இரவும் பகலும் வரும் (2015) திரை விமர்சனம்…

விளம்பரங்கள்

நாயகன் மகேஷ் சிறுவனாக இருக்கும்போதே அவனது அம்மா இறந்துபோகிறார். இதனால், அவரது அப்பா இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். மகேஷுக்கு சித்தியாக வருபவள் அவன் மீது மிகுந்த பாசம் காட்டுவதில்லை. இதனால் தன் மீது பாசம் காட்டும் அனன்யா மீது இவருக்கு காதல் வருகிறது. மகேஷ் செய்யாத ஒரு குற்றத்துக்காக ஒருநாள் இவரது சித்தி, அவனை வீட்டை விட்டு விரட்டுகிறாள். விரக்தியில் வீட்டை விட்டு வெளியேறும் மகேஷ், பணத்துக்காக பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருடி வருகிறார். இந்நிலையில், நடுத்தர மக்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் மேஜிக் ஷோ நடத்தி, மக்களின் கவனத்தை திசை திருப்பி ஒரு கும்பல் திருடி வருகிறது. இந்த கும்பலுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டரான வெங்கடேசின் ஆதரவு இருக்கிறது.

நடுத்தர மக்களின் வீடுகளில் திருடினால், அவர்கள் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை மட்டும் கொடுத்துவிட்டு, அதை மறந்துவிடுவார்கள். பெரிதாக ஒன்றும் அழுத்தம் கொடுக்கமாட்டார்கள் என்பதால் இந்த கும்பல் நடுத்தர குடும்பங்களை மட்டும் குறிவைத்து கொள்ளையடிக்கிறது. ஒருநாள் இந்த திருட்டு கும்பல் திருடும் இடத்தில் நாயகன் மகேஷும் திருடுகிறார். அப்போது, அவர்களிடம் மாட்டிக்கொளும் மகேஷையும், அவர்கள் தங்கள் கும்பலுடன் சேர்த்துக் கொள்கிறார்கள்.இந்நிலையில், நாயகன் நட்போடு பழகி வரும் யுவராணியை, அந்த திருட்டுக் கும்பல் பைக்கில் வந்து செயினை அறுக்கிறது. அந்த சம்பவத்தில் யுவராணி இறந்து போகிறார். யுவராணி தான் காதலிக்கும் பெண்ணான அனன்யாவின் அண்ணி என்பதை நாயகன் அறிகிறார். இதனால் மிகவும் மனம் நொந்து போகிறார். எனவே, திருட்டுக்கூட்டத்தில் இருந்தபடியே அவர்களை எப்படி மாட்டிவிடுவது என்று திட்டமிடுகிறார். இதற்கு, அனன்யாவும் உறுதுணையாக இருக்கிறார். அதுபோல், கொள்ளை கும்பல் திட்டமிடும் இடங்களுக்கு முன்கூட்டியே தகவல் அனுப்பி, அங்குள்ள மக்களை விழிப்புணர்வுடன் இருக்க வைத்து கொள்ளையர்களுக்கு தர்ம அடி வாங்கிக் கொடுக்கிறார் மகேஷ்.

இதற்கெல்லாம் மகேஷும், அனன்யாவும்தான் காரணம் என்பது ஒருகட்டத்தில் இன்ஸ்பெக்டரான வெங்கடேஷுக்கு தெரிய வருகிறது. இருவரையும் கொலை செய்ய திட்டமிடுகிறார். இறுதியில், மகேஷும், அனன்யாவும் இணைந்து கொள்ளை கும்பலை போலீசிடம் மாட்டிவிட்டார்களா? அல்லது வெங்கேடஷ் கும்பலால் இருவரும் கொலை செய்யப்பட்டார்களா? என்பதே மீதிக்கதை.
நாயகன் மகேஷ் நடுத்தர வர்க்கத்து இளைஞன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஆனால், காட்சிக்கு ஏற்றவாறு பொறுத்தமான முகபாவணையுடன் நடிக்க ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார். அனன்யா ஆரம்பத்தில் ரொம்பவும் அமைதியான முகத்துடன் வலம்வந்தாலும், பிற்பாதியில் இது அனன்யாவா? என்று மிரட்டவைக்கிறார். மகேஷின் நண்பராக வரும் ஜெகனின் நடிப்பும் அற்புதம்.
மகேஷின் சித்தியாக வருபவர் ரொம்பவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வில்லனாகவும், இன்ஸ்பெக்டராகவும் வரும் வெங்கேடஷ் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். கடைசி காட்சியில் நகைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு இவர் ஆடும் ஆட்டத்தை மட்டும் கொஞ்சம் தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நடுத்தர வர்க்கத்தின் இயலாமை காரணமாக அவர்களை குறிவைத்து திருடும் கூட்டங்கள் இருக்கிறது என்பதை படத்தில் ரொம்பவும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். உங்கள் வீட்டு நகையும் இப்படி திருடுபோகலாம். அதனால் உஷாராக இருங்கள் என்ற ஒரு மெசேஜை படத்தில் சொல்லியதற்காக பாராட்டலாம். மற்றபடி, திரைக்கதையில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கின்றன. ஆங்காங்கே கதையின் சுவாரஸ்யம் குறைவது படத்திற்கு பின்னடைவுதான். தினாவின் இசையும், கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவும் சுமார் ரகம் தான்.

மொத்தத்தில் ‘இரவும் பகலும் வரும்’ வராது………….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: