மூச் (2015) திரை விமர்சனம்…

விளம்பரங்கள்

நாயகன் நித்தினின் அண்ணனும், நாயகி மிஷா கோஷலின் அக்காவும் கணவன்-மனைவி. இருவருக்கும் ஒரு பையன் இருக்கிறான். மேலும், மிஷா கோஷலின் அக்கா கர்ப்பமாகவும் இருக்கிறாள். கணவன்-மனைவி இருவரும் தங்கள் குழந்தையுடன் ஒருநாள் காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு மர்ம கும்பல் இவர்களை தாக்குகிறது. இதில், கணவன் மட்டும் இறந்துபோக, மனைவி தன் குழந்தையுடன் தப்பித்து அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு பாழடைந்த வீட்டுக்குள் தஞ்சம் அடைகிறாள். அங்கிருந்து தன்னால் தப்பிக்க முடியாது என்று நினைக்கும் அவள், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறாள். தற்கொலைக்கு முயற்சிக்கும் வேளையில், ஏதோ ஒரு சக்தி இவளை தாக்கி கீழே தள்ளுகிறது.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவள் கீழே விழுந்தவுடன் அழகான பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் அவள் இறந்துபோகிறாள். அனாதையாக கிடக்கும் இரண்டு குழந்தைகளையும், அந்த வீட்டில் நீண்டகாலமாக குடியிருக்கும் பேய் ஒன்று அரவணைத்து வளர்த்து வருகிறது.கிட்டத்தட்ட 5 வருடங்களாக அதே வீட்டில் இரண்டு குழந்தைகளும் வளர்கிறார்கள். 5 வருடங்கள் கழித்து நாயகன் நிதினுக்கு அண்ணன் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் தெரிய வருகிறது. இதற்கிடையில், தனது அண்ணனின் குழந்தைகளை தேடிக் காட்டுக்குள் சென்றவர்கள், குழந்தைகள் இருக்கும் பாழடைந்த வீட்டுக்குள் சென்று, குழந்தைகளை மீட்டு நாயகனிடம் ஒப்படைக்கிறார்கள்.

முதலில் இவர்களை பார்த்து மிரளும் குழந்தைகளுக்கு ஒவ்வொன்றாக புரிய வைக்கிறார்கள் நாயகனும், நாயகியும். இதன்பிறகு, குழந்தைகள் இவர்களுடன் அன்பாக பழக ஆரம்பிக்கிறார்கள்.இதற்குள், தனது வீட்டில் வளர்ந்த குழந்தைகளை காணாமல் பேய் பரிதவிக்கிறது. ஒருகட்டத்தில் குழந்தைகள் எங்கிருக்கிறார்கள் என்பது அந்த பேய்க்கு தெரிந்து விடுகிறது.குழந்தைகள் இருக்கும் இடத்தை தேடிப்போய் அவர்களுடன் சேர்ந்து மீண்டும் பழக ஆரம்பிக்கிறது. ஆனால், குழந்தைகள் பேயிடம் நெருங்க மறுக்கிறார்கள். இது பேய்க்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.தன்னை விடுத்து மனிதர்களிடம் அவர்கள் பாசம் காட்டுகிறார்களே என்று விரக்தியடைகிறது. இதனால், அவர்களிடமிருந்து குழந்தைகளை பிரிக்க நினைக்கிறது. இறுதியில் பேயின் பாசம் வென்றதா? நாயகன் தனது அண்ணனின் சாவுக்கு காரணமானவர்களை நாயகன் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

நாயகி மிஷா கோஷலை தவிர்த்து இப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகங்களே. எல்லோரும் நாடகத்தனமாகவே நடித்திருக்கிறார்கள். மனோதத்துவ டாக்டராக வரும் பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜூக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு ரொம்பவும் குறைவே. குழந்தைகளாக வரும் அபி, தியா இருவருக்கும் பெரிதாக வசனங்கள் இல்லாவிட்டாலும், பார்வையிலேயே நிறைய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இயக்குனர் வினு பாரதி, ஒரு திகில் படத்தை கொடுக்க முயற்சி செய்துள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். படத்தில் வசனங்கள் குறைவாக இருந்தாலும், பெரும்பாலான காட்சிகள் ஏதோ சீரியல் பார்ப்பது போன்ற உணர்வை கொடுத்திருப்பது படத்திற்கு பெரிய பலவீனம். நிதின் கார்த்திக் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் திகிலை ஏற்படுத்தவில்லை. வெங்கடேஷ் ஒளிப்பதிவு பரவாயில்லை.

மொத்தத்தில் ‘மூச்’ உயிர் இல்லை………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: