செய்திகள்,திரையுலகம் பிரபல தமிழ் நடிகர்களின் அதிர்ச்சி தோல்விகள் – ஒரு பார்வை…

பிரபல தமிழ் நடிகர்களின் அதிர்ச்சி தோல்விகள் – ஒரு பார்வை…

பிரபல தமிழ் நடிகர்களின் அதிர்ச்சி தோல்விகள் – ஒரு பார்வை… post thumbnail image
வாழ்க்கையில் அனைவருக்குமே வெற்றியை மட்டுமே நினைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசைதான் மேலோங்கி இருக்கும். தோல்விகளைப் பற்றிப் பேசக் கூட மாட்டார்கள். வெற்றி பெறுவதற்கு எதையாவது ஒரு காரணத்தை சொல்லி விடுவார்கள். ஆனால், தோல்வி எதனால் ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து கூடப் பார்க்க மாட்டார்கள். அதற்கு பல விஷயங்களை காரணமாகச் சொல்லி தப்பித்து விடுவார்கள். திரையுலகத்தைப் பொறுத்தவரையில் ஒரு இயக்குனருக்கோ, நடிகருக்கோ, நடிகைக்கோ வெற்றியும், தோல்வியும் வழக்கமான விஷயம்தான். அவர்கள் ஒரு தோல்வியில் இருந்து கூட எழுந்து விடுவார்கள். ஆனால், அந்தப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் சமயங்களில் எழாமலே போய் விடுவார். அதிலும் அவர் முதல் படத் தயாரிப்பாளராக இருந்தால் கேட்கவே வேண்டாம். அதன் பிறகு இந்தப் பக்கமே தலை வைத்துக் கூடப் படுக்க மாட்டார்.

சினிமாவில் மட்டும் வெற்றி பெற்றால் அதற்கு சொந்தம் கொண்டாட பலர் முன் வருவார்கள். ஆனால், தோல்வி ஏற்பட்டு விட்டால் அதை பலர் மீது சுமத்த தயாராக இருப்பார்கள். பெரும்பாலும் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது இயக்குராகத்தான் இருப்பார்கள். அடுத்து அந்தப் படத்தின் நாயகி கொஞ்சம் பாதிக்கப்படுவார். அவரை ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தி விடுவார்கள். தப்பித் தவறிக் வட அந்தப் படத்தின் கதை காரணம், நாயகனும் காரணம் என்று கூட சொல்ல மாட்டார்கள். பல வருடங்கள் கழித்த பிறகு வேண்டுமானால் தோல்வியை ஒப்புக் கொள்வார்களே தவிர, படம் வெளியான சில நாட்களில் அது தோல்விப் படம்தான் என்பதை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.

இன்றும் மாபெரும் தோல்வியடைந்த பல படங்கள் ஏதோ ஒரே ஒரு தியேட்டரில் ஒரே ஒரு காட்சி ஓடிக் கொண்டிருந்தால் கூட மாபெரும் வெற்றி என கொஞ்சம் கூட கூச்சமேயில்லாமல் விளம்பரம் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அதற்கு சமீபத்தில் வெளிவந்த லிங்கா படத்தையே உதாரணமாகச் சொல்லலாம். இப்படி சமீப காலங்களில் நமது முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளியீட்டிற்கு முன் பிரமாதமாகப் பேசப்பட்ட படங்கள், வெளியானதுமே பிளாப் படங்களின் வரிசையில் இடம் பெற்றுவிட்ட சில படங்களின் தோல்வியை அந்த நடிகர்கள் மறந்தாலும் நாம் மறக்க முடியாதல்லவா. ரஜினிகாந்திலிருந்து விஜய் சேதுபதி வரை தோல்வியால் பாதிக்காத எந்த ஹீரோவுமேயில்லை.

ரஜினிகாந்த் – லிங்கா :- ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே மாபெரும் தோல்விப் படமாக பார்க்கப்பட்டது பாபா படம்தான். ஆனால், அந்த தோல்வியையே மறக்க வைக்கக் கூடிய அளவிற்கு மிகப் பெரும் தோல்விப் படமாக அமைந்தது லிங்கா. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ரஜினிகாந்த் கூட்டணியில் மாபெரும் சாதனை படைத்த முத்து, படையப்பா, படங்களைப் போன்று லிங்கா படமும் மாபெரும் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், படம் வெளியான நான்கு நாட்களிலேயே 2014ம் ஆண்டின் மாபெரும் ஃபிளாப் படம் என்று அந்தப் படத்தை வெளியிட்டவர்களாலேயே அறிவிக்கப்பட்டு அதிர்ச்சியடைய வைத்தது.

கமல்ஹாசன் – மன்மதன் அம்பு :- கமல்ஹாசன், எத்தனையோ பிரமாதமான படங்களையும் கொடுத்திருக்கிறார். எத்தனையோ கமர்ஷியலான வெற்றிப் படங்களையும் கொடுத்திருக்கிறார். ஆனாலும், அவரிடமிருந்து திடீரென சூப்பர் பிளாப் படங்களும் வெளிவருவதும்தான் ஆச்சரியமான விஷயமாக இருக்கும். அன்பே சிவம் போன்ற படங்கள் வெளிவந்த போது கமர்ஷியலாக வெற்றி பெறவில்லை என்றாலும், அதன் பின் தொலைக்காட்சியில் பல முறை ஒளிபரப்பப்பட்டு, அட, என்ன ஒரு அருமையான படத்தை எடுத்திருக்கிறார்கள் பாராட்ட வைத்துள்ளது. அப்படி ஒரு பாராட்டைப் பெற முடியாத ஒரு படமாக கமல்ஹாசன் நடித்து அமைந்த படம் மன்மதன் அம்பு. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் பெரும்பாலும் வெளிநாட்டிலேயே எடுக்கப்பட்டது. படம் முழுவதும் ஒருவர் மாற்றி ஒரு பேசிக் கொண்டேயிருந்ததுதான் இந்தப் படத்தின் தோல்வியைப் பற்றியும் பேச வைத்தது.

விஜய் – தலைவா :- தோல்வியிலிருந்து ஒரு முன்னணி ஹீரோ எழுந்து வருவது சாதாரண விஷயமல்ல. விஜய்க்கு அப்படி சில முறை நடந்துள்ளது. 90களில் கூட தொடர்ச்சியாக ஐந்தாறு தோல்விப் படங்களைக் கொடுத்தவர். அதிலிருந்தும் மீண்டு அதன் பின் பாக்ஸ் ஆபீஸ் ஹீரோவாக உயர்ந்து இன்று வசூல் மன்னனாகத் திகழ்கிறார். துப்பாக்கி என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த பின் தலைவா படம் மூலம் மீண்டும் ஒரு சூப்பர் ஹிட்டைக் கொடுப்பார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், நாயகன் படத்தின் அப்பட்டமான காப்பியாக வந்த தலைவா படம் வெளியீட்டிலேயே தடுமாறிவிட்டது. இருந்தாலும் சொன்ன தேதியில் படத்தை வெளியிட முடியாததை ஒரு காரணமாகச் சொல்லி தோல்வியிலிருந்து தப்பித்துக் கொண்டார்கள்.

அஜித் – பில்லா 2 :- தான் நடித்த படங்களில் பல தோல்விகளைக் கொடுத்தாலும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ள ஒரே ஹீரோ என்றால் அது அஜித் மட்டுமே. ஒரு ஹிட் படம் கொடுத்தால் தொடர்ந்து மூன்று, நான்கு தோல்விப் படங்களைக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருப்பவர் அஜித். எந்த அடிப்படையில் படங்களைத் தேர்வு செய்கிறார், எப்படி கதைகளைக் கேட்கிறார் என அவருடைய ரசிகர்களே கேள்விகளை எழுப்பும் அளவிற்கு படங்களைத் தேர்வு செய்வார். மங்காத்தா படத்திற்குப் பிறகு இன்னும் பிரம்மாண்டமான ஒரு வெற்றியை அஜித் தரவேயில்லை. அதிலும் அந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு பில்லா 2 என்ற படு மோசமான படத்தில் அஜித் எப்படித்தான் நடக்க சம்மதித்தாரோ என்று இன்று வரை அவருடைய ரசிகர்களே குழம்பிப் போயிருக்கிறார்கள்.

விக்ரம் – ராஜபாட்டை :- விக்ரம் என்றால் வித்தியாசமான ஒரு நடிகர் என்ற பெயரை வாங்கியவர். சேதுவில் தொடங்கி ஐ வரை விதவிதமான கதாபாத்திரங்களில், நடிப்புக்காகத் தன்னையும் உருக்கிக் கொள்ளத் தயங்காதவர். அவருக்கும் நடுநடுவே விஜய், அஜித் போல் ஒரு பக்கா கமர்ஷியல் படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை வரும். அந்த ஆசையின் விளைவாக வந்த படம்தான் ராஜபாட்டை. இப்படியெல்லாம் கூடவா ஒரு படத்தை எடுப்பார்கள் என்பது அந்தப் படத்தை இயக்கிய சுசீந்திரனைப் பார்த்துத்தான் அதிகம் கேட்க வேண்டும். ஒரு பெரிய ஹீரோ கிடைத்தால் அவரை வைத்து எப்படிப்பட்ட படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதைக் கூட முடிவெடுக்க முடியாமல் போனால் என்னவென்று சொல்வது. விக்ரமின் நடிப்புச் சாதனைகளைப் பற்றி எவ்வளவு பேசினாலும் அவருடைய திரையுலக வாழ்க்கையில் ராஜபாட்டை நிச்சயம் ஒரு பெரிய கரும்புள்ளியாகவே இருக்கும்.

சூர்யா – அஞ்சான் :- ஒரு படத்தை வெளியிடுவதற்கு முன் அது பற்றிய எதிர்பார்ப்பை ஓவராகவே செய்த படங்களில் இதுவும் ஒன்று. 20 லட்சம் ஹிட்ஸ், இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படமும் வந்ததில்லை என்று சொல்லி இயக்குனர் லிங்குசாமி மொத்த வித்தையையும் இறக்கிய ஒரு படம். வெளியான அன்றே, டிசாஸ்டர் என்று சொல்லப்பட்ட படம். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தை அப்படி, இப்படி என மாற்றி ஒரு படமாகக் கொடுத்து ரசிகர்களை ஏமாற்ற நினைத்தவர்களுக்கு ரசிகர்கள் தந்த மிகப் பெரிய பாடம் அஞ்சான். படம் வெளியாவதற்கு முன் இயக்குனர் லிங்குசாமியும், சூர்யாவும் இந்தப் படத்தைப் பற்றிப் பேசிய பேச்சுக்களே படத்தின் மாபெரும் தோல்விக்குக் காரணமாக அமைந்தன.

தனுஷ் – நய்யாண்டி :- தேசிய விருது பெற்ற ஒரு நடிகர் அடுத்தடுத்து நடிக்கும் படங்களில் கொஞ்சமாவது தரம் இருக்க வேண்டும். அதிலும் வாகை சூடவா படத்திற்காக தேசிய விருது பெற்ற ஒரு இயக்குனரான சற்குணத்துடன், தேசிய விருது பெற்ற தனுஷ் இணையும் படம் என்றால் எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், அத்தனை பேர் எதிர்பார்ப்பிலும் மண்ணைத் தூவிய படமல்லவா நய்யாண்டி. இத்தனைக்கும் இந்தப் படம் 1993ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படமான மேலப்பரம்பில் ஆண்வீடு என்ற படத்தின் தழுவலாக உருவாக்கப்பட்டது. எந்த ஒரு திருப்பமும் இல்லாத சாதாரண திரைக்கதை, நகைச்சுவை என்ற பெயரில் சாதாரண நகைச்சுவை வசனங்கள் படத்தின் தோல்விக்குக் காரணமாக அமைந்தன. தேசிய விருது பெற்ற இருவரின் கூட்டணியில் வெளிவந்த ஒரு மோசமான திரைப்படம்.

கார்த்தி – ஆல் இன் ஆல் அழகுராஜா :- மெட்ராஸ் படத்திற்கு முன் கார்த்தி நடித்து வெளிவந்த பிரியாணி, ஆல் இன் ஆல் அழகுராஜா, அலெக்ஸ் பாண்டியன், சகுனி ஆகிய அனைத்துமே மாபெரும் தோல்விப் படங்கள்தான். இருந்தாலும் அதில் மிகவும் மோசமான தோல்வியைத் தழுவிய படம் என்றால் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தைச் சொல்லலாம். ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி இணைந்த படம் என்பதால் நிறையவே எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கலகலப்பான நகைச்சுவைப் படங்களைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்த ராஜேஷிடமிருந்து இப்படி ஒரு படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. ஒரு அமெச்சூரான திரைப்படமாகவே ஆல் இன் ஆல் அழகுராஜா படம் அமைந்தது. வெறும் நகைச்சுவை வசனங்கள் மட்டுமே படத்தின் வெற்றிக்குக் காரணமல்ல, கொஞ்சமாவது கதை இருக்க வேண்டும் என்று ராஜேஷுக்கு ரசிகர்கள் உணர்த்திய படம்.

இப்போதைய சூழ்நிலையில் மேலே சொன்ன நடிகர்கள்தான் கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்கள். தமிழ் நடிகர்களில் தற்போதைக்கு முதல் தர வரிசையில் இருக்கும் நடிகர்களாக அவர்களைச் சொல்லலாம். இருந்தாலும் மற்ற நடிகர்களின் முக்கிய தோல்விப் படங்களையும் பட்டியலிட்டால், அது கூடிக் கொண்டே போகுமே தவிர குறையாது.

ஆர்யாவுக்கு இரண்டாம் உலகம், விஷாலுக்கு பட்டத்து யானை, ஜீவாவுக்கு யான், சித்தார்த்துக்கு காவியத் தலைவன், சிம்புவுக்கு போடா போடி என மற்றவர்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம். தோல்விகளை வெற்றிப் படிக்கட்டுக்களாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். அப்படி மாற்றிக் கொள்பவர்கள் மட்டுமே தொடர்ந்து மேலே ஏறிக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் வெற்றியையும் தோல்வியையும் பிரிக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அதே போல் தோல்வியிலிருந்து மீளவும் முடியும் என்பதும் உண்மை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி