செய்திகள் 10–ம் வகுப்பு தேர்வில் முறைகேடு: 760 மாணவர்கள் நீக்கம்- 8 போலீசார் கைது!…

10–ம் வகுப்பு தேர்வில் முறைகேடு: 760 மாணவர்கள் நீக்கம்- 8 போலீசார் கைது!…

10–ம் வகுப்பு தேர்வில் முறைகேடு: 760 மாணவர்கள் நீக்கம்- 8 போலீசார் கைது!… post thumbnail image
பாட்னா:-பீகாரில் மாநிலத்தில் 10–ம் வகுப்பு மெட்ரிகுலேசன் தேர்வுகள் நடந்து வருகிறது. 1,217 மையங்களில் 14.26 லட்சம் மாணவ – மாணவிகள் தேர்வு எழுதி வருகிறார்கள். கடந்த 19–ந் தேதி வைஷாலி மாவட்டத்தில் 4 மாடிகள் கொண்ட ஒரு தேர்வு மையத்தில் மாணவர்கள் பிட் அடித்து தேர்வு எழுத பெற்றோர்கள் பள்ளி கட்டிடத்தின் மீது ஏறி ஜன்னல் வழியாக துண்டு சீட்டுகளை வீசினார்கள். இந்த முறைகேடு தொடர்பாக வீடியோ மற்றும் போட்டோ, ஆதாரங்கள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தேர்வு முறைகேடுக்கு முதல் – மந்திரி நிதிஷ்குமார் கண்டனம் தெரிவித்தார். முறைகேடு செய்து மாணவர்கள் ஒரு போதும் முன்னேற முடியாது. திறமையால் மட்டுமே முன்னேற முடியும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்காக முறைகேட்டில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் இந்த சம்பவம் மாநிலத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தி உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் முறைகேடில் ஈடுபட்ட மாணவர்கள், உதவிய பெற்றோர் மற்றும் போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நிதிஷ்குமார் உத்தரவிட்டார். முன்னதாக நிதிஷ்குமார், கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தர விட்டார். இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளியில் தேர்வு எழுதிய 500 மாணவர்கள் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு உதவியதாக பெற்றோர்கள் 7 பேரும், பெற்றோர்களை பள்ளிக்குள் செல்ல அனுமதித்து உடந்தையாக செயல்பட்ட 8 போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து 2 நாட்களாக கல்வித்துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் தேர்வு மையங்களில் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது முறைகேடு செய்து தேர்வு எழுதிய 260 மாணவர்கள் பிடிபட்டனர். அவர்களும் நீக்கப்பட்டனர்.இதற்கிடையே மாநில கல்வித்துறை மந்திரி பி.கே.ஷாஹி கூறுகையில், பீகாரில் வைஷாலி மாவட்டத்தில் மட்டும் அல்ல, மாநிலம் முழுவதும் இதே நிலைதான். முறைகேடு நடப்பது தெரிந்தும் அதிகாரிகளால் அதை தடுக்க முடியவில்லை. பெற்றோர் ஒத்துழைப்பு இல்லாமல் நேர்மையான தேர்வு நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. எனவே காப்பி அடிக்க உதவுவதை பெற்றோர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.மந்திரியின் விளக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்னா ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் ஒருவர் பொது நலன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட கோர்ட்டு, மந்திரியின் பதில் வெட்கக் கேடனாது, அதிருப்தி அளிக்கிறது. மாநிலத்தில் தேர்வு நேர்மையாக நடக்க போலீஸ் டி.ஜி.பி. பி.கே.தாகூர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை 27–ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம் மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி