அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு!…

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு!…

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பான சி.பி.ஐ. வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. தரப்பிலான 153 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. அதில் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி, பெரு நிறுவனங்களின் தரகர் நீரா ராடியா, அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி உள்ளிட்டோர் பங்கேற்று அளித்த சாட்சியங்கள் 4,400 பக்கங்களில் பதிவு செய்யப்பட்டன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி. யின் முன்னாள் இயக்குனர் சரத்குமார் உள்ளிட்ட 29 பேரின் சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டன.

அமலாக்கப்பிரிவின் துணை இயக்குனர் ராஜேஷ்வர்சிங், உதவி இயக்குனர் சத்யேந்திரசிங், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் அதிகாரி நவில்கபூர், வங்கி அதிகாரி டி.மணி மற்றும் கலைஞர் டி.வி.யின் பொது மேலாளர் (நிதி) ஆகியோரிடம் மேலும் விசாரணை நடத்த சி.பி.ஐ. தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 19 பேர் மீதும் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கில் அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாகவும், அந்த வழக்கின் மீதான விசாரணையில் இந்த மூலவழக்கு தொடர்பான வேறு சில புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஓ.பி.சைனி கூடுதலாக மேற்குறிப்பிட்ட 5 பேரை கூடுதல் சாட்சியங்களாக விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார். பின்னர் அந்த ஐவரில் அமலாக்கப்பிரிவின் துணை இயக் குனர் ராஜேஷ்வர்சிங், உதவி இயக்குனர் சத்யேந்திரசிங் ஆகியோர் விடுவிக்கப்பட்டு மீதி 3 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த சாட்சியங்களின் பதிவு பிப்ரவரி 25-ந் தேதி முடிவடைந்தது. மொத்தம் 157 சாட்சியங்களின் விசாரணை முடிவுற்றது.

இந்நிலையில் நேற்று ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் ஆஜரானார்கள். அவர்கள் அனைவரின் வாக்குமூலங்களும் நேற்று எழுத்து வடிவில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் இறுதி விசாரணையை மே மாதம் தொடங்கலாம் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் நீதிபதி இறுதி விசாரணையை ஏப்ரல் மாதத்தில் தொடங்க உத்தரவிட்டார். இதற்கிடையில் கனிமொழி எம்.பி., தான் கலைஞர் டி.வி.யின் இயக்குனர் பதவியை ராஜினாமா செய்வதாக அனுப்பிய கடிதத்தின் நகலை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறைக்கு அனுப்பியதாகவும், அந்த ஆவணம் இந்த வழக்கு விசாரணையின் போது தாக்கல் செய்யப்படவில்லை என்றும், அதனை தாக்கல் செய்ய உத்தரவிடவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அதிகாரி நவில்கபூர் இந்த ஆவணத்தை மார்ச் 16-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். வழக்கின் மீதான விசாரணையையும் 16-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி