிரிக்கெட்டில் கடந்த 23 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவுக்கு நிகராக ஆசிய அணிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 1992-ம் ஆண்டு உலக கோப்பையில் இருந்து ஏதாவது ஒரு ஆசிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி கொண்டு இருக்கின்றன. 1992-ம் ஆண்டு உலக கோப்பையை ஆசிய அணியான பாகிஸ்தானும், 1996-ம் ஆண்டு உலக கோப்பையை இன்னொரு ஆசிய அணியான இலங்கையும் கைப்பற்றின.

இதன் பிறகு 1999-ம் ஆண்டு பாகிஸ்தான், 2003-ம் ஆண்டு ஆசிய ஜாம்பவான் இந்தியா, 2007-ம் ஆண்டு இலங்கை ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று போனது. 2011-ம் ஆண்டு உலக கோப்பையில் இந்தியாவும், இலங்கையும் இறுதிப்போட்டியில் மோதின. உலக கோப்பையில் இரு ஆசிய அணிகள் இறுதிச்சுற்றில் சந்தித்தது அதுவே முதல் முறையாகும். இதில் இந்தியா மகுடம் சூடியது. நடப்பு உலக கோப்பை திருவிழாவில் பிரதான ஆசிய அணிகளில் இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் கால்இறுதியுடன் மூட்டையை கட்டி விட்டன. இப்போது ஆசிய அணிகளில் இந்தியா மட்டுமே எஞ்சி இருக்கிறது. சிட்னியில் நாளை (வியாழக் கிழமை) நடக்கும் அரைஇறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியாவுடன் யுத்தம் நடத்துகிறது.

இதில் இந்தியா வெற்றி பெற்றால், 23 ஆண்டுகளாக ஏதாவது ஒரு ஆசிய அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் சிறப்பை தக்க வைத்துக் கொள்ளலாம். இதனால் இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் பல மடங்கு எகிறியுள்ளது. இதற்கிடையே, இந்த அரைஇறுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது.துறைமுக நகரான சிட்னியில் நேற்று மழை கொட்டியது. இன்றும் பிற்பகலில் மழை பெய்யக்கூடும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போட்டி நாளன்று மழை வாய்ப்பு குறைவு தான். 10 சதவீதம் மட்டுமே நிலவுகிறது. ஆனாலும் முந்தைய நாள் மழையால் பிட்ச்சின் தன்மை மாறக்கூடும். மழை மிரட்டல் இருந்தாலும் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி